உத்தரப்பிரதேச மாநிலம், ஹாபூர் பகுதியிலுள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஜூலை 11-ம் தேதி ஆசிரியர்கள் சீருடையுடன் மாணவர்களை குழுப் புகைப்படம் எடுத்ததாகக் கூறப்படுகிறது. அப்போது இரண்டு மாணவிகள் மட்டும் பள்ளிச் சீருடை அணியாமல் மாற்று உடையில் வந்திருக்கின்றனர். அந்த மாணவிகள் இருவரும் பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், பள்ளி ஆசிரியர்கள் இருவர் அந்த மாணவிகளை, `சீருடை அணிந்து வராத காரணத்தால், ஆடைகளைக் கழற்றுங்கள்' எனக் கூறியதாகச் சொல்லப்படுகிறது. தங்களிடம் மாற்று உடை இல்லாததால் அந்த மாணவிகள் மறுத்திருக்கின்றனர்.
ஆனால், பள்ளி ஆசிரியர்கள் அந்த மாணவிகளை தாக்கி கட்டாயப்படுத்தி அவர்களின் ஆடைகளை கழற்றியதாகக் கூறப்படுகிறது. ஆசிரியர்களின் செயலால் அதிர்ச்சியடைந்த மாணவிகள், அங்கிருந்து வெளியேறி தங்கள் பெற்றோரிடத்தில் சம்பவம் குறித்து தெரிவித்திருக்கின்றனர்.

அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக பள்ளிக்கு நேரில் சென்று இது குறித்து கேட்டிருக்கின்றனர். அப்போது பள்ளி நிர்வாகத்தினர் அலட்சியமாகப் பதிலளித்திருக்கின்றனர். அதையடுத்து அவர்கள் இந்த விவகாரம் தொடர்பாக உள்ளுர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். போலீஸார் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய ஹாபூர் காவல்துறை உதவி கண்காணிப்பாளர், ``SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும், இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவுசெய்திருக்கிறோம். பாதிக்கப்பட்ட மாணவிகள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் செய்தியாளர்களிடம், ``பள்ளி ஆசிரியர்கள் சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டுகிறார்கள். இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆனால், அவர்கள் தொடர்ந்து பள்ளிக்குச் சென்றுகொண்டுதான் இருக்கின்றனர். எங்கள் பிள்ளைகள்தான் அவமானத்தில் வீட்டில் முடங்கிக்கிடக்கிறார்கள். எங்கள் பிள்ளைகளுக்கு நடந்த கொடுமைக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்" என்றனர்.