Published:Updated:

`ஊரைவிட்டே ஒதுக்கி வைத்துவிட்டார்கள்!' -சிறுமியின் திருமணத்தைத் தடுத்த குடும்பத்துக்கு நேர்ந்த அவலம்

குழந்தை திருமணத்தை தடுத்த இளைஞர் பெரியகருப்பன்
குழந்தை திருமணத்தை தடுத்த இளைஞர் பெரியகருப்பன்

12-ம் வகுப்பு மாணவிக்கு நடக்க இருந்த திருமணத்தைத் தடுத்து நிறுத்தியதாக, இளைஞர் ஒருவரை குடும்பத்தோடு ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருச்சி மாவட்டம், மருங்காபுரியை அடுத்துள்ளது தெத்தூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் அழகு. இவரின் மகன் பெரியகருப்பன் என்கிற மைக்கேல். பட்டதாரி இளைஞரான இவர், கடந்த ஆண்டு பிப்ரவரி 10-ம்தேதி அதே ஊரைச் சேர்ந்த 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் அதே ஊரைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் நடக்கவிருந்த திருமணத்தை மாவட்ட ஆட்சியர் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் மூலம் தடுத்ததாகக் கூறப்படுகிறது.

`கன்னத்தில் அடித்தார், பதிலுக்கு நானும் அறைந்தேன்' -பெண் எம்எல்ஏ, ஒ.செ மோதலால் வெளிவந்த பண விவகாரம்

இந்நிலையில், தங்களின் மகளுக்கு நடைபெறவிருந்த திருமணம் தடைபட்டதால் கோபமடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், திருமணம் குறித்து சமூக நலத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தவர்கள் குறித்த தகவல்களைச் சேகரித்தனர். அந்த வகையில் பட்டதாரி இளைஞர் பெரியகருப்பன் மீது அவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது.

இதன்பிறகு நடந்த விவரத்தை நம்மிடம் விளக்கினார் அழகு, `` படிக்கும்போதே அப்துல்கலாம் இளைஞர் மன்றம் எனும் அமைப்பை உருவாக்கி இளைஞர்களை ஒருங்கிணைத்து ஊருக்கான நல்ல விஷயங்களை என் மகன் செய்வான். அது, அந்தப் பெண்ணின் குடும்பத்துக்குப் பிடிக்காது. இந்நிலையில், மாணவியின் திருமணத்தை தடுத்த சமூக நலத்துறை அதிகாரிகள் அவர் தொடர்ந்து படிப்பதற்கு வழிவகை செய்தனர்.

7 மாதம் தலைமறைவு... சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்த வழக்கில் சிக்கிய தாய்!

இதனால், மேலும் கோபமடைந்த அந்தப் பெண்ணின் அப்பா துரை என்கிற சுந்தன் அவரது உறவினர்களான ராஜேந்திரன், சுரேஷ், ராமன் உள்ளிட்டோர் தொடர்ச்சியாக கொலை மிரட்டல் கொடுக்கவே, மைக்கேல் ஊரில் இருந்தால் பிரச்னை என அவனைக் கோயம்புத்தூருக்கு அனுப்பி வைத்தேன். தற்போது அவன் போட்டித் தேர்வுக்குப் படித்து வருகிறான். ஆனாலும் தொடர்ந்து எங்கள் குடும்பத்தை அச்சுறுத்தி வருவதுடன், ஊரை விட்டும் ஒதுக்கி வைத்துவிட்டனர்.

இவர்களுக்குப் பயந்துதான், மைக்கேல் ஊருக்கு வருவதில்லை. அவ்வப்போது வந்தாலும், கொல்லாமல் விடமாட்டோம் என நேரிலும் மறைமுகமாகவும் மிரட்டி வருகிறார்கள். இதுகுறித்து திருச்சி கலெக்டர், டி.ஐ.ஜி, துவரங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோரிடம் புகார் கொடுத்தேன்.

போலீஸாரோ, நாங்கள் எந்தப் பிரச்னைக்கும் போகமாட்டோம் என எழுதிக் கொடுக்கச் சொல்கிறார்கள். இவர்களுக்குப் பயந்து இதுவரை ஊருக்குள் செல்ல முடியவில்லை.
அழகு

மனு மீது போலீஸார் விசாரணை நடத்தியபோதும், அந்தப் பெண்ணின் உறவினர்கள், உன்னைக் கொல்லாமல் விடமாட்டோம் என எனது மகனை மிரட்டிவிட்டுச் சென்றார்கள். போலீஸாரோ, நாங்கள் எந்தப் பிரச்னைக்கும் போகமாட்டோம் என எழுதிக் கொடுக்கச் சொல்கிறார்கள். இவர்களுக்குப் பயந்து இதுவரை ஊருக்குள் செல்ல முடியவில்லை” என்றார் வேதனையுடன்.

பெரியகருப்பன் குடும்பம்
பெரியகருப்பன் குடும்பம்

இதுகுறித்து துவரங்குறிச்சி காவல் ஆய்வாளர் வடிவேலிடம் கேட்டோம். “ பெரிய கருப்பன் கொடுத்த புகார் மீது விசாரணை நடத்தி வருகிறோம்” என்றதோடு முடித்துக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு