Published:Updated:

சிறார் வதை வீடியோ விவகாரம்- முதல் நபராகத் திருச்சி மெக்கானிக் கைது!

இணையத்தில் போலி கணக்கு மூலம் சிறார் வதை வீடியோக்களை பதிவிட்ட ஏ.சி.மெக்கானிக் ஒருவர் திருச்சியில் கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜ்
கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜ்

இணையத்தில் சிறார் வதை படங்களைப் பதிவேற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை பாயும் எனக் கடந்த சில தினங்களுக்கு முன்பு, தமிழகப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவின் கூடுதல் டி.ஜி.பி ரவி தெரிவித்தார்.

இந்நிலையில், நாடு முழுக்க சிறார் வதை வீடியோக்கள், படங்கள் ஆகியவற்றைப் பார்த்தவர்கள், பதிவிறக்கம் செய்து வைத்திருப்பவர்கள் ஆகியோரின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் தமிழகக் காவல்துறைக்கு அனுப்பியுள்ளதாகவும் அதன் அடுத்தகட்ட நடவடிக்கையாகப் பட்டியலில் இருப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

சிறார் வதை
சிறார் வதை

அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை மற்றும் திருச்சியில் சிறார் வதை வீடியோக்களை பதிவிட்ட 60 பேருக்கு சம்மன் அனுப்பட்டது. அதிலும் அதிக சிறார் வதை வீடியோக்கள் திருச்சியிலிருந்து வெளியானதாகத் தகவல் பரவியது. இந்நிலையில், திருச்சியைச் சேர்ந்த ஏசி மெக்கானிக் கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜ் என்பவர் சிறார் வதை வீடியோக்களை பதிவேற்றம் செய்ததாக போலீஸாரால் இன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

`இது போர்னோகிராஃபி அல்ல; சிறார் வதை வீடியோக்கள்!’ - தவற்றைச் சுட்டிக் காட்டிய IWF

இந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜ் திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்தவர். ஏசி மெக்கானிக் வேலை செய்து வரும் இவர், நிலவன் ஆதவன் என்கிற போலி பெயரில் சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் மூலம் அதிக அளவிலான வீடியோக்களை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது திருச்சி கன்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீஸார் அல்போன்ஸ்ராஜை கைது செய்து விசாரணை நடத்தினர். அவரை திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். அப்போது அவருக்கு 15 நாள்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையே, போலீஸாரின் விசாரணையில் சென்னை மற்றும் திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3,000-க்கும் அதிகமானோர் போலி கணக்குகளில் சமூக வலைதளங்களில் பெண்கள் மற்றும் சிறார் வதை ஆபாச வீடியோக்களை வெளியிட்டிருப்பது தெரியவந்துள்ளது.

திருச்சி மகளிர் நீதிமன்றம்
திருச்சி மகளிர் நீதிமன்றம்

சம்பந்தப்பட்டவர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருவதாகவும் அடுத்தகட்டமாகக் கைது நடவடிக்கைகள் இருக்கும் என்கிறார்கள். முதல்கட்டமாகத் திருச்சியில், சிறார் வதை வீடியோக்களை வெளியிட்டதாகச் சந்தேகப்படும் 60 பேரின் ஐ.பி முகவரியைக் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு உள்ளூர் போலீஸுக்கு அனுப்பியுள்ளது. கைது தொடர வாய்ப்பு உள்ளது என்றும், கைது செய்யப்பட்ட கிறிஸ்டோபர் அல்போன்ஸ் மீது போக்ஸோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது. சிறார் மற்றும் பெண்கள் வதை வீடியோக்களை வெளியிட்டதற்காக திருச்சியில் ஏசி மெக்கானிக் ஒருவர் கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Vikatan