Published:Updated:

சிடி, பென்டிரைவில் விற்கப்பட்ட சிறார் வதை படங்கள்! - ரகசிய புகாரால் கமுதியில் சிக்கிய 2 பேர்

Representational Image
Representational Image

இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர் குறித்து 94899 19722 என்ற கைப்பேசி எண்ணில் தகவல் தெரிவிக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கமுதியில் சிறார்கள் வதை தொடர்பான காட்சிகளை பதிவிறக்கம் செய்து, அவற்றை இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு விற்ற இருவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Representational Image
Representational Image

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் குற்றச்சம்பவங்கள் மற்றும் பெண்கள், சிறார்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வதைச் சம்பவங்கள் தொடர்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு நேரடியாகத் தகவல் தெரிவிக்கும் வகையில் மாவட்டக் காவல் நிர்வாகம் தனி அலைபேசி எண்ணை அறிவித்துள்ளது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் செயல்படுத்திய இந்தமுறையின் வாயிலாக மாவட்டத்தில் நடைபெறும் குற்றச் செயல்கள் குறித்து பொதுமக்கள் ரகசிய தகவல்களை அளித்து வருகின்றனர். இந்த எண்ணில் அளிக்கப்பட்ட ரகசிய தகவல் மூலமே போலியான விளையாட்டு வீரர் சான்றிதழ்கள் மூலம் காவலர் பணிக்குத் தேர்வானவர்கள் சிக்கினர்.

இந்நிலையில், கமுதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாலியல் மற்றும் சிறார் வதை தொடர்பான காட்சிகளைப் பதிவிறக்கம் செய்து, அவற்றை சிலர் விற்பனை செய்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்குத் தகவல் கிடைத்தது. அவரது உத்தரவைத் தொடர்ந்து கமுதி காவல் ஆய்வாளர் கஜேந்திரன், சார்பு ஆய்வாளர் முருகநாதன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கமுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வரும் கணிப்பொறி மையங்கள், செல்போன் கடைகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

பொன் இருள், வழிவிட்ட கிழவன்.
பொன் இருள், வழிவிட்ட கிழவன்.

இதில், கமுதி அருகே மரக்குளத்தைச் சேர்ந்த காளிமுத்து மகன் பொன் இருள் (41) கமுதி பேருந்து நிலையத்தில் நடத்தி வரும் செல்போன் கடையில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் கடையில் இருந்த கணினியை ஆய்வு செய்தபோது, அதில் சிறார் வதை தொடர்பான காட்சிகளைப் பதிவிறக்கம் செய்து அவற்றை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மெமரி கார்டு மற்றும் பென் டிரைவில் பதிவேற்றி விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

வருண்குமார் எஸ்.பி
வருண்குமார் எஸ்.பி
உ.பாண்டி

இதையடுத்து கடையின் உரிமையாளரான பொன் இருள் மற்றும் அவரிடம் வேலைபார்த்து வரும் கமுதி மேலராமநதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் வழிவிட்டான் (29) ஆகிய இருவர் மீதும் கமுதி போலீஸார் போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் குறித்து `94899 19722' என்ற கைப்பேசி எண்ணில் தகவல் தெரிவிக்க ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு