Published:Updated:

குழந்தைத் திருமணம்: சிதம்பரத்தில் இரு தீட்சிதர்கள் கைது; சாலைமறியல் போராட்டத்தால் பரபரப்பு!

சாலைமறியல்

குழந்தைத் திருமண விவகாரத்தில், சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் சிலர் தொடர்ச்சியாகக் கைதுசெய்யப்படும் சம்பவம், அந்தப் பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

குழந்தைத் திருமணம்: சிதம்பரத்தில் இரு தீட்சிதர்கள் கைது; சாலைமறியல் போராட்டத்தால் பரபரப்பு!

குழந்தைத் திருமண விவகாரத்தில், சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் சிலர் தொடர்ச்சியாகக் கைதுசெய்யப்படும் சம்பவம், அந்தப் பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
சாலைமறியல்

கடலூர் மாவட்டம், சிதம்பரத்திலுள்ள புகழ்பெற்ற நடராஜர் கோயிலை நிர்வகித்துவரும் தீட்சிதர்கள் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன. தங்களுடைய குழந்தைகள், திருமண வயதை அடைவதற்கு முன்பாகவே, இந்த தீட்சிதர்கள் சட்டத்துக்குப் புறம்பாக திருமணம் செய்துவைப்பதாகப் புகார்கள் எழுந்துவந்த நிலையில், அண்மை சில வாரங்களாகக் குழந்தைத் திருமணப் புகாரில் அடுத்தடுத்து கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இந்த நிலையில், மீண்டும் ஒரு குழந்தைத் திருமணச் சம்பவத்தில் இரண்டு தீட்சிதர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிதம்பரம் தீட்சிதர்கள்
சிதம்பரம் தீட்சிதர்கள்

கடந்த 2021-ம் ஆண்டு, ஜனவரி மாதம், சிதம்பரம் தீட்சிதர்களின் இரு குடும்பத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கும், 17 வயது சிறுவனுக்கும் திருமணம் நடத்தப்பட்டதாம். இந்தக் குழந்தைத் திருமண சம்பவம் குறித்து, மாவட்ட சமூகநலத்துறைக்கு வந்த தகவல் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில், சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே 13 வயது சிறுமிக்கும், 17 வயது சிறுவனுக்கும் திருமணம் செய்துவைத்த காரணத்துக்காக, சிறுமியின் தந்தையையும், சிதம்பரம் நடராஜர் கோயிலின் செயலாளருமான ஹேமசபேச தீட்சிதரையும், சிறுவனின் தந்தை வெங்கடேச தீட்சிதரையும் கைதுசெய்த போலீஸார், இருவர் மீதும் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்தனர்.

அதன் பின்னர், சிதம்பரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 15 நாள்கள் சிறைக் காவலில் அடைத்தனர்.

முன்னதாகவே, இந்தக் கைது நடவடிக்கை குறித்த தகவல் மற்ற தீட்சிதர்களுக்கும் தெரிந்ததால், கோயில் வாயிலின் முன்பாக அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களைக் கலைக்க முற்பட்ட போலீஸாருக்கும் தீட்சிதர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. எனவே, சாலைமறியலில் ஈடுபட்ட தீட்சிதர்களைக் கைதுசெய்து திருமண மண்டபம் ஒன்றில் அடைத்த போலீஸார், பின்னர் விடுவித்தனர்.

சிதம்பரம் நடராஜர் கோயில்
சிதம்பரம் நடராஜர் கோயில்

இதற்கிடையில் 50-க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் கோயிலின் வாசலின் முன்பு அமர்ந்து நள்ளிரவு வரை சுமார் நான்கு மணி நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால், சிதம்பரம் நடராஜர் கோயில் பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டது. மேலும், இந்த ஒரு வருடத்தில் கடலூர் மாவட்டத்தில் மட்டுமே, குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அவற்றில் நான்கு வழக்குகள் தீட்சிதர்கள் தரப்பிலானது எனவும் காவல்துறை தரப்பில் கூறப்படும் தகவல், மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.