Published:Updated:

`அதிகமா கேக்குறாங்க; ஒரு கிலோ நகையைக் கணக்கில் காட்டவில்லை!' - போலீஸாரைக் கைகாட்டும் சுரேஷ்

லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகையில் ஒரு கிலோ தங்கத்தை போலீஸார் எடுத்துக்கொண்டதாகக் கொள்ளையன் முருகனின் மைத்துனர் சுரேஷ் குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சுரேஷ்
சுரேஷ்

கடந்த அக்டோபர் மாதம் 2-ம் தேதி, திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடையில், 28 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.  இந்தவழக்கில், தொடர்புடைய இரண்டு பேர் திருவாரூரில் பிடிபட்டனர். அப்போதுதான், தப்பியோடியவர் சுரேஷ் என்பதும், நடந்த கொள்ளைச் சம்பவங்களில் திருவாரூர் முருகன் எனும் கொள்ளையன் மூளையாகச் செயல்பட்டதும் தெரியவந்தது.

``மாட்டாமல் இருந்திருந்தால் தமிழின் சிறந்த படத்தைத் தயாரித்திருப்பேன்'' - திருவாரூர் முருகன் பகீர்!

அவர்களிடமிருந்து 4.5 கிலோ நகைகளைக் கைப்பற்றியதாகக் கணக்குக் காட்டப்பட்டது. தொடர்ந்து, போலீஸார் முருகனின் குடும்பத்தார் மற்றும் உறவினர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வந்தனர். போலீஸாரின் நெருக்கடிகள் கூடவே முருகனின் மைத்துனர் சுரேஷ் மற்றும் திருவாரூர் முருகன் ஆகியோர் நீதிமன்றங்களில் சரணடைந்தனர். இந்த வழக்குகளில் சிக்கிய சுரேஷ் மற்றும் முருகன் ஆகியோரைத் தமிழக போலீஸார் நீதிமன்ற அனுமதியுடன் விசாரணை நடத்தினர்.

திருவாரூர் முருகன்
திருவாரூர் முருகன்

போலீஸார் விசாரணையில் சுரேஷ் மற்றும் முருகன் ஆகியோர் கூறிய தகவல்கள் அதிர்ச்சி ரகம். போலீஸாரிடம் முருகன், " கடந்த 1995-ம் ஆண்டு முதல் திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறேன். சில சம்பவங்களில் சிக்கிக்கொண்டேன்.

`7 நாள் கஸ்டடி; வளைந்து கொடுக்காத முருகன்!' -நகைக்கடை கொள்ளை வழக்கில் திணறும் திருச்சி போலீஸ்

தொடர்ந்து கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பான சினிமாக்களைப் பார்த்து, அதன்மூலம்`போலீஸாரிடம் சிக்கிக்கொள்ளாமல் கொள்ளையடிப்பது எப்படி' என்கிற யுத்திகளைத் தெரிந்துகொண்டேன். எனத் தான் கொள்ளையடித்த சம்பவங்கள் குறித்து விவரித்தவை திகில் ரகங்கள்.

இந்நிலையில், நீதிமன்றங்களில் ஆஜர்படுத்த அழைத்து வரும்போதெல்லாம் சுரேஷ் தொடர்ந்து போலீஸாரை குற்றம்சாட்டிவருகிறார். சில தினங்களுக்கு முன்பு ஶ்ரீரங்கம் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட சுரேஷ் பத்திரிகையாளர்களிடம், ``கொள்ளை வழக்கில் துளியும் தொடர்பில்லாத என் அம்மா, தம்பி உள்ளிட்ட உறவினர்கள் 18 பேரை போலீஸார் கைதுசெய்து சித்ரவதை செய்கிறார்கள். `நீ சரணடைந்தால், உன் உறவினர்களை விடுவிக்கிறோம்' என போலீஸார் சொன்னதை நம்பிச் சரணடைந்தேன். ஆனால், அவர்கள் சொன்னபடி நடக்கவில்லை. உறவினர்களை போலீஸார் விடுவிக்க மறுக்கிறார்கள்” எனக் கதறினார்.

சுரேஷ்
சுரேஷ்

இதனிடையே, பெங்களூரிலிருந்து அழைத்து வரப்பட்ட கொள்ளையன் முருகனை போலீஸார் விசாரித்து வந்தனர். கஸ்டடி அவகாசம் நேற்று மாலையுடன் முடிவடைந்ததால், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதால், காலை முதலே திருச்சி நீதிமன்ற வளாகம் பரபரப்பாக இருந்தது. இந்நிலையில், முருகனின் மைத்துனர் சுரேஷ் திருச்சி இரண்டாவது குற்றவியல் நீதிமன்ற நடுவரிடம் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய சுரேஷ், ``இது முழுக்க முழுக்க பொய் வழக்கு. போலீஸார் நிறைய விஷயங்களை ஜோடித்து வருகிறார்கள். திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை நாங்கள் பிரித்துக் கொண்டோம். அந்த நகையை எடுத்துக்கொண்டு நான் போகும்போது திருவாரூரில் வாகன சோதனை நடத்திய போலீஸாரிடம் சிக்கிக் கொண்டோம்.

அன்று தப்பி ஓடியபோது, கைப்பை ஒன்றை முள்வெளியில் தூக்கிவீசி விட்டுச் சென்றேன். அந்தப் பையில் 5.7 கிலோ தங்க நகைகள் வைத்திருந்தேன். ஆனால், திருவாரூர் போலீஸாரோ 4.7 கிலோ தங்கத்தை மட்டும் கணக்குக் காட்டிவிட்டு, மீதமுள்ள ஒரு கிலோ தங்கத்தை மறைத்துவிட்டார்கள். இதுகுறித்து கேட்டால் பதில் சொல்ல மாட்டேங்குறாங்க. ஆனால், நாங்கள் கொள்ளையடித்த நகையைவிட அதிகமாக நகையைக் கேட்கிறார்கள்.

`3 மாதங்களில் 30 பைக்குகள், 2 கார்கள்; சொகுசு வாழ்க்கை!' - திருச்சி போலீஸை அதிரவைத்த பைக் திருடன்

மேலும், செய்யாத கொள்ளை வழக்குகளில் எங்களைத் தொடர்புபடுத்தி அச்சுறுத்துகிறார்கள். போலீஸார் இதுவரை, என் மீது மட்டும் 16 வழக்குகள் போட்டுள்ளனர். அதில் 6 வழக்குகளில் மட்டுமே நான் சம்பந்தப்பட்டுள்ளேன். மற்ற 10 வழக்குகள் பொய் வழக்குகள்" என்றார். இந்நிலையில், திருவாரூர் முருகன் 2.30 மணியளவில் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது போலீஸார், முருகன் திருவெறும்பூர் பகுதியில் மறைத்து வைத்திருந்தாக 1.5 கிலோ தங்கத்தைக் கைப்பற்றியதாக நீதிமன்றத்தில் கூறினர். அதைத்தொடர்ந்து, நீதிபதி, வரும் 16-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் முருகனை வைக்க உத்தரவிட்டார். அதையடுத்து, முருகன் பெங்களூர் சிறைக்குக் கொண்டு செல்லப்படுகிறார். முன்னதாக முருகன், ``சுரேஷ் சின்னப்பையன், ஆர்வக்கோளாறில் அதிகமாகப் பேசுகிறான். ஆனால், என் உயிரைக் காப்பாற்றியதே போலீஸார்தான்” என்றார்.

லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகையில் ஒரு கிலோ தங்கத்தை போலீஸார் எடுத்துக்கொண்டனர் என்று சுரேஷ் குற்றஞ்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.