Published:Updated:

`வங்கிக் கொள்ளையில் சிக்கல; நகைக்கடையைக் குறிவச்சோம்!' - போலீஸாரை அதிரவைத்த முருகன்

வங்கியில் கொள்ளையடித்த எங்களை போலீஸார் நெருங்கவே இல்லை. அதனால், திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையைக் குறிவைத்தோம் என முருகன் கொடுத்த வாக்குமூலத்தால் போலீஸாரே அதிர்ந்து கிடக்கிறார்கள். 

murugan
murugan

கடந்த 2-ம்தேதி அதிகாலை திருச்சி லலிதா ஜூவல்லர்ஸ் நகைக்கடையில் 13 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளிகளை போலீஸார் தேடிவந்தார்கள்.

கொள்ளை நடந்த அடுத்த சில தினங்களில் திருவாரூர் போலீஸாரால் மணிகண்டன், சுரேஷின் தாய் கனகவல்லி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு திருச்சி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், முக்கிய குற்றவாளிகளாகக் கருதப்பட்ட முருகன், சுரேஷ் உள்ளிட்ட 8 பேர் குறித்து விசாரித்து வந்தனர். மேலும், கொள்ளை நகைகளை உருக்கி விற்பனை செய்த நாகப்பட்டினம் காளிதாஸ் உள்ளிட்ட 3 பேரையும், சுரேஷின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தாரை போலீஸார் அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வந்தனர்.

lalitha jewellery
lalitha jewellery

8 நாள்களுக்கு மேலாகத் தனிப்படை போலீஸார், பெங்களூரு, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்திவந்தனர். இந்த நிலையில், கடந்த 10-ம் தேதி திருவண்ணாமலை செங்கம் நீதிமன்றத்தில் சுரேஷ் சரணடைந்தார். மறுநாள் பெங்களூரு சிட்டி சிவில் 11வது கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் குற்றவியல் நீதிமன்றத்தில் முருகன் சரணடைந்தார். பெங்களூரு பனஸ்வாடி பகுதியில் நடந்த கொள்ளை வழக்கில் சரணடைந்த அவர், பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் முருகன், திருச்சி திருவெறும்பூர் அடுத்த வேங்கூர் பகுதியில் கடந்த 3 மாதங்களாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தது தெரியவந்தது. அங்கும் போலீஸார் விசாரணை நடத்தியதுடன், வீட்டுக்குப் பூட்டு போட்டார்கள். இந்த நிலையில், பெங்களூரு பொம்மனஹள்ளி போலீஸ், சிறையிலடைக்கப்பட்ட முருகனை, திருட்டு வழக்கு ஒன்றில் 6 நாள்கள் விசாரணைக்கு எடுத்ததாகவும், அவரைக் கடந்த 12-ம் தேதி காலை திருச்சி அழைத்துவந்தனர்.

விரட்டிப் பிடித்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்

அப்படி வந்த பெங்களூரு போலீஸார், லோக்கல் போலீஸாருக்கு எவ்வித தகவலும் கொடுக்காமல், முருகன் காட்டிய இடத்தில் புதைக்கப்பட்டிருந்த 12 கிலோ தங்க நகைகளை எடுத்துக் கொண்டு சிட்டாய்ப் பறந்தனர். இந்த தகவலறிந்த திருச்சி எஸ்.பி தனிப்படை போலீஸார், தகவலை திருச்சி எஸ்.பி மூலம், திருச்சி ஐஜி வரதராஜுக்கு சொல்லவும் திருச்சி, பெரம்பலூர் போலீஸார் அலர்ட் செய்யப்பட்டார்கள்.

karnadaka registration car
karnadaka registration car

இதனிடையே, கர்நாடகா பதிவு எண் கொண்ட கார் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் செல்வதாகத் தகவல் கிடைக்கவே, அரும்பாவூர் காவல் ஆய்வாளர் கலா தலைமையிலான போலீஸார் விரட்டிச் சென்று மடக்கினார்.

நான்காண்டுகளுக்கு முந்தைய கொள்ளை வழக்கு! - பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்த முருகன்

இன்னோவா கார் டிக்கியில் முருகன்!

அந்த இனோவா காரின் டிக்கியில், கொள்ளையன் முருகனும், 12 கிலோ தங்க நகையும் இருந்ததாகக் கூறப்படுகிறது. அடுத்து அவர்களைப் பெரம்பலூர் ஆயுதப்படை மைதானத்துக்கு அழைத்து வந்த போலீஸார், பெரம்பலூர் எஸ்.பி நிஷா பார்த்திபன் மற்றும் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் மயில்வாகனன், பெரம்பலூர் டி.எஸ்.பி கோபால்ராஜ் ஆகியோர் தலைமையில் விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக பேசிய திருச்சி மாநகரக் காவல் ஆணையர் அமல்ராஜ், ``முருகன் கொடுத்த தகவலின்படி, திருவெறும்பூர் அடுத்த பூசத்துறை காவிரி ஆற்றுப்படுகையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நகைகள் கைப்பற்றப்பட்டன. அவை, திருச்சி லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்டவை. சுமார் ரூ.4.30 கோடி மதிப்பிலான 12 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றியிருக்கிறோம். அந்த நகைகள் பெங்களுரூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபிறகு திருச்சி குற்றவியல் நீதித்துறை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும்'' என்றார்.

இந்த விவகாரத்தில், நகை எடுக்கப்பட்டது கொள்ளிடம் ஆற்றங்கரையா அல்லது காவிரி ஆற்றுப்படுகையா என்பதை போலீஸார் தெளிவுபடுத்தவில்லை. அதேபோல், கர்நாடக போலீஸார் ரகசியமாக மொத்த நகையையும் அள்ளிச் சென்றது ஏன்? நிலைமை இப்படியிருக்க, திருச்சி மாநகர போலீஸார், கர்நாடக போலீஸாருடன் இணைந்து நகையை எடுத்ததாக சொல்லக் காரணம் என்ன? என்பன போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்புகிறார்கள் விவரமறிந்தவர்கள்.

கொள்ளையன் முருகன்
கொள்ளையன் முருகன்

இந்த நிலையில், 6 பேர் கொண்ட திருச்சி போலீஸார் முருகனை, போலீஸ் விசாரணைக்கு எடுப்பதற்கான மனுவை நாளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய பெங்களூர் விரைந்தனர். அதேநேரம் சிறையில் இருக்கும் சுரேஷ் கொடுத்த தகவலின்படி, மதுரை சமயநல்லூரைச் சேர்ந்த மகேந்திரன், கணேஷ் உள்ளிட்ட மூன்று பேரிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள். சுரேஷ், அவர்களிடம் சுமார் 950 கிராம் தங்கத்தைக் கொடுத்து விற்றுத்தரும்படி கூறியதாகவும், அதற்காக 7 லட்ச ரூபாய் முன்பணம் வாங்கியதாகவும் கிடைத்த தகவலையடுத்து, மூன்று பேரிடமும் போலீஸார் விசாரித்து வருகிறார்கள். கர்நாடக போலீஸாரால் திருச்சிக்கு நேற்று அழைத்துவரப்பட்ட முருகனிடம் திருச்சி தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

`3 மாநிலங்களில் கைவரிசை; வங்கிகள்தான் முதல் இலக்கு!' - திருச்சி கொள்ளையில் சிக்கிய கும்பலின் பின்னணி

கொள்ளிடக் கரையில் பங்கு பிரிப்பு!

போலீஸார் விசாரணையில் முருகன், திருச்சி சமயபுரம் அடுத்த பிச்சாண்டார் கோயில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நாங்கள்தான் கொள்ளையடித்தோம் என 5 பேரின் பெயரைக் கூறினாராம். மேலும் முருகன் கூறுகையில், ``கேஸ் வெல்டிங் சிலிண்டர் மூலம் துளையிட்டு மொத்த நகைகளையும் அள்ளிச்சென்றோம். சம்பவம் நடந்து ஒன்பது மாதமாகியும் போலீஸார் எங்களைக் கண்டுபிடிக்கவில்லை. அதனால், அடுத்த திட்டம் போட்டோம்.

போலீஸார் விசாரணை
போலீஸார் விசாரணை

அந்தவகையில் திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கடையை குறிவைத்தோம். அன்று இரவு நாங்கள் போனோம். சுவரைக் குடைவது எனக்குக் கைவந்த கலை. ஆனால், அந்தக்கடையின் உள்ளே சுவரை அடுத்து, மரத்தால் ஆன தடுப்பு இருந்ததால் தச்சரால்தான் அதை உடைக்க முடியும் என ஒருவரை அழைத்துக் கொண்டோம். திட்டமிட்டபடி சுவரை துளையிட்டோம். துளியின் வழியே, நானும் சுரேஷும் உள்ளே செல்ல முயற்சி செய்தோம். அவனுக்கு உடல் கொஞ்சம் பெருசானதால் உள்ளே நுழைய முடியவில்லை. உடனிருந்தவரை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றேன். அடுத்து கொள்ளையடித்த நகைகளைத் திருச்சி கொள்ளிடக்கரையில் வைத்து பங்கு போட்டோம்.

lalitha jewellery theft
lalitha jewellery theft

அந்த வகையில் எனக்கு 12 கிலோ தங்கம் மற்றும் ஒரு கிலோ வைர நகைகளை எடுத்துக்கொண்டு, சுரேஷுக்கு 6 கிலோ தங்க நகைகளைக் கொடுத்தேன். மீதம் இருந்த நகைகளை உடன் வந்த மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த கணேஷ், மற்றும் சதீஷ்குமார் ஆகியோருக்குத் தந்தேன்'' என முருகன் சிலரின் பெயர்களைச் சொன்னதாக போலீஸார் கூறுகிறார்கள்.

லலிதா வல்லர்ஸ் கொள்ளையில் முருகனின் வலதுகரமாக செயல்பட்டுவந்த தினகரனின் பங்கும் இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள். முருகன் சொல்வதுபோல 4 பேர் மட்டுமல்லாமல், கொள்ளையில் சுமார் 8 பேருக்குத் தொடர்பு இருக்கலாம் என முடிவு செய்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

மதுரையில் கைப்பற்றப்பட்ட 6 கிலோ தங்கம்

இந்த நிலையில், முருகன் கொடுத்த தகவலின் பேரில் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி, குருவித்துறை, அம்பலக்காரத்தெருவைச் சேர்ந்த கணேசனை இன்று மாலை கைது செய்த போலீஸார், அவர் வீட்டின் அருகே மறைத்து வைத்திருந்த லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட ரூபாய் இரண்டு கோடியே முப்பது லட்சம் மதிப்புள்ள 6 கிலோ 100 கிராம் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன.

`பூமிக்கடியில் 12 கிலோ தங்கம்; விதிமீறிய அதிகாரிகள்?’- திருவாரூர் முருகன் விவகாரத்தில் புதிய சர்ச்சை

பெங்களூரு சென்றிருக்கும் திருச்சி தனிப்படை போலீஸார், முருகனிடம் விசாரிக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய இருக்கிறார்கள். அதன்படி, திருச்சி போலீஸார் பெங்களூரு சிறையில் இருக்கும் முருகனை கஸ்டடியில் எடுத்து விசாரித்தால், பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகலாம் என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்.