Published:Updated:

`3 மாநிலங்களில் கைவரிசை; வங்கிகள்தான் முதல் இலக்கு!' - திருச்சி கொள்ளையில் சிக்கிய கும்பலின் பின்னணி

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு தொடர்பாக போலீஸார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீட்கப்பட்ட தங்க நகைகள்
மீட்கப்பட்ட தங்க நகைகள்

திருச்சி நகைக்கடை கொள்ளை தொடர்பாக திருவாரூரில் சுமார் 4.5 கிலோ நகைகளுடன் மணிகண்டன் என்பவரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். அவருடன் வந்த சுரேஷ் என்பவர் தப்பியோடிய நிலையில், அவரைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருக்கிறார்கள். இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம்.

மணிகண்டன்
மணிகண்டன்

திருச்சி நகைக்கடை கொள்ளையை அடுத்து அண்டை மாவட்டங்களிலும் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், திருவாரூர் விளமல் பாலம் அருகே நகரக் காவல் உதவி ஆய்வாளர் நேரு தலைமையில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அட்டைப்பெட்டியுடன் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை மடக்கியிருக்கிறார்கள். போலீஸைக் கண்டதும் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்தவர் தப்பியோடியிருக்கிறார்.

நகைக்கடை கொள்ளை வழக்கில் திருப்பம்! - திருவாரூரில் நகைகளுடன் சிக்கிய கொள்ளையன்

இதனால், உஷாரான போலீஸார் அந்த இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த மணிகண்டன் என்பவரைப் பிடித்து விசாரித்திருக்கிறார்கள். அந்த அட்டைப்பெட்டியில் புத்தம்புதிய தங்க நகைகள் இருப்பது தெரியவந்திருக்கிறது. அந்த நகைகளில் இருந்த பார்கோடுகள், திருச்சி நகைக்கடையில் கொள்ளைபோன நகைகளின் பார்கோடுகளுடன் ஒத்துப்போனது. இதனால், அவை கொள்ளையடிக்கப்பட்ட நகைகள்தான் என்பதை போலீஸார் உறுதி செய்திருக்கிறார்கள்.

சுரேஷ்
சுரேஷ்

இதையடுத்து, மணிகண்டனை திருவாரூர் நகரக் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியிருக்கிறார்கள். விசாரணையில் தப்பியோடியவர் பெயர் சுரேஷ் என்பதும் அவர் திருவாரூர் பேபி தியேட்டர் சாலையில் வசித்துவருகிறார் என்பதும் தெரியவந்திருக்கிறது. இவர்கள் `திருவாரூர்' முருகன் என்ற பிரபல கொள்ளையனின் உறவினர்கள் என்கிறார்கள். தப்பியோடிய சுரேஷ், முருகனின் சொந்தத் தம்பி என்று சொல்லப்படுகிறது.

ரூ.50 கோடி தங்கம், வைரம்; பொம்மை முகமூடி! - திருச்சியைத் திணறவைத்த அதிகாலை கொள்ளை

திருவாரூர் மாவட்ட எஸ்.பி துரை விடுப்பில் இருந்ததால், ஏ.டி.எஸ்.பி அன்பரசன், நகர டி.எஸ்.பி நடராஜன் ஆகியோர் பிடிபட்ட மணிகண்டனிடம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். அப்போது அவர், ``எனக்கு எதுவும் தெரியாது. சுரேஷ் என் நண்பன். தஞ்சாவூர் வரை போய்ட்டு வருவோம் என்று கூறி என்னை அழைத்துச் சென்றான். அங்கு யாரிடமோ ஒரு பெட்டியை வாங்கி வந்தான். அதில், என்ன இருக்கிறது என்று கூட எனக்குத் தெரியாது.

நகைக்கடை கொள்ளை
நகைக்கடை கொள்ளை

அந்தப் பெட்டியோடு நாங்கள் இங்கு வந்தோம். இப்போது நீங்கள் சொல்லித்தான் அது திருச்சியில் கொள்ளையடிக்கப்பட்ட நகை என்று தெரியும்’’ என்று முதலில் கூறியிருக்கிறார். உரியமுறையில் விசாரிக்கையில் பல உண்மைகள் வெளியில் வரலாம் என்கிறார்கள் போலீஸார். இந்தக் கொள்ளைக்கு மூளையாகச் செயல்பட்டது பிரபல கொள்ளையன் `திருவாரூர்' முருகனாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

யார் இந்த `திருவாரூர்' முருகன்?

ஏடிஎம் மையங்களைக் குறிவைத்து கொள்ளையடிப்பதில் பிரபலமானவர் இந்த திருவாரூர் முருகன். ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர் மீது இருக்கின்றன. சொந்த ஊரை அடைமொழியாக்கி `திருவாரூர்' முருகன் என அழைக்கப்படும் இவர், மற்ற மாநிலங்களில் தேடப்படும் முக்கிய நபர் பட்டியலில் இருப்பவர் என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில். கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் தொடர்ச்சியாக வங்கிக் கொள்ளையில் இவர் ஈடுபட்டிருக்கிறார் என்கிறார்கள். இதனால், சைபராபாத் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின்னர் முருகன் மற்றும் அவரது கூட்டாளியைக் கைது செய்திருக்கிறார்கள்.

`சுவரில் துளை; பலகோடி ரூபாய் நகைகள் மாயம்!' - திருச்சியை அதிர வைத்த கொள்ளை
`திருவாரூர்' முருகன்
`திருவாரூர்' முருகன்

அங்கு பிரபலமான வழக்கறிஞர்களை நியமித்து நீதிமன்றத்தில் தனது ஜாமீனுக்காக முருகன் முயற்சி செய்திருக்கிறார். இதனால், சில மாதங்களிலேயே அவருக்கு ஜாமீன் கிடைத்திருக்கிறது. ஜாமீனில் வந்த முருகன், தலைமறைவாக இருந்து வந்திருக்கிறார். உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து சில மாதங்களாக ஓய்வில் இருந்த முருகனின் பெயர் இந்தக் கொள்ளைச் சம்பவம் மூலம் வெளியே வந்திருக்கிறது. இவர், சென்னையில் முகாமிட்டு தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்தார் என்கிறார்கள்.

இந்த நிலையில்தான் தனது சகாக்கள் மணிகண்டன், கோபால் ஆகியோர் உதவியுடன் திருச்சி லலிதா ஜூவல்லரியில் கொள்ளையை அரங்கேற்றியிருப்பதாகச் சொல்கிறார்கள். தமிழகக் காவல்துறையினர் திருவாரூர் முருகனைத் தனிப்படை அமைத்து, தேடி வருகிறார்கள். கொள்ளை நடந்த 48 மணிநேரத்தில் போலீஸார் கொள்ளைக் கும்பலை நெருங்கியிருக்கிறார்கள். கொள்ளையை அடுத்து திருச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் போலீஸார் சோதனையைத் தீவிரப்படுத்தினர். இதுவே கொள்ளைக் கும்பலை நெருங்கக் காரணம் என்கிறார்கள்.