Published:Updated:

நள்ளிரவில் சூதாட்ட கிளப் ஓனர் கடத்தல்; காரில் உடலை போட்டுச்சென்ற கும்பல்!- திணறும் திருச்சி போலீஸ்

திருச்சியில் சூதாட்ட கிளப் உரிமையாளர், மர்ம நபர்களால் கடத்தப்பட்டதோடு, அவரது சடலத்தை காரிலேயே போட்டுவிட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மரணமடைந்த சோமசுந்தரம்.
மரணமடைந்த சோமசுந்தரம்.

``திருச்சி மாநகரில் 10,000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது வரை 1,000 கேமராக்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளன. திருச்சி மாநகரில் புதிதாக வீடு கட்டுபவர்கள், கண்காணிப்பு கேமராவைச் சேர்த்தே வைக்க வேண்டும். குற்றவாளிகள், இனி ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது” என எச்சரிக்கிறார் திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ்.

இவ்வளவு கேமராக்கள் இருந்தும், சூதாட்ட கிளப் உரிமையாளர் ஒருவர், திருச்சி மாநகரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள காந்தி மார்க்கெட் – பால்பண்ணைப் பகுதியில் காரில் கடத்தப்பட்டிருக்கிறார். அவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டு 5 நாள்கள் ஆகியும், கொலையாளிகளை அடையாளம் காணமுடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.

திருச்சி வரகனேரி முதல் தெருவைச் சேர்ந்தவர் சோமசுந்தரம். 55 வயதான இவர், தன் தம்பி மூர்த்தி மற்றும் சமயபுரம் பெரியண்ணன், கணேஷ், சரவணன் உட்பட 5 பேருடன் சேர்ந்து சமயபுரம் அடுத்த ஈச்சம்பட்டி மற்றும் சமயபுரம் நம்பர் 1 டோல்கேட் பகுதிகளில், ``சூதாட்ட கிளப்” நடத்திவருகிறார். எவ்வித அனுமதியும் இல்லாமல், வாடகைக் கட்டடத்தில் சட்டவிரோதமாகச் சூதாட்ட கிளப் நடத்தப்படுவதாகத் தெரிகிறது. ஆனால் இரண்டு கிளப்பிலும், கூட்டம் களைகட்டும் என்றும், இங்கு திருச்சி மட்டுமின்றி புதுக்கோட்டை, சென்னை, திண்டுக்கல், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து தொழிலதிபர்கள் வந்து பணம் வைத்து சூதாட்டம் ஆடுவது வழக்கம் என்று கூறப்படுகிறது. அந்தவகையில் தினமும் 50 லட்சம் வரை அந்த கிளப்பில் புழங்குமாம்.

கடத்தப்பட்ட கார்
கடத்தப்பட்ட கார்

இந்த நிலையில், கடந்த 29-ம் தேதி இரவு 12 மணியளவில் வரகனேரி பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து சோமசுந்தரம் காரில் கிளம்பினார். காரை திருச்சி தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் பிரபு ஓட்டிச் சென்றுள்ளார். கார் சோமசுந்தரம் நடத்திவரும் சமயபுரம் சூதாட்ட கிளப் நோக்கிப் புறப்பட்டது. அவர்களின் வாகனம், பழைய பால்பண்ணை அருகே உள்ள மகாலட்சுமி நகர் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த கார் ஒன்று, சோமசுந்தரத்தின் காரை மறித்து நின்றது. நேருக்கு நேராக கார் வந்து நின்றதும், அவர்களால் சோமசுந்தரத்தின் கார் முன்னோக்கிச் செல்ல முடியவில்லை. அடுத்து எதிரில் நின்ற காரிலிருந்து இறங்கிய நான்குபேர், சட்டென சோமசுந்தரத்தின் காருக்குள் ஏறினர்.

கண் இமைக்கும் நேரத்தில், சோமசுந்தரத்தையும், அவரது ஓட்டுநர் பிரபுவையும் ஆயுதங்களால் மிரட்டி, பின் சீட்டில் சோமசுந்தரம் மற்றும் ஓட்டுநர் பிரபு ஆகியோரின் கண்களைக் கட்டி, அடித்து சித்ரவதை செய்துள்ளனர். அடுத்து அந்தக் கார், நள்ளிரவு இரண்டு மணியளவில் திருச்சி - புதுக்கோட்டை சாலையில் உள்ள அண்ணா கோளரங்கம் அருகே நிறுத்தப்பட்டிருந்தது.

மனைவியுடன் சோமசுந்தரம்
மனைவியுடன் சோமசுந்தரம்

காரில் இருந்த அவர்கள், பின்தொடர்ந்து வந்த அவர்களின் காரில் தப்பிச் சென்றுவிட்டனர். அதைத் தொடர்ந்து ஓட்டுநர் பிரபு, தன்மீது கட்டப்பட்டிருந்த துணிக்கட்டுகளை அவிழ்த்தவர், அருகில் சோமசுந்தரம் மயங்கி உணர்வற்று கிடப்பதைப் பார்த்து பதறியதோடு, உடனே சோமசுந்தரத்தை அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.

அங்கு மயங்கிக் கிடந்த சோமசுந்தரத்தைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினர்.

அதைத்தொடர்ந்து ஓட்டுநர் பிரபு கொடுத்த தகவலின் அடிப்படையில், சோமசுந்தரத்தின் குடும்பத்தார் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து திருச்சி காந்தி மார்க்கெட் போலீஸார் விசாரித்து வருகிறார்கள். போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடத்திவருகிறது. ஓட்டுநர் பிரபுவிடம் விசாரணை தொடர்கிறது.

இதுகுறித்து போலீஸார் நம்மிடம், ``இரவு நேரம் என்பதால் சோமசுந்தரத்தை காரில் கடத்திய சம்பவம், அப்பகுதியில் உள்ளவர்களுக்குத் தெரியவில்லை. எப்போதும் போக்குவரத்து நெரிசல்மிக்க பால் பண்ணை சாலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் உள்ள கேமரா பதிவுகளை ஆய்வு செய்துவருகிறோம். மேலும், இறந்துபோன சோமசுந்தரத்தின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை. அவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டாரா என்கிற கோணத்தில் விசாரணை தொடர்கிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம். உண்மையில் சோமசுந்தரத்தை காரில் கடத்திய மர்ம நபர்கள் கொலை செய்தார்களா அல்லது கடத்தப்பட்ட பயத்தில் மாரடைப்பு ஏற்பட்ட காரணமாக சோமசுந்தரம் இறந்து போனாரா? இல்லை ஓட்டுநர் பிரபு, சோமசுந்தரம் உயிரிழந்த விவகாரத்தில் நாடகமாடுகிறாரா என்கிற கோணத்தில் விசாரணை செய்துவருகிறோம்.” என்றார்கள்.

திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ்
திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ்

இதுகுறித்து திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ், ``சோமசுந்தரம் மரணம் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் ஈடுபட்டவர்கள் குறித்த அடையாளம் தெரிந்துள்ளது. அவர்களைத் தீவிரமாக தேடிவருகிறோம். ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவர் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை. காரில் கடத்தப்பட்டபோது, மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம். குற்றவாளிகளைத் தீவிரமாக தேடிவருகிறோம். அவர்களைப் பிடித்தால் உண்மை வெளிச்சத்துக்கு வரும்” என்றார்.