Published:Updated:

பஞ்சாபில் தமிழ்ப் பெண்களுக்கு பாலியல் தொல்லை; கவனப்படுத்திய விகடன்; உதவிக்கரம் நீட்டிய A.K.S.விஜயன்

Train
News
Train

பஞ்சாப் சென்ற விழுப்புரம் மாவட்ட இளம்பெண்கள் மூவரை, மொழி தெரியாத அந்த மாநிலத்தில், ஒரு பிரச்னையில் சிக்க வைக்கப் பார்த்திருக்கிறார், ̀மிலிட்டரி' வேடமிட்ட ஒரு நயவஞ்சக நபர். அந்த ஆபத்திலிருந்து தப்பிக்க, அப்பெண்கள் எடுத்த சமயோசித முடிவு, பல பெண்களுக்கும் முன்னுதாரணப் பாடம்!

ஒவ்வொரு நொடியும் அறிவியல் வளர்ச்சி அடைந்துவரும் இதே உலகத்தில்தான், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் நொடிக்கு நொடி அதிகரித்தபடியே இருக்கின்றன.

`இது, நமக்குப் பாதுகாப்பான உலகமே அல்ல’ என்று பெரும்பாலான பெண்களும் விரக்தி நிலைக்குத் தள்ளப்பட்டு, அஞ்சி நடுநடுங்கும் அளவுக்கு பாலியல் தொல்லைகள் தொடர்கின்றன.

இத்தகைய சூழலில், விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக பஞ்சாப் மாநிலம் சென்ற விழுப்புரம் மாவட்ட இளம்பெண்கள் மூவரை, மொழி தெரியாத அந்த மாநிலத்தில், இப்படி ஒரு பிரச்னையில் சிக்க வைக்கப் பார்த்திருக்கிறார், ̀மிலிட்டரி' வேடமிட்ட ஒரு நயவஞ்சக நபர். அந்த ஆபத்திலிருந்து தப்பிக்க, அப்பெண்கள் எடுத்த சமயோசித முடிவு, பல பெண்களுக்கும் முன்னுதாரணப் பாடம்!

Boxing (Representational Image)
Boxing (Representational Image)
Photo by Arisa Chattasa on Unsplash

வறுமையிலும் விடாத தன்னம்பிக்கையோடு சாதிப்பதற்காக, இருதோழிகளின் துணையோடு குத்துச்சண்டை போட்டிக்காக பஞ்சாப் மாநிலம் சென்றார் கயல்விழி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மூன்றாம் கட்டப் போட்டியில் வெற்றியைத் தவறவிட்ட சோர்வோடு, ரயில் நிலையம் திரும்பியவருக்கு, `ரயில் ரத்து' என்கிற செய்தி மேலும் சோர்வைக் கூட்டியிருக்கிறது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், தோழிகளோடு ரயில் நிலையத்தில் காத்திருந்தபோதுதான், அந்த ஆபத்து அவர்களை நெருங்கியிருக்கிறது!

வறுமையில் வளர்த்த வைராக்கியம்

ஆபத்திலிருந்து தோழிகளோடு மீண்டிருக்கும் இளம்பெண் கயல்விழி, டெல்லியிலிருந்து சென்னைக்கு ரயிலில் திரும்பிக்கொண்டிருக்க, அந்தச் சமயத்தில் அவரிடம் நாம் பேசினோம்.

``நான் சின்ன கிராமத்தைச் சேர்ந்த பெண். என்னோட வீட்டுல நானு, அக்கா, அம்மா மட்டும்தான். சின்னதுல இருந்தே அம்மாதான் கஷ்டப்பட்டு படிக்கவெச்சு வளர்த்தாங்க. அக்கா படிச்சு முடிச்சதும் கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டாங்க. நான் நல்ல நிலைமைக்கு வரணும், சாதிக்கணும்னு எங்க அம்மாவுக்கு ரொம்ப ஆசை. நான் நல்லா படிக்கணும்னு கழுத்துல இருக்கற தாலி வரை அடகுவெச்சுதான் படிக்க வெச்சாங்க.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

`பொம்பள பிள்ளைய காலத்துல கல்யாணம் பண்ணி கொடுக்கிறத விட்டுட்டு எதுக்கு இப்படி படிக்க வெச்சுகிட்டு இருக்கீங்க. குத்துச்சண்டை போட்டியெல்லாம் ரொம்ப முக்கியமா?‘னு சுத்தி இருக்கிறவங்க எல்லாம் சொன்னாங்க. அதையும் மீறித்தான் எங்க அம்மா படிக்க வெக்கிறாங்க.

காலேஜுக்கு முதன்முறையா போனப்போ பாக்ஸிங் மேல ஆர்வம் வந்துச்சு. முதுகலை படிக்க வந்ததுக்கு அப்புறம் ஈடுபாடு அதிகமாச்சு. பாக்ஸிங்ல ஒலிம்பிக் வரைக்கும் போய் சாதிக்கணும்கிறதுதான் குறிக்கோள், லட்சியம் எல்லாமே. அதுக்கு முதல்படியாத்தான் பஞ்சாப்ல இந்திய அளவில் நடக்கிற ஒரு பாக்ஸிங் போட்டியில கலந்துக்குற வாய்ப்பு கிடைச்சது. ரொம்ப உற்சாகமா அங்க கிளம்பினோம்.

Representational Image
Representational Image

சக போட்டியாளர்கள்... மைதான அனுபவம்!

இந்தப் போட்டிக்காக ஜலந்தர் (பஞ்சாப் மாநிலம்) போறதுக்குக்கூட நகைகளை அடகுவெச்சுதான் பயணச் செலவுக்கு அம்மா காசு கொடுத்தனுப்பினாங்க. ஜலந்தர் பத்தியெல்லாம் எதுவுமே தெரியாது. ஏதோ ஒரு தைரியத்துல தோழிகளோட கிளம்பிட்டேன். சென்னையிலிருந்து டெல்லி, டெல்லியிலிருந்து ஜலந்தர்னு ஒருவழியா போட்டி நடக்குற இடத்துக்கு போய்ச் சேர்ந்துட்டோம்.

18, 19-ம் தேதி மேட்ச் நடந்துச்சு. ரெண்டு ரவுண்ட் ஜெயிச்சுட்டேன். கையில கொஞ்சம் அடிபட்டதால 3-வது ரவுண்டு கொஞ்சம் சவாலாத்தான் இருந்துச்சு. மத்த போட்டியாளர்கள்கூட வந்திருந்த கோச் எல்லாம் அவங்கள நல்லா என்கரேஜ் பண்ணாங்க. ஆனா, என்கூட துணைக்காக ஓர் அக்காவும், ஒரு தோழியும்தான் வந்திருந்தாங்க. அந்த அரங்கத்துல அவங்க ரெண்டு பேர்தான் என்னைய மோட்டிவேட் பண்ணாங்க. ஆனாலும், 3-வது ரவுண்ட்ல என்னால ஜெயிக்க முடியல'' சற்றே கவலை கலந்த குரலில் சொன்ன கயல்விழி, தொடர்ந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரத்தான ரயில்... எதிர்பாராத பிரச்னை!

``சரி, ஊருக்குத் திரும்பலாம்னு உடனடியா மூணு பேருக்கும் ரயில் டிக்கெட் புக் பண்ணிட்டோம். பிறகு, ரயில்வே ஸ்டேஷனுக்கு போனோம். `ரயில் வராது'னு வாசல்லயே சொன்னாங்க. என்கூட வந்த அக்கா, ஏன் டிரெயின் வரலைனு கேட்கிறதுக்காக ஸ்டேஷன் உள்ள போனாங்க. நானும் தோழியும் மட்டும் ஸ்டேஷன் வெளி வளாகத்துல உக்கார்ந்திருந்தோம். பெருசா கூட்டமே இல்ல. சொல்லப்போனா, ஆளரவமே இல்ல. அந்த நேரம் ஒருத்தர் மிலிட்டரி யூனிஃபார்ம்ல வந்து எங்க பக்கத்துல நின்னார். என்ன ஏதுனு கேட்டார். எங்கள பத்தி சொன்னோம். அவரும், `ரயில் மறியல் நடக்கறதால இன்னிக்கு ரயில் வராது. இங்க காத்திருக்கிற நேரம் ஊரைச் சுத்திப் பாக்கலாம் வாங்க. நான் மிலிட்டரி ஆபீஸர்தான். என்கூட வாங்க, செலவு எல்லாம் நானே பாத்துக்கிறேன்’னு சொன்னார். `இல்லைங்க... நோ பிராப்ளம்‘ அப்படின்னு சொல்லிட்டு நாங்க விலகிப் போயிட்டோம்.

உள்ள விசாரிச்சுட்டு திரும்பி வந்த அக்கா, `இந்த மாநிலத்துல ரயில் மறியல் போராட்டம் நடக்குது. அதனால ரயில் எல்லாம் கேன்சல் ஆகிடுச்சுனு சொல்லிட்டாங்க'னு சொன்னாங்க. ஆன்லைன் புக்கிங் செய்திருந்ததால, டிக்கெட்டுக்கான காசும் கையில கிடைக்கல. மூணு நாள் கழிச்சு, பேங்க் அக்கவுன்ட்டுக்கு வந்துடும்னு சொல்லிட்டாங்க. கையில வேற கூடுதலா காசு இல்ல. அடுத்து என்ன வழி. எப்படி ஊருக்குத் திரும்பறதுனு நாங்க பேசிட்டே இருந்தோம்.

Indian Railways
Indian Railways

அதேசமயத்துல, மிலிட்டரினு சொல்லிட்டு எங்ககிட்ட பேசின அந்த நபர், கொஞ்ச தொலைவுல நின்னு எங்கள பார்த்தபடியே யார்கிட்டயோ போன் பேசிட்டிருந்தார். பிறகு, எங்களையே ஃபாலோ பண்ண ஆரம்பிச்சார். சும்மா சும்மா பக்கத்திலேயே வந்து உட்கார்ந்தாரு. ஆள் அரவமே இல்லாததால, `எங்களுக்கு கொஞ்சம் பிராப்ளம், போலீஸ் ஸ்டேஷன் வரை உதவி பண்ண வாங்க’னு அவர்கிட்டயே சொன்னோம். அதுக்கு அவர்கிட்ட இருந்து பாஸிட்டிவான பதில் இல்ல. அப்போதான், இவர் தப்பான ஆள், அவரோட நோக்கமே வேறங்கறது புரிஞ்சுது. நாங்க மொழி தெரியாத நபர்கள்ங்கிறதையும், சிக்கல்ல இருக்கறதையும் தனக்குச் சாதகமா பயன்படுத்திக்கப் பார்த்தார்.

விகடனுக்கு போன்... கிடைத்த தைரியம்!

என்ன பண்றதுனு நாங்க யோசிச்சிட்டிருக்கும்போது, திரும்பத் திரும்ப எங்களையே சுத்தி சுத்தி வந்தார் அந்தநபர். உடனே, விகடன் ஞாபகத்துக்கு வரவே, போன் பண்ணி பேசினோம். உடனடியா விகடன் நிருபருக்கு லைன் கொடுத்தாங்க. எங்களோட பிரச்னை முழுக்க உள்வாங்கிக் கேட்டுக்கிட்டு, நிலைமையை உணர்ந்து, அந்த நிமிஷத்திலிருந்து எங்களுக்கு வழிகாட்டி உதவி பண்ணாங்க'' என்றார் கயல்விழி.

விகடன் அலுவலகத்துக்குத் தகவல் கிடைத்ததுமே... எப்படிச் செயலாற்றுவது என்று யோசித்தோம். உடனடியாக, தமிழ்நாடு ரயில்வே போலீஸ் துறையின் உதவியைக் கேட்டுப்பெறலாம் என்று தோன்றவே, தாம்பரம் மாநகர காவல்துறை கமிஷனரும், ரயில்வே போலீஸ் கூடுதல் டி.ஜி.பி-யுமான ரவி ஐ.பி.எஸ்-ஸைத் தொடர்புகொண்டோம். உடனே, அவர் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரவனை அழைத்து, சம்பந்தப்பட்ட பெண்களிடம் பேசவைத்தார். அவர்களில் ஒருவரிடம் செல்போனை அப்படியே ஜலந்தர் ரயில்வே போலீஸிடம் கொடுக்கச் சொன்னார். அதைத் தொடர்ந்து துறைரீதியான பேச்சுகள் நடக்க, அடுத்தடுத்து நடவடிக்கைகள் ஆரம்பமாயின.

``ரயில்வே இன்ஸ்பெக்டர் வைரவன், ரொம்ப அக்கறையா எங்க பிரச்னையைக் கேட்டுட்டு, சில விஷயங்களைச் சொன்னாங்க. அவங்க சொன்னபடி தைரியத்தை வரவழைச்சுட்டு, ஜலந்தர் ரயில்வே போலீஸ்கிட்ட போனோம். `மிலிட்டரி’னு சொல்லிட்டு ஒரு ஆள் ஃபாலோ பண்றதையும் சொன்னோம். உடனே, போலீஸ் வந்து பார்த்தப்போ, அந்த ஆளு அங்க இல்ல. சுத்தியும் தேடிப்பாத்தாங்க. ஆள் கிடைக்கல. அதுக்குப் பிறகு, ரயில்வே போலீஸ் உதவியோட பஸ் மூலமா டெல்லிக்குக் கிளம்பிட்டோம்'' என்று பெரு மூச்சுவிட்ட கயல்விழி, தொடர்ந்தார்.

ரவி ஐ.பி.எஸ்
ரவி ஐ.பி.எஸ்

விஜயனின் அக்கறை... பாதுகாப்பான பயணம்!

``விகடனோட உதவி அதுக்கு பிறகும் தொடர்ந்தது. டெல்லியில தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதியா இருக்கிற ஏ.கே.எஸ். விஜயன் சார்கிட்ட (நாகப்பட்டினம் தொகுதியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்-தி.மு.க) விஷயத்தைக் கொண்டுபோனார் விகடன் நிருபர். அதைத் தொடர்ந்து விஜயன் சாரோட உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி எங்களுக்கு உதவி செய்ய ஆரம்பிச்சுட்டார். நாங்க டெல்லிக்கு சரியான ரூட்டுல, சரியான நேரத்துலதான் வந்துகிட்டு இருக்கோமானு அடிக்கடி போன் பண்ணி எங்களை செக் பண்ணிக்கிட்டே இருந்தார் கிருஷ்ணமூர்த்தி சார்.

டெல்லி வந்து சேர்ந்ததும், விஜயன் சாரோட கார் மூலமா அழைச்சுட்டு போய் ஒரு வீட்டுல பாதுகாப்பா தங்க வெச்சாங்க. மறுநாள் (21.12.2021) எங்களுக்கு டிரெயின் டிக்கெட் எடுத்துக் கொடுத்து, ஊருக்கு பத்திரமா அனுப்பி வெச்சாங்க. விகடன், விஜயன் சார், அவரோட பி.ஏ உதவியால பாதுகாப்பா நாங்க இப்ப ரயில்ல ஊர் திரும்பிகிட்டு இருக்கோம். உதவி செய்த எல்லாருக்கும் நன்றி” என்றவர், அடுத்து சொன்ன விஷயம், தன்னம்பிக்கையின் உச்சம்!

``பெண்களை எங்கேயும், எப்பவும் பாலியல் தொல்லைகள் துரத்திகிட்டே இருக்குறது துன்பமான விஷயம். ஒரு கிராமத்துல இருந்து தன்னம்பிக்கையோட முட்டி மோதி வெளிய வர்ற எங்களை மாதிரி பெண்களுக்கு எல்லாம் இதுபோன்ற தொல்லைகள் ரொம்பவே அச்சுறுத்தலா இருக்கும். ஆனா, அதுக்காக பயந்து முடங்கிடக் கூடாதுங்கற நம்பிக்கையை இந்த பஞ்சாப் பயணம் கொடுத்திருக்கு. விகடன் மாதிரி பொறுப்பான, நம்பிக்கையான தரப்பில் உதவிகளைக் கேட்டு வாங்கணும், அதன் மூலமா அரசாங்கத்தோட உதவிகளும் நமக்குக் கிடைக்கும்கிறத உணரும்போது ரொம்ப நெகிழ்ச்சியாவும் நம்பிக்கையாவும் இருக்கு!” - என்று நெகிழ்ச்சியோடு சொன்ன கயல்விழி, கூடவே இன்னொரு தகவலையும் பகிர்ந்தார்.

ஏ.கே.எஸ்.விஜயன்
ஏ.கே.எஸ்.விஜயன்

- ``இப்பகூட ரயில்ல ஒரு பிரச்னை. ஒருத்தன் பான்பராக் போட்டுட்டு வந்து எங்ககிட்ட ஒரு மாதிரி நடந்துகிட்டான். எனக்குள்ள ஒரு தைரியம் எட்டிப்பார்க்க, `நான் பாக்ஸர்... பேசாமப் போயிடு... குத்து வாங்கி செத்துடாதே’னு சொன்னேன். சட்டுனு வேற இடத்துக்குப் போயிட்டான். ஆனா, அங்கயும் பெண்கள்கிட்ட பிரச்னை பண்ணிட்டு இருந்தான். உடனே டிடிஇ (ரயில்வே டிக்கெட் பரிசோதகர்) கிட்ட விஷயத்தைக் கொண்டு போனேன். ஆனாலும்கூட அந்த ஆளை அப்புறப்படுத்துற துக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு!

எதுக்கு இதைச் சொல்றேன்னா, எல்லாப் பொண்ணுங்களும் எதுக்கு எடுத்தாலும் பயப்படறதை நிறுத்திட்டு, கொஞ்சம் தைரியமா பேசினாலே நமக்குள்ள தன்னம்பிக்கை வந்துடும்'' என்றபோது, கயல்விழியின் குரலில் கூடுதல் கம்பீரம் தெரிந்தது!