Published:Updated:

உ.பி: இளைஞர்கள் சீண்டல்; வண்டியை நிறுத்தாத ஓட்டுநர் - ஓடும் பேருந்திலிருந்து குதித்த சிறுமிகள்!

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை ( Representational Image )

பேருந்தை நிறுத்துமாறு ஓட்டுநரிடம் சிறுமிகள் தொடர்ந்து வலியுறுத்திவந்திருக்கிறார்கள். அப்போது அந்த இளைஞர்கள், ``இன்று இந்தப் பேருந்து எங்கும் நிற்காது. இன்று மிக விளையாட்டான நாள்’’ என்று கூறியதாகத் தெரிகிறது.

உத்தரப்பிரதேசத்தில் 12-ம் வகுப்பு படிக்கும் இரண்டு சிறுமிகள், நான்குஇளைஞர்களின் சீண்டலுக்கும் கேலிக்கும் உள்ளாகியிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து தப்பிக்க, ஓடும் பேருந்திலிருந்து சிறுமிகள் குதித்த அதிர்ச்சிச் சம்பசம் அரங்கேறியிருக்கிறது.

டெல்லி அருகேயுள்ள நொய்டாவிலுள்ள ரான்ஹரா பகுதியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு படிக்கும் இரண்டு சிறுமிகள் ஒரு தனியார் பேருந்தில் நேற்று காலை பயணித்திருக்கிறார்கள். பேருந்தின் மையப் பகுதியிலுள்ள இருக்கையில் அமர்ந்திருக்கிறார்கள். அப்போது பேருந்தில் இவர்களின் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த நான்கு இளைஞர்கள், சிறுமிகளைக் கேலி செய்து தொடர்ந்து சீண்டியிருக்கிறார்கள்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
representational image

உடனே சுதாரித்துக்கொண்ட சிறுமிகள், ஓட்டுநரிடம் சென்று பேருந்தை நிறுத்துமாறு கேட்டிருக்கிறார்கள். ஆனால், ஓட்டுநரோ பேருந்தை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றிருக்கிறார். பீரம்பூர் என்ற பேருந்து நிறுத்தத்தில் அந்தச் சிறுமிகளின் நண்பர்கள் பேருந்தில் பயணம் செய்யக் காத்திருந்தனர். ஆனால், அந்த நிறுத்தத்திலும் பேருந்து நிற்காமல் வேறு வழியில் சென்றதாகக் கூறப்படுகிறது.

பேருந்தை நிறுத்துமாறு ஓட்டுநரிடம் சிறுமிகள் தொடர்ந்து வலியுறுத்திவந்திருக்கிறார்கள். அப்போது அந்த இளைஞர்கள், ``இன்று இந்தப் பேருந்து எங்கும் நிற்காது. இன்று மிக விளையாட்டான நாள்’’ என்று கூறியதாகத் தெரிகிறது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமிகள், பேருந்தின் பின்புறம் சென்று ஜன்னல் வழியாக ஒருவர் பின் ஒருவராகக் கீழே குதித்திருக்கிறார்கள்.

பாலியல் வன்கொடுமை (Representational Image)
பாலியல் வன்கொடுமை (Representational Image)

இதில் ஒருவருக்கு தலை, கால் மற்றும் இடுப்பு ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டிருக்கிறது. மற்றொருவருக்கு கை காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

சிறுமிகளுக்கு இளைஞர்கள் தொல்லை கொடுத்ததாக போலீஸின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்படாதது சர்ச்சையாகியிருக்கிறது. பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் இளைஞர்களின் சீண்டல் குறித்து புகாரில் குறிப்பிடவில்லை என்று போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. `டிரைவர் வாகனத்தை நிறுத்த மறுத்துவிட்டார்’ என்று மட்டுமே அவர்கள் புகாரில் குறிப்பிட்டதாக போலீஸார் தெரிவித்திருக்கிறார்கள். இதனால், பேருந்தின் ஓட்டுநர் மீது மட்டுமே இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பேருந்து ஓட்டுநர் மன்னிப்புக் கோரியுள்ளதாகவும், இது குறித்து விசாரணை மேற்கொண்டுவருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு