Published:Updated:

திருச்சி: `அஞ்சு மாசமா பாலியல் தொல்லை கொடுக்கிறாங்க!'- டி.ஐ.ஜி-யிடம் கண்ணீர்விட்ட பெண்

புகார் மனு அளித்த பிரியா
புகார் மனு அளித்த பிரியா

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், பிரியாவுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றிருக்கிறார்.

`ஐந்து மாதங்களாக எனக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துக்கொண்டிருக்கிறார். நான் இயற்கை உபாதை கழிக்கச் சென்றாலும்கூட என்னைப் பின்தொடர்ந்து வந்து செல்போனில் படம் பிடிக்கிறார், அவரிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்' என்று பெண் ஒருவர், ஓர் இளைஞர்மீது திருச்சி டி.ஐ.ஜி-யிடம் புகாரளித்திருக்கிறார்.

பிரியா
பிரியா

பெரம்பலூர் மாவட்டம், தொண்டமாந்துறை பூஞ்சோலைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜோசப், அன்னமேரி தம்பதியர். இவர்கள் விவசாயக் கூலிகளாக வேலை பார்த்துவருகின்றனர். இவருடைய மகள் பிரியா. பெங்களூரில் நர்ஸாக இருக்கிறார். இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையின்றி கடந்த ஏழு மாதங்களாக வீட்டில் இருந்திருக்கிறார். இவருக்கு ஏற்கெனவே சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்றுவருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த செங்கோடன் - மல்லிகா தம்பதியரின் மகன்கள் பரத், சின்னண்ணன் ஆகியோர் இவர்களின் இடத்தை அபகரித்துக்கொண்டு, பாதையையும் அபகரித்ததாகப் புகார் எழுந்திருக்கிறது. இது தொடர்பாக இரு வீட்டாருக்கும் இடையே நீண்டநாள்களாகப் பிரச்னை இருந்திருக்கிறது.

செங்கோடனின் இளைய மகன் சின்னண்ணன், பிரியா பெங்களூரில் இருக்கும்போதே அவருக்கு போன் மூலம் பாலியல் தொல்லை கொடுத்துவந்திருக்கிறார். இந்தநிலையில், அவர் சொந்த ஊருக்கு வந்ததும் அவரிடம் பல முறை பேச முயன்றிருக்கிறார். அதற்கு பிரியா இடம் கொடுக்கவில்லை. இந்தநிலையில் அவரது வீடு காட்டுப் பகுதியில் இருப்பதால் அந்தப் பகுதியில் கழிவறைகூட இல்லாத நிலையில், அவர் வெளியே செல்லும் இடங்களிலெல்லாம் செல்போனால் புகைப்படம் எடுக்க முயன்றிருக்கிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், பிரியாவுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றிருக்கிறார்.

மனு கொடுக்க வந்த பிரியா
மனு கொடுக்க வந்த பிரியா

செய்வதறியாது தவித்த பிரியா தன் அம்மாவைச் சத்தம் போட்டு அழைத்திருக்கிறார். அவர் குரல் கேட்டு வருவதை தெரிந்துகொண்ட சின்னண்ணன், அங்கிருந்து வெளியே ஓடியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் சின்னண்ணன் குடும்பத்துக்குத் தெரிய வருவதற்குள், தன் குடும்பத்திடம் பிரியா தன்னை தவறான பாதைக்கு அழைக்கிறார் என்று தகவலை மாற்றிச் சொல்லியிருக்கிறார் சின்னண்ணன். அவர்களும் பிரியாவைக் கடுமையாக தாக்கி, கொலை மிரட்டலும் விட்டிருக்கிறார்கள். அதில் காயமடைந்தவர், மருத்துவமனை சிகிச்சைக்குப் பிறகு, தனக்கும் குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டி திருச்சி டி.ஐ.ஜி ஆனி விஜயாவிடம் கண்ணீர்மல்கக் கோரிக்கை மனு கொடுத்தார்.

இது குறித்து வழக்கை விசாரித்துவரும் காவலர்களிடம் பேசினோம்.``சம்பவம் நடந்தது உண்மைதான். இரண்டு குடும்பத்ங்களுக்குள்ளும் இடம் தொடர்பான பிரச்னை நீண்டநாள்களாகவே இருந்துவருகிறது.

திருச்சி போலீஸார்
திருச்சி போலீஸார்

விசாரித்ததில், அந்தப் பையன் பலவிதங்களில் டார்ச்சர் கொடுத்துவந்ததாகத் தெரிகிறது. அந்தப் பெண்ணும் சில விஷயங்களை மிகைப்படுத்திச் சொல்கிறார். இது குறித்து தற்போது விசாரிக்கத் தொடங்கியிருக்கிறோம். விசாரணையில்தான் முழுமையான தகவல்கள் தெரியவரும்'' என்பதோடு முடித்துக்கொண்டனர்.

அடுத்த கட்டுரைக்கு