Published:Updated:

விழுப்புரம்: 14 வகை மளிகைப் பொருள்கள் தொகுப்பில் `மிஸ்’ ஆன சில பொருள்கள்!-ஊழியர்கள் பணியிடை நீக்கம்

கே.எஸ்.மஸ்தான் ஆய்வு
கே.எஸ்.மஸ்தான் ஆய்வு

தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் 14 வகை மளிகைப் பொருள்கள் தொகுப்பில், சில பொருள்கள் குறைத்துவழங்கப்பட்டதால், இரு தினங்களில் நியாயவிலைக் கடை ஊழியர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில், கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,000 ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, முதல் தவணையாக 2,000 ரூபாய் கடந்த 'மே' மாதம் வழங்கப்பட்டது. இரண்டாவது தவணையாக 2,000 ரூபாய் மற்றும் 14 வகை மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு 15.06.2021 முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது. இந்தநிலையில், விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அடுத்த தேவனூர் கூட்டுறவு நியாயவிலைக் கடையில், 14 வகை மளிகைப் பொருள்களில் இரண்டு பொருள்கள் குறைத்துத் தரப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

நியாயவிலைக் கடை
நியாயவிலைக் கடை

நேற்று சுமார் 17 இடங்களில் இந்தத் தொகுப்பு பொருள்கள் வழங்கும் பணியில் ஈடுபட்ட சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான், சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைக்கு நேராகவே சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். பொதுமக்கள் வாங்கிச் செல்லும் மளிகைப் பொருள்கள் தொகுப்பு பையை வாங்கிப் பார்த்தபோது, கடலைப் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு வழங்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக நியாயவிலைக் கடை ஊழியர் கர்ணனிடம் அமைச்சர் விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணான பதில்களையே கூறிய அந்நபர், 'நான் வேண்டுமானால் எனது சொந்தச் செலவிலிருந்து வாங்கி தந்துவிடுகிறேன் சார்' என்று பொறுப்பற்ற முறையில் பதில் அளித்துள்ளார்.

தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி உடன்வந்த துணை ஆட்சியர் மற்றும் கூட்டுறவு சங்கப் பதிவாளரை அமைச்சர் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து, நியாயவிலைக் கடை ஊழியர் கர்ணனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர்.

அதேபோல, நேற்று விழுப்புரம் மணிநகர் பகுதியிலுள்ள நியாயவிலைக் கடையில், 14 வகை மளிகைத் தொகுப்பு பொருள்களில் ஒருசில பொருள்கள் இல்லாமல் விநியோகம் செய்யப்படுவதாக தொகுதி எம்.எல்.ஏ லட்சுமணனுக்குப் புகார் சென்றுள்ளது. சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடையை எம்.எல்.ஏ நேரில் ஆய்வு செய்தபோது ஒரு சிலருக்கு, பொருள்கள் எண்ணிக்கையில் குறைத்து வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது.

லட்சுமணன் ஆய்வு
லட்சுமணன் ஆய்வு

இந்தப் புகார், எம்.எல்.ஏ மூலம் மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, மணி நகர் பகுதியின் நியாயவிலைக்கடை ஊழியர் வேல்முருகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில், மக்களுக்குச் சென்று சேர வேண்டிய தொகுப்புப் பொருள்கள் குறைத்து வழங்கப்பட்டதால், இரண்டு நியாயவிலைக்கடை ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட செயல் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு