Published:Updated:

`வழி விடுங்கன்னு சொன்னேன்; போலீஸ்காரங்க காலை உடைச்சிட்டாங்க!-பிள்ளைகளுடன் தவிக்கும் தொழிலாளி கண்ணீர்

பாதையை அடைத்து நின்ற மப்டி போலீஸாரிடம் வழிகேட்ட கூலித்தொழிலாளி கடுமையாகத் தாக்கப்பட்டு, அவரது கால் முறிவு ஏற்பட்ட சம்பவம் உறையூரில் நடந்துள்ளது.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

திருச்சி உறையூர் பாண்டமங்கலத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருக்கு மேனகா என்கிற மனைவியும், வைஷ்ணவி, கோபிகாஸ்ரீ என்கிற மகள்களும், தக்சன் என்கிற மகனும் உள்ளார்கள். பிளம்பர் வேலை செய்து ஜெயக்குமார் குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூலை 27-ம் தேதி காலை வேலைக்குச் சென்ற ஜெயக்குமார், பணியை முடித்துவிட்டு தனது மகள் வைஷ்ணவியுடன் வீடு திரும்பினார்.

மருத்துவமனையில் ஜெயக்குமார்
மருத்துவமனையில் ஜெயக்குமார்

அவர்கள் இருவரும் உறையூர் காவல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அங்கு சிலர் பாதையை அடைத்து நின்றபடி பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் சீருடையில் இல்லாத மப்டி போலீஸார் என்பது தெரியாத ஜெயக்குமார், சட்டென அவர், “கொஞ்சம் வழிவிட்டு நின்று பேசலாமே” என்று கூறிவிட்டாராம். அதுதான் தாமதம். இதனால் கோபமடைந்த போலீஸார், “போலீஸையே எதிர்த்து பேசுறியா எனக் கோபப்பட்டவர்கள், ஜெயக்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போதும் ஜெயக்குமார், யாராக இருந்தாலும் வழியை விட்டுப் பேச வேண்டியதுதானே.? எனக் கூற, கோபத்தின் உச்சத்துக்கே போன போலீஸார், ஜெயக்குமாரை கடுமையாகத் தாக்கியதுடன் வேனில் ஏற்றி காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று கடுமையாகத் தாக்கினர். இதில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து மருத்துவ சிகிச்சையிலிருந்து வரும் ஜெயக்குமார் தற்போது மெல்ல மெல்ல குணமடைந்து வருகிறார். ஆனாலும் அவரால் இயல்பாக நடக்க முடியவில்லை. இந்நிலையில், வளரும் தமிழகம் எனும் அமைப்பின் தலைவர் துரை. அரசன் என்பவர் உதவியின் மூலம் திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையம், தாழ்த்தப்பட்டோர் ஆணையம், முதல்வர் தனிப்பிரிவு, திருச்சி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்குப் புகார் கொடுத்துள்ளார்.

பத்திரிகையாளர் சந்திப்பு
பத்திரிகையாளர் சந்திப்பு

இந்நிலையில் நம்மிடம் பேசிய ஜெயக்குமார், “ வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது வழியை அடைத்துக்கொண்டு மப்டி போலீஸாரான சிறப்பு உதவிக் காவல் ஆய்வாளர் அழகு முத்து, செல்லபாண்டியன், இளங்கோவன் மற்றும் சுகுமார் உள்ளிட்ட சிலர் கும்பலாக நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். கொஞ்சம் வழிவிடுங்கள் என்று சொன்னேன்.

கோபப்பட்டு போலீஸை எதிர்த்து பேசுறியா என வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், கடுமையான வார்த்தைகளால் திட்டிக்கொண்டே போலீஸார் என்னைத் தாக்கினார். இந்தத் தாக்குதலில் கால் முறிந்ததால் மூன்று மாதமாக என்னால் நடக்க முடியவில்லை. இயல்பான வேலைகளையே துணையில்லாமல் செய்யமுடியல.
காயமடைந்த ஜெயக்குமார்

உடனே கோபப்பட்டு போலீஸை எதிர்த்து பேசுறியா என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். மேலும் கடுமையான வார்த்தைகளால் திட்டிக்கொண்டே என்னைத் தாக்கினர். அடுத்து சிலர் என்னைப்பற்றி விசாரித்தார்கள். அதன்பிறகு ஜாதியைச் சொல்லித் திட்டியதுடன், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கடுமையாகத் தாக்கினர். அவர்கள் பாட்டிலில் வைத்திருந்த மதுவை எனது வாயில் ஊற்றி நான் போதையில் பிரச்னை செய்ததாக சித்திரித்தார்கள். மேலும் நான் கொலை மிரட்டல் விடுத்ததாக என் மீது வழக்கு பதிவு செய்தனர்.

என்னுடன் வந்த எனது மகள் வைஷ்ணவி, நடந்த அனைத்தையும் எனது மனைவி மற்றும் உறவினர்களுடன் கூறியதையடுத்து, அவர்கள் என்னை மீட்டார்கள். இல்லையெனில் என்னை என்ன செய்திருப்பார்கள் தெரியவில்லை. அதனைத் தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டேன்.

மருத்துவமனையில் என்னைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், கால் முட்டி உடைந்து உள்ளதாகக் கூறி சிகிச்சை அளித்தார்கள். மூன்று மாதமாக என்னால் நடக்க முடியவில்லை. இயல்பான வேலைகளையே ஆட்கள் துணையில்லாமல் செய்யமுடியல. இதனால் கடந்த மூன்று மாதங்களாக மிகவும் சிரமப்படுகிறேன். நான் வேலைக்குச் செல்லாததால் எனது குடும்பமே மிகவும் சிரமப்படுகிறது. இது ஒரு பக்கம் என்றால் போலீஸாரின் மிரட்டல் இன்னொரு பக்கம் தொடர்கிறது.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

விசாரணைக்காக வந்த இன்ஸ்பெக்டர் அலாவுதீன், சம்பந்தப்பட்ட போலீஸாரிடம் பேசி பணம் வாங்கித் தருவதாகவும், எனக்கு வேலை கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும் கூறிக் கொடுத்த புகாரை வாபஸ் வாங்கும்படி கூறினார். அதற்கு மறுத்துவிட்டேன். மேலும் வழக்கறிஞர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மூலமும் மிரட்டி வருகிறார். இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரணை நடத்திச் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் பலனில்லை.

இப்போதும் கடுமையான வலிகள் இருக்கிறது. என்னால் நடக்கவே முடியவில்லை. போலீஸார் செய்த தவற்றை மறைப்பதற்காகத் தொடர்ந்து பல்வேறு தவறுகளைச் செய்து வருகிறார்கள். நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்கத் தேவையான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. வழி விடுங்கள் எனச் சொன்னதற்காக என் மீது இவ்வளவு கொடூரமாக தாக்கிய அதிகாரிகளை சட்டப்படி தண்டிக்க வேண்டும்” என்றார்.

Vikatan

ஜெயக்குமார் கொடுத்த புகாரின் குற்றச்சாட்டுகள் குறித்து கடந்த சில தினங்களாக டிஎஸ்பி தலைமையில் போலீஸார் விசாரணை நடத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்நிலையில் போலீஸாரோ, “ஜெயக்குமார்தான் குடிபோதையில் போலீஸாரிடம் தகராறு செய்தார். இது குறித்து கேட்கப் போன காவலர்களை அவர் தாக்கவும் முன்றார். கடும்போதையில் ஜெயக்குமார், இரு சக்கர வாகனத்தில் விழுந்ததாலேயே அவருக்குக் கால் முறிவு ஏற்பட்டது. அதை மறைத்து போலீஸார் தாக்கியதால் ஜெயக்குமாருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறுவதில் துளியும் உண்மையில்லை” என்கிறார்கள்.