Published:Updated:

கோவை: ஆன்லைன் ரம்மியில் தோல்வி... விரக்தி! - ஒரேநாளில் இருவர் தற்கொலை

ஆன்லைன் ரம்மி தற்கொலை
ஆன்லைன் ரம்மி தற்கொலை ( Representational Image )

ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்ததால், கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் இருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் ரம்மி சூதாட்டத்துக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அப்படி ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாபவர்கள், பணம் இழப்பு ஏற்படும்போது, மனமுடடைந்து உயிரை மாய்த்து கொள்ளும் சோகமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதையடுத்து, ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கும் தொடரப்பட்டது.

ஆன்லைன் ரம்மி
ஆன்லைன் ரம்மி
ஆன்லைன் ரம்மி விளையாடப் போறீங்களா? உங்க கவனத்துக்கு சில `சம்பவங்கள்'

அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக அரசு நல்ல முடிவெடுக்கும் என நம்புகிறோம் என்று கூறி, வருகின்ற 19-ம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், கோவையில் ஒரே நாளில் இரண்டு பேர் ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்ததால், தற்கொலை செய்துள்ளனர்.

கோவை சுந்தராபும் அருகே உள்ள மாச்சாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். 32 வயதான இவர், தனியார் நிறுவனத்தில் சி.என்.சி ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். பெற்றோர் இறந்ததை அடுத்து, ஜெயச்சந்திரன் தனது உறவினர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜெயச்சந்திரனுக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. அவருக்குத் திருமணம் ஆகவில்லை. இதனிடையே, பொழுதுபோக்குக்காக அவர் ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார். ஏற்கெனவே கடன் தொல்லையில் இருந்த ஜெயச்சந்திரன், ஆன்லைன் ரம்மி மூலமும் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை செய்த ஜெயச்சந்திரன்
தற்கொலை செய்த ஜெயச்சந்திரன்

மேலும், ஆதார், பேன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை கொடுத்து ஆன்லைன் மூலம் கடன் வாங்கியதாகவும், மாத வருமானத்தில் இருந்து இ,சி.எஸ் முறையில் பணம் பிடித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், மன விரக்தியில் இருந்த ஜெயச்சந்திரன் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போத்தனூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல, கோவை தொண்டாமுத்தூர் பார்பர் காலனியை சேர்ந்தவர் ஜீவானந்தம். இவர் தொண்டாமுத்தூர் பகுதியில் கம்ப்யூட்டர் சர்வீஸ் சென்டர் நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி ஐந்து வயதில் மகன் உள்ளார். கடந்த 15 நாள்களுக்கு முன்பு இவரது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மனைவி, தன் தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால், தனியாக வீட்டில் ஜீவானந்தம் தங்கி வந்துள்ளார். மேலும் அவர் நடத்தி வந்த கம்ப்யூட்டர் சென்டரில் பார்ட்னராக இருந்த நிஷாந்த் என்பவருக்கு ரூ.50,000 ரூபாயை கொடுப்பதற்காக தனது தாயிடம் பணம் வாங்கியுள்ளார். 30,000 ரூபாய் நிஷாந்துக்குக் கொடுத்த நிலையில், மீதி இருந்த 20,000 ரூபாயை ஆன்லைன் ரம்மியில் வைத்து விளையாடியதாகத் தெரிகிறது. நள்ளிரவு வரை விளையாடிய நிலையில், அந்தப் பணத்தைத் தோற்றதாகத் தெரிகிறது.

ஜீவானந்தம்
ஜீவானந்தம்

இதனால், ஆத்திரத்தில் அவருடன் தங்கியிருந்த சரவணன் என்பவரது செல்போனை உடைத்து விட்டு, கோபத்தில் தனது அறைக்குச் சென்றுள்ளார். இந்நிலையில், காலையில் நீண்ட நேரமாகியும் ஜீவானந்தம் கதவைத் திறக்கவில்லை. சந்தேகமடைந்த நண்பர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, ஜீவானந்தம் தூக்கில் தொங்கியபடி சடலமாக இருந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தொண்டாமுத்தூர் போலீஸார், அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவும் செய்து விசாரித்து வருகின்றனர்.

கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாட்டு; தொடர் தோல்வி! - தற்கொலை செய்த கோவை இளைஞர்

கோவையில் ஏற்கெனவே, கடந்தவாரம் சீரநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஓர் இளைஞர் ஆன்லைன் ரம்மியில் ஏற்பட்ட நஷ்டத்தால் தற்கொலை செய்து கொண்டார். தற்போது, இந்த சம்பவங்கள் மூலம், கோவையில் ஆன்லைன் ரம்மியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.`அரசு இனியும், தாமதிக்காமல் விரைந்து நடவடிக்கை எடுத்து, ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கோரிக்கை வலுத்து வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு