Published:Updated:

`ஆசையைத் தூண்டினோம்; பணமழை கொட்டியது!' - திருச்சி போலீஸை அதிரவைத்த பிட்காயின் மோசடிக் கும்பல்

``நாம நல்லா இருக்கணும்னா மக்களின் ஆசையைத் தூண்டணும், அதையே மூலதனமாக வைத்துப் பணம் பார்க்கணும்"

பிட் காயின்
பிட் காயின்

‘பிட்காயின்’ எனப்படும் கிரிப்டோ கரன்சி எனும் பணமில்லா பரிவர்த்தனை இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் தொடர்ந்து அம்பலமாகும் பிட் காயின் மோசடிகள் பகீர் ரகமாகவே உள்ளன.

Vikatan

கடந்த சில தினங்களுக்கு முன்பு, கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில், ஆன் லைன் மூலம் வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை செய்வதாக ரூ.2,000 கோடிக்கு மேல் `பிட்காயின்’ மோசடி அம்பலமானது. இந்த மோசடி தொடர்பாக மதுரையைச் சேர்ந்த ராஜதுரை மற்றும் அவரது மனைவி சுவேதா உள்ளிட்ட 5 பேரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

‘பிட்காயின்’ மோசடியில் கைது செய்யப்பட்டவர்கள்
‘பிட்காயின்’ மோசடியில் கைது செய்யப்பட்டவர்கள்

இந்நிலையில், அதே கும்பல், திருச்சியிலும் ரூ.31.15 லட்சம் மதிப்பிலான பிட்காயின் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அடுத்துள்ள சங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராசு. இவரது மகன் முருகேசனுக்கு, அப்பகுதியில் உள்ள ஆலவயல் கிராமத்தில் சிங்கப்பூர் மெடிக்கல் கடை நடத்தி வரும் புதுக்கோட்டை, பொன்னமராவதி அடுத்துள்ள புலவனார்குடியைச் சேர்ந்த கார்த்திக்கின் அறிமுகம் கிடைத்தது.

அப்போது அவர், திருச்சி ஜங்ஷன் வழிவிடுவேல் முருகன் கோயில் அருகே ராஜதுரை-சுவேதா தம்பதி நடத்தி வரும் `பிட் டூ பி.டி.சி. ஸ்டாக்கீஸ்ட் மார்ட்’ எனும் பிட்காயின் ஆன்லைன் நிறுவனத்தில் ஏஜென்டாகச் செயல்படுவதாகக் கூறினார். அதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் 20ம்தேதி முருகேசனைச் சந்தித்த கார்த்திக், தங்கள் நிறுவனத்தில் பெருந்தொகையை முதலீடு செய்தால், ஆன்லைன் வர்த்தகம் மூலம் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை கமிஷன் கிடைக்கும் என்றும், இதனால், அதிக வருவாய் ஈட்டலாம் என்றும் கூறினாராம்.

தொடர்ந்து, பிட்காயின் மோசடியில் தலைமறைவாக உள்ள ராஜதுரை சுவேதா ஆகியோருடன் டெல்லியைச் சேர்ந்த சிம்ரன் கபூர், மத்தீப் கபூர், மரியசெல்வம் மற்றும் அந்த நிறுவனத்தில் ஏஜென்டுகளாகச் செயல்படும் குட்டிமணி, கணேசன், தங்கராஜ் ஆகியோர் தங்கள் நிறுவனத்தில் ரூ.700 முதலீடு செய்தால் நாள் ஒன்றுக்கு ரூ.3 முதல் ரூ.50 வரை லாபம் சம்பாதிக்கலாம் என்றும் கூறினார்களாம்.

ராஜதுரை - ஸ்வேதா
ராஜதுரை - ஸ்வேதா

கார்த்திக், முருகேசனின் பக்கத்து ஊர்க்காரர் என்பதால், அவர்களது வார்த்தைகளை நம்பியவர், திருச்சியில் ராஜதுரை சுவேதா தம்பதியர் நடத்திவந்த ஆன்லைன் வணிக நிறுவனத்தில் ரூ.36.40 லட்சம் முதலீடு செய்தாராம். முதல் தவணையாக கமிஷன் தொகை ரூ.5.25 லட்சத்தை உடனே முருகேசனிடம் ஒப்படைத்துள்ளனர். ஆனால், அதன்பிறகு எவ்வித கமிஷன் தொகையையும் முருகேசனுக்கு வழங்கவில்லை.

தொடர்ந்து இதுகுறித்து முருகேசன், கார்த்திக்கிடம் கேட்டபோது, பிட்காயின் அந்நிறுவனத்தை மூடிவிட்டு ராஜதுரை-சுவேதா உட்பட அந்நிறுவனத்தைச் சேர்ந்த சிலர் தலைமறைவாகி விட்டது தெரியவந்தது. இதையடுத்து, தனக்கு வரவேண்டிய ரூ.31.15 லட்சத்தை மோசடி செய்தவர்கள் மீது திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸில் முருகேசன் புகார் கொடுத்துள்ளார்.

புகாரின்பேரில், மோசடியில் ஈடுபட்ட ராஜதுரை, சுவேதா மற்றும் கார்த்திக் உள்ளிட்ட 10 பேர் மீது மாநகரக் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகர் வழக்குப் பதிவு செய்தார். அவர்கள் மீது, தொழில்நுட்பச் சட்டம் மற்றும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் மோசடி, ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றுதல் மற்றும் நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

‘பிட்காயின்’ மோசடியில் கைது செய்யப்பட்டவர்கள்
‘பிட்காயின்’ மோசடியில் கைது செய்யப்பட்டவர்கள்

அதைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார், நாமக்கல் மாவட்டம் கொசவப்பட்டி பகுதியைச் சேர்ந்த ரமேஷ், புலவனார்க்குடியைச் சேர்ந்த கார்த்திக், திருச்சி மண்ணச்சநல்லூர் அடுத்த வால்மால் பாளையத்தைச் சேர்ந்த குட்டிமணி, கணேசன், தங்கராஜ் உள்ளிட்ட 5 பேரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், ``நாம நல்லா இருக்கணும்னா மக்களின் ஆசையைத் தூண்டணும், அதையே மூலதனமாக வைத்து பணம் பார்க்கணும்” என ராஜதுரை அடிக்கடி சொல்வார். நாங்கள் நினைத்துப் பார்க்காத அளவுக்கு பணம் வந்தது. பாதிக்கப்பட்டவர்கள் பணத்தைக் கேட்கும்போது, பணத்தை பிட்காயினாக மாத்தி வச்சிருக்கோம். மொத்தப் பணமும் வெளிநாட்டு டாலராக உள்ளது. கொஞ்ச நாள் வெயிட் பண்ணினால் அதிக வட்டியுடன் திரும்பக் கிடைக்கும்’னு சமாளித்தோம். ஆனால் பாதிக்கப்பட்டவங்க போலீஸ்ல புகார் கொடுத்துட்டாங்க. இக்கட்டான சூழலில், அவர் எங்களைக் காப்பாற்றுவார் என நம்பினோம். ஆனால் அவர்கள் மட்டும் தப்பிச்சிட்டாங்க. அவரது நிறுவனத்தில் பணியாற்றியவர்களும் நாங்களும் மாட்டிக்கிட்டோம் என்று சொன்னார்களாம்.

ஆன்லைன் வியாபாரம்; 2 ஆயிரம் கோடி வசூல்!- ஈரோட்டில் பிட்காயின் பெயரில் மோசடி

கைது செய்யப்பட்டவர்கள் கூறிய தகவல்களின் அடிப்படையில், தலைமறைவாகியுள்ள ராஜதுரை, சுவேதா, மரியசெல்வம், சிம்ரன் கபூர், மத்தீப் கபூர் ஆகிய ஐந்து பேரை போலீஸார் தேடி வருகிறார்கள். தமிழகத்தில் ஆங்காங்கே பூதாகரமாகும் பிட்காயின் மோசடிகள் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.