Published:Updated:

`தோழியின் கண்ணீரைத் துடைக்க கொலை செய்தோம்' - கைதானவர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்

எஸ்.மகேஷ்

ஆட்டோ டிரைவர் நாகராஜை கொலை செய்த வழக்கில், அவரின் மனைவி காயத்ரி, காயத்ரியின் தோழி பானு மற்றும் பானுவின் கணவர் மகேந்திரன் ஆகியோரை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

நாகராஜ்
நாகராஜ்

சென்னை நெற்குன்றம் சக்தி நகரைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் நாகராஜ். இவரைக் கொலை செய்த வழக்கில் அவரின் மனைவி காயத்ரி, காயத்ரியின் தோழி பானு மற்றும் பானுவின் கணவர் மகேந்திரன் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். விசாரணையில், மூன்று பேரும் நாகராஜை கொலை செய்ததற்கு கூறிய காரணங்கள் போலீஸாரையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. குறிப்பாக, தோழியின் கண்ணீரைத் துடைக்க கொலை செய்ததாக கணவன்-மனைவி வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

நாகராஜ்
நாகராஜ்

நாகராஜ் கொலை குறித்து மூவரும் போலீஸாரிடம் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளனர். காயத்ரி அளித்த வாக்குமூலத்தில், ``என்னுடைய கணவர் நாகராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. ஆரம்பத்தில் சந்தோஷமாகச் சென்ற எங்களின் இல்லற வாழ்க்கையில், சில கசப்பான சம்பவங்கள் நிகழ்ந்தன. குறிப்பாக, என் கணவரின் நண்பரான மகேந்திரன், எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவார். இதனால், என் கணவர் என்னைத் தவறாகப் பேசத் தொடங்கினார். மேலும், மதுவுக்கு அடிமையான அவர், குடும்பம் நடத்த பணமும் தருவதில்லை. இதனால், குழந்தைகளைக் காப்பாற்ற வானகரம் மீன் மார்க்கெட்டுக்கு வேலைக்குச் சென்றேன்.

இந்தச் சமயத்தில், மகேந்திரனுடன் நீ பேசினால் அவனைக் கொலை செய்வேன் என்று நாகராஜ் கூறினார். இந்தத் தகவலை மகேந்திரனின் மனைவியும் என் தோழியுமான பானுவிடம் கூறினேன். உடனே, அவர் நாகராஜால் உன் வாழ்க்கையில் நிம்மதியில்லை. நாகராஜால் மகேந்திரனுக்கு ஏதாவது நடந்தால் என் வாழ்க்கையும் போய்விடும் என்று என்னிடம் கூறினாள். இதையடுத்து, இருவரும் சேர்ந்து நாகராஜை கொலை செய்ய முடிவுசெய்தோம்.

காயத்ரி
காயத்ரி

சம்பவத்தன்று, மதுபோதையில் வீட்டுக்கு வந்த நாகராஜை இருவரும் தாக்கினோம். அவரின் உயிர் பிரியவில்லை. இதனால் தலையணையால் அவரின் முகத்தை அழுத்தினோம். பிறகு, துப்பட்டாவால் கழுத்தை நெரித்தோம். அவர் இறந்தவுடன், பானு, என் வீட்டிலிருந்து அவரின் வீட்டுக்குச் சென்றுவிட்டார். நானும் எதுவும் நடக்காததுபோல மீன் மார்க்கெட்டுக்குச் சென்றுவிட்டேன். என் தம்பியிடம் நடந்த விவரத்தைக் கூறினேன். இதனால்தான் போலீஸிடம் சிக்கிக்கொண்டேன்" என்று தெரிவித்துள்ளார்.

பானு அளித்த வாக்குமூலத்தில், ``நாகராஜால் காயத்ரி தினமும் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வந்தார். அதைத் தினமும் என்னிடம் சொல்லி அழுதாள். அப்போது, அவளுக்கு நான் ஆறுதல் கூறினேன். என் கணவன் மகேந்திரனைக் கொலை செய்வேன் என்று நாகராஜ் கூறியதையடுத்துதான், நாங்கள் இருவரும் சேர்ந்து நாகராஜை தீர்த்துக்கட்ட முடிவுசெய்தோம். அதன்படி அவரைக் கொலை செய்துவிட்டோம்" என்று கூறியுள்ளார்.

பானு
பானு

மகேந்திரன் அளித்த வாக்குமூலத்தில், ``நான் கூலி வேலை செய்துவருகிறேன். எனக்கும் காயத்ரிக்கும் உள்ள பழக்கம் நாகராஜுக்குப் பிடிக்கவில்லை. காயத்ரி என்மீது பாசமாக இருந்தாள். அதற்குத் தடையாக இருந்த நாகராஜை தீர்த்துக்கட்ட நாங்கள் முடிவுசெய்தோம். நாகராஜை நாங்கள் கொலை செய்யவில்லை என்றால், நிச்சயம் அவன் என்னைக் கொலை செய்திருப்பான்" என்று கூறியுள்ளார்.

மூன்று பேர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் நாகராஜ் பிரேதப் பரிசோதனை அறிக்கை அடிப்படையிலும் மகேந்திரன், பானு, காயத்ரி ஆகிய மூன்று பேரையும் போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன், காயத்ரி மற்றும் பானுவை முதலில் பிடித்தார். காயத்ரியிடம் தனியாக விசாரித்தபோது, அவர் கூறிய தகவலும் பானு கூறிய தகவலும் முரண்பட்டதாக இருந்தது. நாகராஜை கொலை செய்த பிறகு, மகேந்திரன், பானு, காயத்ரி ஆகிய மூன்று பேரும் ஒன்றாக வாழ திட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

நாகராஜ்
நாகராஜ்

இதற்கிடையில், நாகராஜ் கொலை தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பரவியது. அதில் சுடிதார் அணிந்த பெண் ஒருவர், கட்டிலில் படித்திருக்கும் ஒருவரின் கழுத்தை துப்பட்டாவால் நெரிக்கும் காட்சிகள் இருந்தன. இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரனிடம் கேட்டதற்கு, ``கொலை செய்யப்பட்ட நாகராஜுக்குத் தலையில் முடிஇல்லை. ஆனால், வீடியோவில் இருக்கும் நபருக்கு முடி உள்ளது. மேலும், சம்பவம் நடந்த வீட்டுக்கும் வீடியோவில் உள்ள வீட்டுக்கும் வித்தியாசம் உள்ளது. இதனால், இந்த வீடியோ கோயம்பேடு நாகராஜ் கொலை தொடர்பானது இல்லை. ஆனால், சிலர் தவறுதலாக கோயம்பேடு கொலை வீடியோ என்று பரப்பி வருகின்றனர்" என்றார்.