`ஆம்னி பஸ்ஸில் டிக்கெட் ரேட் கேட்டது குத்தமா?' திருச்சி பேருந்துநிலையத்தில் பயணிக்கு நேர்ந்த துயரம்

`எங்களிடம் கட்டணம் எவ்வளவு என விசாரித்துவிட்டு, அரசு பேருந்தில் பயணம் செய்ய போவியா?' என ஆம்னி பேருந்தின் கட்டணம் குறித்து விசாரித்தவர் மீது தனியார் ஆம்னி பேருந்தின் இடைத்தரகர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், உசிலங்குளம் முதல் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் சென்னையில் பணியாற்றி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த இவர், நேற்று முன்தினம் இரவு சென்னை செல்வதற்காக திருச்சி மத்திய பேருந்து நிலையம் வந்தார்.

திருச்சியில், தனியார் ஆம்னி பேருந்துகளுக்காக மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள ரயில்வே இடத்தில், தனியாகப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இரவு நேரங்களில் மத்திய பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தனியார் ஆம்னி பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றுவது வழக்கம்.
அந்தவகையில், மத்திய பேருந்து நிலையம் அருகே தனியார் ஆம்னி பேருந்துகள் நின்றுகொண்டிருந்தன. அதன் அருகில் ஆம்னி பேருந்துகளுக்கு ஆள்பிடிக்கும் இடைத்தரகர்கள் சில நின்றுகொண்டு பயணிகளை கூவிக் கூவி அழைத்துக் கொண்டிருந்தனர்.
அவர்களிடம் சென்னை செல்வதற்குப் பேருந்துக் கட்டணம் எவ்வளவு என கார்த்திக் விசாரித்தாராம். அதன்பிறகு நடந்ததை விளக்கினார் கார்த்திக், ``சென்னை செல்வதற்காக மத்திய பேருந்து நிலையம் சென்றேன். ஶ்ரீரங்கம் பேருந்துகள் நிற்கும் இடத்தில் நின்றுகொண்டிருந்த ஒருவர், என்னிடம் பேச்சுக்கொடுத்தார். அடுத்து நான், கட்டணம் குறித்து விசாரித்தபோது, `ஏசி வசதி கொண்ட பேருந்தில் பயணம் செய்ய ரூ.650, ஏசி இல்லாத பேருந்துகளுக்கு ரூ.400' என்றார்கள்.

கட்டணம் அதிகமாக இருந்ததால், அரசு பேருந்தில் போகலாம்னு அங்கிருந்து கிளம்பினேன். இதனால் கோபமடைந்த அந்த நபர், அசிங்கமான வார்த்தைகளில் திட்டியபடி என்னைத் தாக்கினார். தாக்குதலில் எனது சட்டை கிழிந்தது. தாக்குதலுக்குள்ளான நான் பேருந்து நிலையத்தில் இருக்கும் புறக்காவல் மையத்துக்குப் புகார் கொடுக்கச் சென்றேன். அதை அறிந்த அந்த நபர், அவரின் நண்பர் ஒருவரை அழைத்து வந்து தாக்கினார். இதற்கிடையில், அருகில் இருந்த ஆம்னி பேருந்து புரோக்கர்களும் சண்டையை விலக்குவது போல் என்னைத் தாக்கினர். நான் எந்தத் தவறும் செய்யல. பேருந்துக் கட்டணம் எவ்வளவு எனக் கேட்டது குற்றமா சார்” என்றார்.
காயமடைந்த கார்த்திக் தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், இதுகுறித்து விசாரித்தனர்.
விசாரணையில், ஆம்னி பேருந்து இடைத்தரகர்களான திருச்சி அடுத்த மணிகண்டம், சிவன் கோயில் தெருவைச் சேர்ந்த பில்லா என்கிற ஸ்ரீரங்கன், புத்தூர், எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த வெங்கடேஷ் இடைத்தரகர்களான பில்லா மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் கார்த்திகை தாக்கியது தெரியவந்தது. அதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

`திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் தனியார் ஆம்னி பேருந்து புரோக்கர்கள் நடமாட்டம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. இவர்கள் மத்திய பேருந்து நிலையத்துக்கு யார் வந்தாலும் அவர்களை ஆம்னி பேருந்தில் ஏற்றுவதையே குறியாகக் கொண்டு செயல்படுகிறார்கள். இதனால் பயணிகள் பெரும் இடையூறுக்கு ஆளாகின்றனர். இவர்களின் தொல்லையால் அவசரமாகச் செல்லும் பயணிகள் தர்ம சங்கடத்திற்கு ஆளாகின்றனர்' என்று புகார் வாசிக்கிறார்கள் திருச்சி பேருந்து நிலையத்தைத் தினசரி பயன்படுத்தும் பயணிகள்.