Published:Updated:

`இளைஞருக்கு கொரோனா; ஊரடங்கை மீறிய 1289 பேர்!' -திருச்சிக்கு அதிர்ச்சி கொடுத்த 2-ம் நாள் #corona

திருச்சியில் 2ம்நாள் ஊரடங்கு
திருச்சியில் 2ம்நாள் ஊரடங்கு

திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில், இறைச்சி மற்றும் ஹோட்டல்கள் முன்பு பெரிய கோடுகள் போடப்பட்டு விநியோகம் செய்யப்பட்டன.

ஊரடங்கு உத்தரவு தொடங்கி இரண்டாம் நாளான இன்று, திருச்சியின் பல்வேறு பகுதிகளுக்கு விசிட் அடித்தோம்.

அதிகாலையில் வீறிட்ட பைக்குகள்...

திருச்சி காந்தி மார்க்கெட்டில் மொத்த வியாபாரம் மட்டும் நடக்கும் என மாவட்ட நிர்வாகம் பிறப்பித்த உத்தரவால், காலையில் காந்தி மார்க்கெட் பகுதியை நோக்கி வியாபாரிகளின் வாகனங்கள் பறந்தன. திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதி, தலைமை தபால் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, வாகனச் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

திருச்சி டி.வி.எஸ்.டோல்கேகட்
திருச்சி டி.வி.எஸ்.டோல்கேகட்

திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில், இறைச்சி மற்றும் ஹோட்டல்கள் முன்பு பெரிய கோடுகள் போடப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது.

போலீஸார்
போலீஸார்

பாதுகாப்பில் இருந்த போலீஸாரிடம் சில அவசரக் காரணங்களைச் சொல்லிவிட்டுப் பறந்தனர். அவர்களில் சிலரை திருச்சி நீதிமன்ற வளாகம் அருகே உள்ள எம்.ஜி.ஆர்.சிலை ரவுண்டானா அருகே போலீஸார் மடக்கி, மீண்டும் விசாரித்த போலீஸார் சிலருக்கு அபராதம் விதித்தனர். அதில் சிலர் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சிலர், கடந்த ஜனவரி மாதத்திலிருந்து உலக நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிக்கொண்டிருந்த சூழ்நிலையிலும், மார்ச் 22-ம்தேதி வரை இந்தியாவுக்குள் விமான சேவைகளைத் தாராளமாக அனுமதித்ததன் விளைவை அனுபவிக்கிறோம் எனப் புலம்பினர்.

போலீஸார் மடக்கிய  வாகனங்கள்
போலீஸார் மடக்கிய வாகனங்கள்

திருச்சியில் கொரோனா!

அப்போதுதான், திருச்சியில் வாலிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி என்கிற தகவல் வெளியானது.

துபாயில் பணியாற்றிவந்த ஈரோட்டைச் சேர்ந்த வாலிபர், திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திருச்சி அரசு மருத்துவமனை
திருச்சி அரசு மருத்துவமனை

கடந்த 22-ம்தேதி, துபாயிலிருந்து திருச்சி வந்த பயணிகளிடம் தெர்மல் ஸ்கிரீனிங் நடத்தப்பட்டது. அதில் ஈரோட்டைச் சேர்ந்த வாலிபர் இருமல், காய்ச்சலால் அவதிப்பட்டார். அதையடுத்து, அவர் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தநிலையில், அவரது ரத்த மாதிரிகள் சென்னை கிங் சோதனை மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

`குடும்பக் கஷ்டத்துக்காக வேலைக்கு வந்தோம்!’- மகாராஷ்டிராவில் தவிக்கும் தமிழக இளைஞர்கள்

இந்நிலையில், அவருக்கு கொரோனா தொட்டு உறுதியானது. இதையடுத்து, அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவரால் யாருக்கும் நோய்த் தொற்று ஏற்படவில்லை என்பதுதான் மருத்துவர்களை நிம்மதியடைய வைத்துள்ளது.

இந்நிலையில், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகம் முழுவதும் திருச்சி தீயணைப்புத் துறையினர் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும், திருச்சி மாவட்டத்தில் மட்டும் வெளிநாட்டிலிருந்து வந்த 626 பேர்களை 28 நாள்கள் தனிமைப்படுத்தி வைத்திருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.1.20 கோடி வழங்கிய திருச்சி எம்.பி!

திருச்சி அரசு மருத்துவமனை
திருச்சி அரசு மருத்துவமனை

இந்நிலையில், திருச்சி எம்.பி திருநாவுக்கரசர், தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து தனது தொகுதியிலுள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தடுப்பு உபகரணங்களை வாங்கிட முதல்கட்டமாக 6 சட்டமன்றத் தொகுதிகளுக்குத் தலா ரூ.10 லட்சம் வீதம் மொத்தம் 60 லட்ச ரூபாயை அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் முதற்கட்டமாக வழங்குவதாகவும், 2-ம் கட்டமாக மேலும் 60 லட்சம் என மொத்தம் 1 கோடியே 20 லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

பிளாஸ்டிக் பைப் மூலம் அரிசி வழங்கும் ரேஷன் கடைகள்..

கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த பலரும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர். கேரளாவைத் தொடர்ந்து திருச்சியிலும், பல்வேறு ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்டவை போடுவதற்கு பிளாஸ்டிக் பைப் மூலம் அரிசி வழங்கத் தொடங்கியுள்ளனர்.

ரேஷன் கடை
ரேஷன் கடை

திருச்சி ஸ்ரீரங்கம் சிந்தாமணி ரேஷன் கடையைத் தொடர்ந்து, திருச்சி எடத்தெரு அமராவதி கூட்டுறவு நியாய விலை கடை, கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக, பொதுமக்களுக்கு இடைவெளிவிட்டு பிளாஸ்டிக் பைப் மூலம் அரிசி, பருப்பு போன்ற பொருள்கள் வழங்கப்பட்டன.

மேலும், திருச்சி, புதுகை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, நாகை, திருவாரூர், உள்ளிட்ட 8 மாவட்டங்களில், இதுவரை ஊரடங்கு விதிகளைப் பின்பற்றாத 1289 பேர் மீது வழக்கு, 802 இருசக்கர வாகனங்கள், 22 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக திருச்சி மண்டல ஐஜி அலுவகலத்திலிருந்து தகவல் வந்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும், திருச்சி அரசு மருத்துவமனையில் இளைஞர் ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு