Published:Updated:

சைபர் கிரைம்:`பெண்களின் படங்கள் விற்பனை!'- திருச்சியில் சிக்கிய கால்நடை மருத்துவர்

கைதான மருத்துவர் அருள்
கைதான மருத்துவர் அருள்

பெண்களின் புகைப்படங்களைத் தவறாகக் கையாளும் பல இணையதளங்களில் இவர் மெம்பராக இருந்திருக்கிறார். அத்தோடு, அந்த இணையதளங்களில் வரும் பெண்களின் புகைப்படங்களை டவுன்லோடு செய்து எக்கச்சக்கமாக வைத்திருக்கிறார்.

சிறுவயது பெண்களின் புகைப்படத்தை இணையதளத்திலிருந்து டவுன்லோடு செய்து அதனை மற்ற நபர்களுக்குப் பேரம் பேசி விற்ற கால்நடை மருத்துவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து நான்கு சிம் கார்டுகள், இரண்டு செல்போன் மற்றும் லேப்டாப் பறிமுதல் செய்திருக்கும் விவகாரம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மகளிர் காவல்நிலையம்
திருச்சி மகளிர் காவல்நிலையம்

தமிழகம் முழுவதும் ஆபாசப் படங்களைப் பதிவிறக்கம் செய்வது மற்றும் பதிவேற்றம் செய்வது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை போலீஸார் கண்காணித்து வருகிறார்கள். குறிப்பாகப் பெண் குழந்தைகளின் ஆபாசப்படங்களை மொபைல்கள், லேப்டாப்களில் பதிவிறக்கம் பதிவேற்றம் செய்வோரை சைபர் க்ரைம் போலீஸார் மறைமுகமாகக் கண்காணித்து வருவதோடு, அவர்களைக் கண்டுபிடித்து அவர்கள் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டு வருகிறது.

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் அதிகாரிகள் குடியிருப்பில் வசித்து வருபவர் அருள். இவர், மணப்பாறையை அருகேயுள்ள பூலாம்பட்டி என்ற கிராமத்தில் கால்நடை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் தொடர்ந்து இணையதளங்களில் பெண்களின் ஆபாசப் படங்களை டவுன்லோடு செய்து செய்வது அப்லோட் செய்வதுமாக இருந்துள்ளார்.

திருச்சி ரயில் நிலையம்
திருச்சி ரயில் நிலையம்

மேலும், இணையதளத்தில் போலியான ஐடியை இளைஞரின் படத்தை மாற்றி வைத்து பெண்களுடன் பாலியல் எண்ணத்தைத் தூண்டுவதுமாக தொடர்ந்து ஈடுபட்டுவந்துள்ளார். இதற்காக இவர், பல சிம் கார்டுகளையும் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. பாலியல் நோக்கத்தில் இணையதளத்தை சமூக சீர்கேட்டிற்குப் பயன்படுத்தி வந்ததை மாநகர சைபர் க்ரைம் போலீஸார் க் கண்காணித்து வந்தனர். இதையடுத்து, அவரின் முகவரியைக் கண்டறிந்து திருச்சி கன்டோன்மென்ட் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் ஆய்வாளர் ஆனந்தவல்லி வழக்குப்பதிந்து கால்நடை ஆய்வாளர் அருளை போஸ்கோ உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் அவர் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து 4 சிம் கார்டுகள் இரண்டு செல்போன்கள் ஒரு லேப்டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மயிலாடுதுறை: வீட்டில் இருந்த சிறுமி; சிறார் வதை கொடுமை! - போக்ஸோ சட்டத்தில் வாலிபர் கைது

வழக்கை விசாரித்து வரும் போலீஸாரிடம் பேசினோம். ``அருள் என்பவர் வெட்னரி டாக்டராக வேலை பார்த்து வருகிறார். பெண்களைத் தவறாகக் கையாளும் பல இணைய தளங்களில் இவர் மெம்பராக இருந்திருக்கிறார். அத்தோடு அந்த இணையதளங்களில் வரும் பெண்களின் புகைப்படத்தை டவுன்லோடு செய்து எக்கச்சக்கமாக வைத்திருக்கிறார். அதனைத்தொடர்ந்து இவர் ஃபேஸ்புக் ஐ.டி மற்றும் பல இணையதளங்களில் அவரே பல குரூப்க்களை ஃபார்ம் பண்ணி வைத்திருக்கிறார்.

கைதான மருத்துவர் அருள்
கைதான மருத்துவர் அருள்

அதில், அந்த பெண்களின் புகைப்படத்தை அனுப்பி அந்தப் பெண்களுக்கு விலை பேசுவது உள்ளிட்ட வேலைகளைச் செய்து இருக்கிறார். இவரின் செயல்பாடுகளைத் தொடர்ந்து மாநகர சைபர் க்ரைம் போலீஸார் கண்காணித்திருக்கிறார்கள். அத்தோடு, வீடியோவை ஒன்றையும் இவரே இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறார். அதன் அடிப்படையில்தான் அவரது ஐ.பி அட்ரஸை எடுத்து எங்களுக்கு அனுப்பி விசாரிக்கச் சொன்னார்கள். அதன் பெயரில் விசாரணை நடத்தி அவரை கைது செய்தோம். அவரது செல்போன்களை பார்த்தபோது நாங்களே அதிர்ந்து போனோம். இப்போதுதான் விசாரிக்கத்தொடங்கியிருக்கிறோம் பிறகு பேசுகிறோம்" என்று முடித்துக் கொண்டனர்.

அடுத்த கட்டுரைக்கு