Published:Updated:

`திருச்சி டு ஹரியானா; ஒற்றைப் புகைப்படம்!’- தப்பிய நைஜீரியக் கைதியைத் துரத்திப் பிடித்த தனிப்படை

வெளிநாடு செல்ல முகாமிலிருந்து தப்பிய நைஜீரியக் கைதி ஒருவரை திருச்சி போலீஸார் ஹரியானா மாநில எல்லையில் கைது செய்துள்ளனர். இதற்காக தனிப்படை போலீஸாரை நீதிபதி முதல் சாமானியர்கள் வரை பாராட்டி வருகிறார்கள்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஸ்டீபன் ஜான் அப்புச்சி
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஸ்டீபன் ஜான் அப்புச்சி

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ளது திருச்சி மத்தியச் சிறைச்சாலை. அதே சிறைச்சாலை வளாகத்தில் சிறப்பு அகதிகள் முகாம் உள்ளது. இங்கு குற்ற வழக்குகளில் சிக்கிய இலங்கைத் தமிழர்கள், வங்கதேசம், நைஜீரியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சிறப்புமுகாம் சிறைச்சாலைபோல் இல்லாமல், அனைத்து வசதிகளும் உள்ள விடுதியைப் போன்று இருக்கும். கூடவே 24 மணி நேரக் காவல் கண்காணிப்பு இருக்கும்.

அந்தவகையில் 2013-ம் ஆண்டு பாஸ்போட் இல்லாமல் திருப்பூரில் சுற்றித் திரிந்த நைஜீரியாவைச் சேர்ந்த 32 வயதான ஸ்டீபன் ஜான் அப்புச்சி என்பவரைக் கைது செய்த போலீஸார், திருச்சி சிறப்பு முகாமில் அடைத்தனர்.

 ஸ்டீபன் ஜான் அப்புச்சி
ஸ்டீபன் ஜான் அப்புச்சி

இந்நிலையில் கடந்த ஜூலை 19 -ம் தேதி இரவு முதல் ஸ்டீபன் ஜான் அப்புச்சி திருச்சி சிறப்பு முகாமிலிருந்து தப்பிச் சென்றது போலீஸாருக்குத் தெரியவந்தது. தொடர்ந்து போலீஸார் சிறப்பு முகாம் வளாகத்தில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அந்த கேமராக்களிலும் முகாமிலிருந்து தப்பிச்சென்ற ஸ்டீபன் ஜான் அப்புச்சி குறித்து எதுவும் பதிவாகவில்லை. இதேபோல், போலீஸார் சிறைச்சாலை எதிரே உள்ள திருச்சி மாநகரப் போக்குவரத்து போலீஸாரின் சிசிடிவி கேமரா பதிவுகளைப் பரிசோதித்தனர். அதிலும் பலனில்லை. தொடர்ந்து அன்றைய தினம் திருச்சி மத்திய சிறை வளாகத்திற்கு வந்து போன வாகனங்கள் குறித்த பதிவேடுகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.

அப்படி ஆய்வு செய்ததில், திருச்சி சிறப்பு அகதிகள் முகாமிற்கு அன்றைய தினம் தண்ணீர் லாரி வந்து சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து போலீஸாரின் விசாரணையில், முகாமிற்கு வந்து சென்ற தண்ணீர் லாரியில் ஸ்டீபன் தப்பிச் சென்றது தெரியவந்தது. பலத்த கண்காணிப்பு உள்ள திருச்சி மத்திய சிறை வளாகத்திலிருந்து, திரைப்பட பாணியில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த கைதி ஒருவர் தப்பிச் சென்ற விவகாரம் பூதாகரம் ஆனது.

தொடர்ந்து திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின்பேரில், திருச்சி கே.கே.நகர் ஆய்வாளர் சகாய அன்பரசு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதையடுத்து திருச்சி மாநகர தனிப்படை போலீஸார், தமிழகம் மட்டுமல்லாமல் மும்பை, டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து தீவிரமாகத் தேடி வந்தனர். போலீஸாரிடம் தப்பிய கைதியின் போட்டோ மட்டுமே இருந்ததால் ஆரம்பத் தேடுதலில் போலீஸார் பல சவால்களைச் சந்தித்தனர்.

ஹரியானாவில் திருச்சி தனிப்படை போலீஸார்
ஹரியானாவில் திருச்சி தனிப்படை போலீஸார்

இந்நிலையில் தப்பியோடிய கைதி ஸ்டீபன் ஜான் அப்புச்சி, மீண்டும் போலி பாஸ்போர்ட் எடுத்து அவரின் சொந்த நாடான நைஜீரியாவுக்குத் தப்பிச் செல்ல இருப்பதாகவும், அவர் மும்பையில் தங்கியிருப்பதாக திருச்சி தனிப்படை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து தனிப்படை போலீஸார் மும்பை சென்றனர். ஆனால் போலீஸார் தன்னை நோட்டம் விடுவதைத் தெரிந்துகொண்ட ஸ்டீபன் ஜான் அப்புச்சி அங்கிருந்து டெல்லிக்குத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் விடாமல் அவரைத் துரத்திய தனிப்படை போலீஸார் டெல்லி சென்றனர். அங்கிருந்து ஹரியானா மாநிலம் தப்பிச் சென்று ரகசிய இடத்தில் பதுங்கியிருந்த ஸ்டீபன் ஜான் அப்புச்சியைத் திருச்சி தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

57 நாள்களுக்குப் பிறகு திருச்சி சிறப்பு முகாமிலிருந்து தப்பிய கைதி ஒருவரை `தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்பட பாணியில் விரட்டிச் சென்று கைது செய்த போலீஸாருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட  ஸ்டீபன் ஜான் அப்புச்சி
திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஸ்டீபன் ஜான் அப்புச்சி

இந்நிலையில் டெல்லி - ஹரியானா எல்லைப்பகுதியில் கைது செய்யப்பட்ட ஸ்டீபன் ஜான் அப்புச்சி திருச்சி கே.கே.நகர் ஆய்வாளர் சகாய அன்பரசு தலைமையிலான தனிப்படை போலீஸார் திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2 நீதித்துறை நடுவர் திரிவேணி முன்பு ஆஜர்படுத்தினர். இந்நிலையில் நீதித்துறை நடுவர் ஸ்டீபன் ஜான் அப்புச்சியை வரும் 30-ம் தேதி வரை சென்னைப் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் ஸ்டீபன் ஜான் அப்புச்சி சிக்கியது தொடர்பாக நம்மிடம் பேசிய போலீஸார், “ திருச்சி சிறப்பு முகாமிலிருந்து தப்பிய ஸ்டீபன் ஜான் அப்புச்சி குறித்த எந்தத் தகவலும் இல்லை. தொடர்ந்து எங்களின் விசாரணையில் திருப்பூரில் சட்டவிரோதமாகச் சுற்றி வந்ததாகக் கைது செய்யப்பட்ட இவர், கொஞ்ச நாள் சென்னைப் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வடமாநிலக் கொள்ளைக்காரர் நாதுராம் என்பவருடன் நெருக்கமாக இருப்பதும், அவர்களுடன் சேர்ந்து போதை மற்றும் பல்வேறு சர்வதேசக் கடத்தல் சம்பவங்களுக்குத் திட்டமிட்டு இருப்பதும் தெரியவந்தன. இந்நிலையில் திருச்சி சிறப்பு முகாமிற்கு மாற்றப்பட்ட பிறகுதான், வடமாநிலக் கொள்ளைக் கும்பலின் தலைவனான நாதுராம் கும்பலுடன் ஸ்டீபனுக்குத் தொடர்பு இருப்பது தெரிந்தது. சிறப்பு முகாமிலிருந்து தப்பிய ஸ்டீபன் புகைப்படம் மட்டும்தான் எங்களிடம் இருந்தது. ஆனால் நாதுராமுக்கு நெருக்கமான சிலருடன் ஸ்டீபன் பேசி வந்தது எங்களுக்குத் தெரியவந்தது.

ஸ்டீபன் ஜான் அப்புச்சி, தனது முகநூல் பக்கத்தில் துப்பாக்கியுடன் இருந்த புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அவை சமீபத்தில் அழிக்கப்பட்டுள்ளன.
-

அதையடுத்து ஸ்டீபன் பயன்படுத்திவந்த செல்போன் டவர் மூலம் அவரைப் பின்தொடர்ந்து வந்தோம். இந்நிலையில் அவர் பெங்களூரு, மும்பை, டெல்லி எனப் பல இடங்களில் மாறி மாறி தங்கியிருந்ததால், அவனைப் பிடிப்பதில் எங்களுக்குச் சிரமம் இருந்தது. ஆனாலும் இன்னும் சில தினங்களில் வெளிநாடு தப்பிச்சென்றால் அவரைப் பிடிக்க முடியாது என்கிற நிலையில் பொறி வைத்துப் பிடித்தோம். எங்களுக்கு ஹரியானா மாநில போலீஸார் மிகவும் உதவி செய்தார்கள். பல சிரமங்களைக் கடந்து தான் 57 நாள்களுக்குப் பிறகு எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட கடமையைச் சரியாக முடித்துள்ளோம்” என்றார்.

ஸ்டீபன் ஜான் அப்புச்சி, தனது முகநூல் பக்கத்தில் துப்பாக்கியுடன் இருந்த புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அவை சமீபத்தில் அழிக்கப்பட்டுள்ளன. இவை எல்லாம் அவர் சிக்குவதற்கு வழிவகுத்தது என்கிறார்கள் போலீஸார்கள். தனிப்படை போலீஸாருக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்துவருகின்றன.