Published:Updated:

`திருச்சி நகைக்கடைக் கொள்ளை வழக்கு’ - குற்றவியல் நீதிமன்றத்தில் மணிகண்டன், கனகவல்லி!

திருச்சி நகைக்கடைக் கொள்ளைக் குற்றவாளிகளான மணிகண்டன் மற்றும் கனகவல்லி ஆகியோர், பல மணி நேர விசாரணைக்குப் பிறகு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

மணிகண்டன்
மணிகண்டன்

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடையில், கடந்த 2-ம் தேதி அதிகாலை நடைபெற்ற கொள்ளைச் சம்பவம், தமிழகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. நகைக்கடையின் சுவரை துளையிட்டு உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், தங்களின் அடையாளம் தெரியாமல் இருக்க மிக்கி மவுஸ் முகமூடி, கையுறை மற்றும் ஜெர்க்கின் அணிந்தபடி கைவரிசை காட்டியுள்ளனர்.

lalitha jewellery theft
lalitha jewellery theft

கொள்ளைச் சம்பவம் குறித்து தகவலறிந்த திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், 7தனிப்படைகள் அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டதுடன், திருச்சி மட்டுமல்லாது அரியலூர்,பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட போலீஸாரை உஷார்படுத்தினார். தொடர்ந்து 48 மணி நேர போலீஸாரின் தீவிர விசாரணையில், திருவாரூர் மடப்புரம் பகுதியில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, இருசக்கர வாகனத்தில் செல்லும் கொள்ளையர்கள் குறித்த தகவல் தெரியவந்தது.

ஆயுதப்படை மைதான திருமண மண்டபம்
ஆயுதப்படை மைதான திருமண மண்டபம்

அதையடுத்து, போலீஸார் இருசக்கர வாகனத்தில் சென்ற மணிகண்டன் என்பவரை விரட்டிப் பிடித்தனர். ஆனால், அவரின் கூட்டாளியும் நகைக்கடைக் கொள்ளையருமான சுரேஷ், தப்பி ஓடிவிட்டார். போலீஸார், மணிகண்டனைப் பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் வைத்திருந்த அட்டைப்பெட்டியில் 5 கிலோ மதிப்பிலான தங்க நகைகள் இருந்தன.

அந்த நகைகள், லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் கொள்ளையடித்த நகையுடன் ஒத்துப்போனதால், மொத்த நகையும் மணிகண்டனின் கூட்டாளிகளான சுரேஷ் மற்றும் முருகன், கோபால் உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்ததும், இந்த கொள்ளைச் சம்பவத்தில் முருகன் மூளையாகச் செயல்பட்டதும் தெரியவந்தது.

`திருவாரூர்' முருகன்
`திருவாரூர்' முருகன்

போலீஸார், மணிகண்டனையும் தப்பியோடிய சுரேஷின் தாய் கனகவல்லி மற்றும் நண்பர்களைப் பிடித்து தீவிர விசாரணை செய்தனர். மேலும், குற்றவாளிகள் குறித்து தகவலறிந்த திருச்சி மாநகர போலீஸார், திருச்சியில் இருந்து திருவாரூர் சென்றனர். 12 மணி நேரத்துக்கும் மேலாக தஞ்சை மண்டல போலீஸார் விசாரணை நடத்தி வந்தநிலையில், திருச்சி மாநகர போலீஸார் வசம் குற்றவாளிகள் ஒப்படைக்கப்பட்டனர்.

மணிகண்டன்
மணிகண்டன்

அதைத் தொடர்ந்து, மணிகண்டனையும் சுரேஸின் தாய் கனகவல்லியையும் திருச்சிக்கு அழைத்துவந்தனர். இன்று, திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதான திருமண மண்டபத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையின் முடிவில், திருவாரூரைச் சேர்ந்த முருகன் என்பவர்தான் இந்த கொள்ளைச் சம்பவத்தில் மூளையாகச் செயல்பட்டதும், இந்தக் கும்பல்மீது தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஏராளமான கொள்ளை வழக்குகள்  உள்ளதும்,  ஆந்திராவில் வங்கிக் கொள்ளை வழக்கில் முருகன் ஜாமீனில் வெளியே இருப்பதும் தெரியவந்தது.

`48 மணி நேர ஆபரேஷன்; 8 மணிநேர விசாரணை!' - திருச்சி நகைக்கடை கொள்ளையர்களை நெருங்கிய போலீஸார்

தற்போது, முருகனும் அவரது மைத்துனரான சுரேஷ் ஆகியோர் தலைமறைவாக உள்ள நிலையில், சுரேஷின் தாய் கனகவல்லி மற்றும் மணிகண்டன் ஆகியோரை திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி திரிவேணியின் முன்னிலையில்,  சற்று முன் போலீஸார் ஆஜர்படுத்தினர். தலைமறைவாக உள்ள முருகன் மற்றும் சுரேஷ் உள்ளிட்ட அவரது கூட்டாளிகள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குற்றவாளிகள் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படுவதால், மீண்டும் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.