Published:Updated:

`அவங்க வரலன்னா இந்தக் கொடுமை வெளிய தெரியாமயே போய்ருக்கும்!' - அதிர்ச்சியில் டி.பி.சத்திரம் மக்கள்

ஏதோ ஒரு வகையில் பெண்களையும் குழந்தைகளையும் ஆசை வார்த்தை கூறியோ, மிரட்டியோ பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவது ஒரு வகை என்றால், வறுமையைப் பன்படுத்தி எல்லை மீறுவது இன்னொரு வகை. பெருமாள் இரண்டு விதத்திலும் குற்றங்களைச் செய்திருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``அவனையெல்லாம் மனுஷ ஜென்மத்துலயே சேர்க்கக் கூடாதுங்க. வெறிப்பிடிச்ச மிருகத்தைவிட மோசமானவனா இருந்திருக்கான். இப்படியெல்லாம் ஒருத்தன் ஈவு இரக்கமில்லாத கொடூரமானவனா இருப்பானான்னு எங்களால கற்பனையிலகூட நினைச்சுப் பார்க்க முடியலை. ரெய்டுக்காக இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மேடம் இங்கே வராமப் போயிருந்தாங்கன்னா இந்தக் கொடுமை வெளியிலயே வந்திருக்காது. இன்னும் எத்தனையோ ஏழைக் குழந்தைங்களை நாசம் பண்ணிருப்பான். இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மேடத்துக்கு கோடி நன்றி சொல்லணும். அந்த அயோக்கியனுக்கு வாழ்நாள் முழுக்க மறக்கவே முடியாத மாதிரி தண்டனை கொடுக்கணும். அப்போதான் இப்படியான சம்பவங்கள்லாம் நடக்காது.” டி.பி.சத்திரம் பகுதியில் பதைபதைக்க வைக்கும் பாலியல் வழக்கில் கைதாகியிருக்கும் பெருமாள் பற்றிக் கேட்டதும் ஆற்றாமையில் கொந்தளிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.

பெருமாள்
பெருமாள்

டி.பி.சத்திரம் பகுதி கடந்த சில நாள்களாக இயல்புநிலை குலைந்து இப்படியான உணர்ச்சிக் கொந்தளிப்பில்தான் இருக்கிறது. அந்தப் பகுதியில் மளிகைக்கடை நடத்தி வந்த 48 வயதான பெருமாள், அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் அவர்களின் இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் மூன்று சிறுமிகள் எனப் பலரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு அதனை வீடியோ எடுத்து வைத்திருந்ததுதான் கொந்தளிப்புக்கு காரணம். இந்தக் கொடூரத்தை நிகழ்த்திய பெருமாள் மட்டுமல்லாது தங்கள் குழந்தைகளை பெருமாளின் பாலியல் இச்சைக்கு இணங்க வைத்த குற்றச்சாட்டில் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். பாதிக்கப்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், அந்தப் பகுதியில் இந்தச் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த பகீர் சம்பவம் குறித்து அந்தப் பகுதி மக்களிடம் பேசினோம், ``பெருமாள் மேல எந்தளவுக்கு எங்களுக்கு ஆத்திரம் இருக்கோ அதே அளவு ஆத்திரம் அந்த இரண்டு பொண்ணுங்க மேலயும் இருக்கு. அவங்க ரெண்டு பேரும் அக்கா தங்கச்சிங்கதான். பணத்துக்காகத்தான் பெருமாளோட தப்பான உறவு வெச்சுகிட்டதா சொல்லிக்கிறாங்க. அவங்க தப்பான வழிக்குப் போனதைக்கூட சூழல்னு சொல்லலாம். ஆனா, எதுவுமே அறியாத சின்ன குழந்தைகளை அவன் ஆசைக்கு அனுப்ப அவங்களுக்கு எப்படித்தான் மனசு வந்துச்சோ… அதை நினைக்கும்போதுதான் பகீர்னு இருக்கு. அது இல்லாம இன்னும் மூணு குழந்தைகளையும் நாசம் பண்ணியிருக்கான் அந்த அரக்கன். நீண்ட நாள்களா இந்தக் கொடுமை நடந்துருக்கு. கடந்த வாரம் பெருமாள் கடையில குட்கா விற்கிறதா யாரோ போலீஸுக்கு புகார் கொடுத்துருக்காங்க. அந்தப் புகாராலதான் வசமா சிக்கியிருக்கான். குட்கா ரெய்டுக்காக வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரிதான் இந்த விஷயத்தைக் கண்டுபிடிச்சுருக்காங்க. அஞ்சு குழந்தைகள் பாதிக்கப் பட்டிருக்காங்க. ஆனா, இந்த விஷயம் பெருசா பேசப்படலை. பொள்ளாச்சி பாலியல் வழக்கை பெருசா பேசறவங்க இதை ஏன் பேச மாட்டேங்குறாங்கன்னு தெரியலை” என்கின்றனர் கோபத்துடன்.

இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி
இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி

இந்தச் சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியிடம் பேசினோம்... ``பெருமாள் தன்னுடைய கடையில குட்கா விக்கிறதா புகார் வந்ததும் என் டீமோட அங்க போயிட்டேன். சர்ச் பண்ணதுல அந்தக் கடையில குட்கா இருந்ததைக் கண்டுபிடிச்சோம். விசாரணையில உனக்கு குட்கா சப்ளை பண்றது யாருன்னு கேட்டதற்கு, சைக்கிள்ல வந்து ஒருத்தர் சப்ளை பண்ணுவார்னு பெருமாள் பதில் சொன்னார். உனக்கு சப்ளை பண்ற ஆளோட போன் நம்பர் குடுன்னு கேட்டேன். நம்பர்லாம் இல்லைன்னார். எப்படி போன் நம்பர் இல்லாம போகும்? அவரோட மொபைலை செக் பண்றதுக்காகக் கேட்டேன் என்கிட்ட கொடுக்க மறுத்தார். அப்போதான் எனக்கு சின்னதா பொறிதட்டுச்சு. உடனே செல்போனைப் பிடுங்கி செக் பண்ணேன். கேலரியில நிறைய போர்ன் வீடியோக்கள் இருந்துச்சு. வெப்சைட்ல இருந்து டௌன்லோடு பண்ணிருப்பார்னு முதல்ல நினைச்சேன். ஆனா, அவரோட பதற்றம் என் சந்தேகத்தை அதிகரிச்சது. வீடியோவை ஓப்பன் செய்து செக் பண்ண முடிவெடுத்தேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு வீடியோவுல குழந்தைகிட்ட தப்பா நடந்துக்கிற மாதிரி இருந்துச்சு. அதுல குழந்தையின் முகம் தெரியுது. ஆனா, அந்தக் கொடுமையை செய்யறவன் முகம் தெரியலை. அவன் கை மட்டும்தான் தெரிஞ்சது. கையில வாட்ச் கட்டியிருந்தான். அதே வாட்ச்சை பெருமாள் கையில பாத்ததுக்கு அப்புறம்தான் அதிர்ந்துபோயிட்டேன். மற்ற வீடியோக்களையெல்லாம் ஓப்பன் பண்ணிப் பார்த்ததுக்கு அப்புறம்தான் எல்லாமே பெருமாள்தாங்கிற உண்மை தெரிஞ்சது. எனக்கு பகீர்னு இருந்தது. என்ன சொல்றதுன்னே தெரியலை. பெருமாளோட சொந்த ஊர் தூத்துக்குடி, பல வருஷங்களுக்கு முன்னாடி சென்னை வந்து கடை வெச்சிருக்கார். மனைவி இருக்காங்க. ஒரு மகன், ஒரு மகள்னு கல்யாண வயசுல ரெண்டு பிள்ளைகள் இருக்காங்க. இப்படியான நிலையில இந்தக் காரியத்தைச் செஞ்சுருக்கார். அவர் குற்றத்தை ஒத்துக்கிட்டார். கஸ்டடியில எடுத்து விசாரிக்கும்போதுதான் இன்னும் டீட்டெய்லான விஷயங்கள் தெரியவரும். மக்கள் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்” என்றார்.

Child Abuse (Representational Image)
Child Abuse (Representational Image)
ஐந்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை, வீடியோக்கள்! -குட்கா ரெய்டுக்குச் சென்றபோது சிக்கிய கடைக்காரர்

``ஏதோ ஒரு வகையில் பெண்களையும் குழந்தைகளையும் ஆசை வார்த்தை கூறியோ, மிரட்டியோ பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவது ஒரு வகை என்றால், வறுமையைப் பன்படுத்தி எல்லை மீறுவது இன்னொரு வகை. பெருமாள் இரண்டு விதத்திலும் குற்றங்களைச் செய்திருக்கிறார். இரண்டு குழந்தைகளை அந்தக் குழந்தைகளின் அம்மாக்களுக்குத் தெரிந்தே பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். வறுமையின் காரணமாக அவர்களும் அதை அனுமதித்திருக்கின்றனர். இன்னும் மூன்று குழந்தைகளுக்கு அவர்கள் விருப்பப்பட்ட பொருளை வாங்கிக்கொடுத்து ஆசை வார்த்தை கூறி அதன்மூலம் வீழ்த்தியிருக்கிறார். இதைச் சாதாரண விஷயமாகக் கடந்துவிடக் கூடாது. இது மிகவும் மோசமான சூழலுக்கான சான்று. இப்படி நிறைய குழந்தைகள் பாதிக்கப்படக் கூடும். ஆகையால், இதற்கான விழிப்புணர்வை உடனடியாக மேற்கொள்வதுடன் வறுமையின் காரணமாக இப்படியான சம்பவங்கள் நடக்காது என்பதையும் உறுதி அரசு செய்ய வேண்டும்” என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு