Published:Updated:

புகார் கொடுக்க வந்தப் பெண்ணுடன் குடும்பம்.. நள்ளிரவில் சிக்கிய திருச்சி காவலர்!

நள்ளிரவில் சிக்கிய திருச்சி போலீஸ்காரர்
நள்ளிரவில் சிக்கிய திருச்சி போலீஸ்காரர்

கணவரைக் காணவில்லை எனப் புகார் கொடுக்கச் சென்ற பெண்ணை, தனது வலையில் வீழ்த்திய போலீஸ்காரர் ஒருவர், நள்ளிரவில் பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் திருச்சி போலீஸாரை அதிர வைத்துள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்துள்ளது, புலிவலம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த 25 வயது ஆண் ஒருவரும், அதே பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய கல்பனாவும் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) காதலித்து, கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர்.

இவர்களின் திருமண வாழ்வில் குழந்தையில்லை. இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, வேலை விஷயமாக சென்னைக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற கல்பனாவின் கணவர், இதுவரை வீடு திரும்பவில்லை. அவர் குறித்த தகவலும் இல்லை. இந்நிலையில், காணாமல்போன கணவர் குறித்து கல்பனா புலிவலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

போலீஸ்
போலீஸ்

அவரது புகாரை, மணப்பாறையைச் சேர்ந்த தலைமைக்காவலர் ராமர் பெற்றுக்கொண்டு விசாரணை நடத்தினார்.

விசாரணையின்போது, கல்பனாவின் செல்போன் எண்ணைப் பெற்ற போலீஸ்காரர், விசாரணைக்காகப் போனில் பேச ஆரம்பித்திருக்கிறார். தொடர்ந்து விசாரணை எனக்கூறி, அந்தப் பெண்ணை அடிக்கடி காவல்நிலையம் வரவைத்துள்ளார்.

இதில், இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்தப் பழக்கம், நள்ளிரவில் கல்பனாவின் வீட்டுக்குச் சென்று வரும் அளவுக்குப் போயுள்ளது.

போலீஸ்காரர், கல்பனாவின் வீட்டுக்கு அடிக்கடி வந்துபோவதை விரும்பாத அப்பகுதி மக்கள், இதைக் கவனித்துவந்துள்ளனர். இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவு தலைமைக்காவலர் ராமர், கல்பனாவின் வீட்டுக்கு வந்துள்ளார். அவர் உள்ளே சென்றதும் வீட்டின் கதவு பூட்டப்பட்டிருக்கிறது. இதைக் கவனித்த அப்பகுதி மக்கள், கதவைத் திறக்காத வகையில் வெளிப்பக்கமாகப் பூட்டியதுடன், காவல்துறை அவசர எண் 100

-க்கு போன் செய்து புகார் கூறியுள்ளனர். தகவலறிந்த புலிவலம் போலீஸார் அங்கு விரைந்து வந்துள்ளனர்.

நள்ளிரவில் சிக்கிய திருச்சி போலீஸ்காரர்
நள்ளிரவில் சிக்கிய திருச்சி போலீஸ்காரர்

தொடர்ந்து, போலீஸாரும் பொதுமக்களும் கதவைத் தட்டியபோது, அதுவரை வெளியே நடக்கும் விவகாரம் குறித்து எதுவும் அறியாத கல்பனா, வீட்டின் கதவைத் திறந்துள்ளார்.

வாசலில் போலீஸாரும் பொதுமக்களும் இருப்பதைப் பார்த்து அதிர, அவர்களை அப்பகுதி இளைஞர்கள் சிலர் செல்போனில் படம்பிடித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ராமரும் கல்பனாவும் முகத்தைக் கைகளால் மூடிகொள்ள, ஒருகட்டத்தில் கோபம் தாளாத ராமர், தங்களைப் படம் எடுப்பவர்களை மிரட்டியதுடன் ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

அப்பகுதி மக்கள், கல்பனாவின் உறவினர் மூலம் புலிவலம் காவல்நிலைய எஸ்ஐ முத்துசாமியிடம் புகார் கொடுத்துள்ளனர். ஆனால், புகாரை வாங்க எஸ்ஐ மறுக்கவே, ஜீயர்புரம் டிஎஸ்பி கோகிலாவிடம் முறையிட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து, டிஎஸ்பி தலைமையிலான போலீஸார் விரைந்துவந்து விசாரணை நடத்தியுள்ளனர்.

டிஎஸ்பி கோகிலா தலைமையிலான போலீஸார் விசாரணை அறிக்கையின் அடிப்படையில், தலைமைக்காவலர் ராமரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டிருக்கிறார் எஸ்பி.

போலீஸாரின் விசாரணையில், “தனது கணவரைக் காணவில்லை எனப் புகார் கொடுப்பதற்காக காவல்நிலையம் வந்த கல்பனாவை, தலைமைக் காவலர் ராமர் தனது வலையில் வீழ்த்தியதும், அதைத் தொடர்ந்து அவர், அடிக்கடி நள்ளிரவில் கல்பனாவின் வீட்டுக்கு வந்து சென்றதும் ராமருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பான அறிக்கையை, டிஎஸ்பி கோகிலா திருச்சி மாவட்ட எஸ்பி ஜியாவுல்ஹக்கிற்கு அனுப்பிவைத்துள்ளார்.

அடுத்தடுத்த கொலைகள்… பட்டப்பகலில் பயங்கரம்! அதிர்ச்சியில் திருச்சி மக்கள்

அந்த அறிக்கையின் அடிப்படையில் எஸ்பி, தலைமைக்காவலர் ராமரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து அவர்மீது துறைரீதியான நடவடிக்கை பாயும் எனக் கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, திருச்சி காவல் நிலையங்களில் பணியாற்றும் பெண் போலீஸாருக்கு, சக போலீஸார் பாலியல் தொல்லைகொடுத்த விவகாரம் பூதாகரமானது. இந்நிலையில், புலிவலம் காவல் நிலையத்துக்கு புகார் கொடுக்க வந்த பெண்ணை வலையில் வீழ்த்திய போலீஸ்காரர் விவகாரம் இப்பகுதியில் பரபரப்பாகியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு