Published:Updated:

`48 மணி நேர ஆபரேஷன்; 8 மணிநேர விசாரணை!' - திருச்சி நகைக்கடை கொள்ளையர்களை நெருங்கிய போலீஸார்

லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களை 48 மணி நேரத்தில் போலீஸார் நெருங்கியுள்ளனர்.

lalitha jewellery
lalitha jewellery

கடந்த 2ம்தேதி அதிகாலை திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் தமிழகத்தையே அதிரவைத்தது. கல்லூரிக்கு அருகேயுள்ள மைதானம் வழியாக வந்த கொள்ளையர்கள் கடையின் சுவரில் துளையிட்டு தரைதளத்தில் இருந்த நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

நகைக்கடை கொள்ளை
நகைக்கடை கொள்ளை

இதுதொடர்பாக லலிதா ஜுவல்லரி நகைக் கடையின் மேலாளர் நாகப்பன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி கோட்டைக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். தகவலறிந்த திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் மற்றும் துணை ஆணையர்கள் மயில்வாகனன், நிஷா, திருச்சி மாவட்ட எஸ்.பி ஜியா உல்ஹக் உள்ளிட்டோர் நேரில் விசாரணை நடத்தினர்.

நகைக்கடை கொள்ளை
நகைக்கடை கொள்ளை

கொள்ளையர்களைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. முதல்கட்டமாகக் கடையில் பணியாற்றிய 160-க்கும் மேற்பட்ட பணியாளரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இறுதியாகக் கொள்ளையடிக்கப்பட்ட நகை 30 கிலோ தங்கம் மற்றும் வைரம், பிளாட்டினம் ஆபரணங்கள் என்றும், அதன் மதிப்பு சுமார் ரூ.13 கோடி இருக்கும் என்றும் மதிப்பீடு செய்யப்பட்டது.

கொள்ளையர்களின் திட்டம்

சம்பவ இடத்தில் மோப்பநாய் மற்றும் தடய அறிவியல் துறையினர் விசாரணை நடத்தினர். தடயங்களை அழிக்கக் குற்றவாளிகள் மிளகாய்ப்பொடி தூவிச் சென்றது தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல் கொள்ளையர்கள் தங்களின் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக மிக்கி மவுஸ் முகமூடி, ஜெர்கின் மற்றும் கையுறைகள் அணிந்திருந்தது கடையில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல் கொள்ளையர்கள் சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு மேலாகக் கடைக்குள் இருந்துள்ளனர். தெளிவாகத் திட்டமிட்டபடி நகைகளை கைப்பைகளுக்குள் எடுத்து வைப்பது சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ வெளியானதால் பரபரப்பானது.

மீட்கப்பட்ட தங்க நகைகள்
மீட்கப்பட்ட தங்க நகைகள்

அதையடுத்து திருச்சி மட்டுமல்லாமல் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் சந்தேகப்படும் நபர்கள் குறித்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்படி, புதுக்கோட்டை பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த 6 நபர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களுக்குத் திருச்சியில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் தொடர்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகிக் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில்தான், திருவாரூர் மடப்புரம் பாலம் அருகே நேற்றிரவு எஸ்.ஐ பாரதநேரு தலைமையிலான போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை நிறுத்தி போலீஸார் விசாரணை நடத்தினர். அவர்கள் வைத்திருந்த அட்டைப் பெட்டிகளில் நகைகள் இருந்தது தெரியவந்தது. சந்தேகத்துக்கிடமான அவர்களை மடக்கிய போலீஸார் விசாரித்துக் கொண்டிருக்கும்போது ஒருவர் தப்பி ஓடினார்.

பங்கு போட்ட கொள்ளையர்கள்

போலீஸாரிடம் சிக்கிய நபரைத் திருவாரூர் நகரக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீஸார், ஏடிஎஸ்பி அன்பழகன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், அவர்கள் வைத்திருந்த அட்டைப்பெட்டியில் தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. மேலும், அந்த நபர் திருவாரூர் மடப்புரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பதும், தப்பி ஓடியவர் சீராத்தோப்பு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பதும் தெரியவந்தது.

மணிகண்டன்
மணிகண்டன்

கைது செய்யப்பட்ட மணிகண்டனிடமிருந்து சுமார் 4.5 கிலோ தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன. அந்தநகைகள், லலிதா ஜுவல்லரி நகைக்கடை தங்க நகை பார்கோடுகளுடன் ஒத்திருப்பது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. அந்த நகைக் கொள்ளையில் ஈடுபட்டதற்காக மணிகண்டனுக்கு வழங்கப்பட்ட பங்கு நகைகள் என்பதும் உறுதி செய்யப்பட்டது.

8 மணி நேரமாகத் தொடரும் விசாரணை

அதைத் தொடர்ந்து மணிகண்டனிடம் தஞ்சாவூர் டி.ஐ.ஜி லோகநாதன் நேரில் விசாரணை நடத்தினார். தொடர்ந்து தப்பியோடிய கொள்ளையன் சுரேஷின் தாய் கனகவள்ளி மற்றும் அவரது நண்பர்களான மாரியப்பன், ரவி, குணா உள்ளிட்ட 5 பேரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சுரேஷ்
சுரேஷ்

தப்பியோடிய சுரேஷ் திருவாரூர் முருகன் என்பவரின் உறவினர் என்பதும், பல்வேறு மாநிலங்களில் நடந்த மிகப்பெரிய கொள்ளைச் சம்பவங்களில் இந்த முருகனுக்கு முக்கிய பங்கு இருப்பதும் தெரியவந்தது. அதனால், பல்வேறு மாநிலங்களில் முருகன் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் என்பதும் போலீஸார் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இந்நிலையில் திருவாரூர் முருகன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கைவரிசையைக் காட்டியது தெரியவந்துள்ளது. தொடர்ந்து தப்பியோடிய சுரேஷ் குமாரை கைது செய்வதற்காக போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர்.

திருச்சி டு திருவாரூர்

கைது செய்யப்பட்ட மணிகண்டனிடம் விசாரணை நடத்துவதற்காகத் திருச்சி மாநகர காவல்துறை கண்காணிப்பாளர் அமல்ராஜ் மற்றும் துணை ஆணையர் மயில்வாகனன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் நேற்று இரவு திருச்சியிலிருந்து திருவாரூர் சென்றனர். இந்நிலையில் மணிகண்டனை திருச்சி அழைத்து வராமல் ரகசிய இடத்தில் வைத்துத் தொடர்ந்து 8 மணிநேரத்திற்கு மேலாகத் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

`திருவாரூர்' முருகன்
`திருவாரூர்' முருகன்

இந்தக் கொள்ளையில் சுரேஷ், மணிகண்டன் மட்டுமல்லாமல் 5 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். தற்போது, ஜாமீனில் வெளியே இருக்கும் முருகன் அவரின் சகாக்களான கூட்டாளி மணிகண்டன் மற்றும் கோபால் ஆகியோர் உதவியுடன் இந்த நகைக் கடை கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்கிற கோணத்திலும் போலீஸார் விசாரணை தொடர்கிறது.

கடந்த இரண்டாம் தேதி திருச்சி மாநகர போலீஸார் விசாரணையைத் தொடங்கியபோது கொள்ளையர்கள் குறித்து எவ்வித தடயங்களும் சிக்கவில்லை. ஆனாலும், போலீஸார் குற்றவாளிகளை விரைவில் பிடிப்போம் என்று நம்பிக்கையுடன் கூறி வந்தனர். சொன்னதைப் போல் 48 மணி நேரத்தில் போலீஸார் குற்றவாளிகளை நெருங்கிவிட்டதுடன், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை மடக்கிப் பிடித்துள்ளனர்.

`3 மாநிலங்களில் கைவரிசை; வங்கிகள்தான் முதல் இலக்கு!' - திருச்சி கொள்ளையில் சிக்கிய கும்பலின் பின்னணி

லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களை 48 மணி நேரத்தில் போலீஸார் நெருங்கியுள்ளனர். போலீஸாரின் தொடர் விசாரணை நடைபெறுகிறது. விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் சம்பவங்கள் வெளியாகும் என்பதால் பரபரப்பு கூடியுள்ளது. .