Published:Updated:

`உதவுறது போல நடிச்சு என் உசுர தூக்கிட்டுப் போயிட்டாங்க!' - கடத்தப்பட்ட குழந்தை; கலங்கும் தாய்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மருத்துவமனையில் குழந்தையை கடத்திச் செல்லும் பெண்
மருத்துவமனையில் குழந்தையை கடத்திச் செல்லும் பெண்

``பிறந்து நாலு நாள்தான் ஆகுது... தாய்ப்பால் இல்லாம என் குழந்தை எப்படி தவிக்குமோ நெனச்சாலே உயிரே போகுது." எனக் கலங்குகிறார் குழந்தையைப் பறிகொடுத்த ராஜலெட்சுமி.

தஞ்சாவூர் அரசு மருத்துவமனை ஒன்றில் குழந்தை பெற்றெடுத்த பெண்ணுக்கு, உதவி செய்வது போல் நடித்து, பிறந்து நான்கு நாள்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை மர்மப் பெண் ஒருவர் கட்டைப்பைக்குள் வைத்து கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸ் வழக்குப் பதிவு செய்து குழந்தையைக் கடத்திச் சென்ற பெண்ணைத் தேடி வருகின்றனர்.

ராஜலெட்சுமி - குணசேகரன் தம்பதி
ராஜலெட்சுமி - குணசேகரன் தம்பதி

தஞ்சாவூர், பர்மாகாலனி பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் (24). டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி ராஜலட்சுமி (22). காதலித்து வந்த இருவரும் தங்களது வீட்டின் எதிர்ப்பை மீறி கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இதனால் இருவரது குடும்பத்தாரும் இந்த இளம் தம்பதிகளுடன் பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்துள்ளனர்.

இந்நிலையில், கர்ப்பிணியாக இருந்த ராஜலட்சுமிக்கு வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து பிரசவத்திற்காக கடந்த வாரம் அவரின் கணவர், தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதாரர் மருத்துவமனையில் சேர்த்தார். இதையடுத்து கடந்த செவ்வாய்க் கிழமை காலை ராஜலெட்சுமிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், இன்று காலை ராஜலெட்சுமி குழந்தையை மெத்தையில் படுக்க வைத்து விட்டு கழிவறைக்குச் சென்றுள்ளார். திரும்பி வந்து போது குழந்தையைக் காணாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

மருத்துவமனையில் விசாரணை செய்யும் போலீஸ்
மருத்துவமனையில் விசாரணை செய்யும் போலீஸ்

யாராவது குழந்தையைத் தூக்கி வைத்திருக்கிறார்களா எனப் பதறியடித்துத் தேடியிருக்கிறார். ஆனாலும் குழந்தை கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து குழந்தை காணாமல் போனது குறித்து குணசேகரன் போலீஸில் புகார் அளிக்க, போலீஸார் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில், பெண் ஒருவர் குழந்தையைக் கட்டைப்பையில் வைத்துக் கடத்திச் சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குழந்தையைக் கடத்தி சென்ற பெண்ணைத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து ராஜலெட்சுமியிடம் பேசினோம். ``நாங்க காதல் திருமணம் செய்து கொண்டதால எங்க வீட்டுல யாரும் எங்ககிட்ட பேசுறது இல்ல. பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ந்த எனக்கு, கூட இருந்து உதவி செய்றதுக்கு ஆளில்ல. குழந்தை பிறந்ததும் சின்னச் சின்ன உதவிக்குக் கூட ஆளில்லாததால ரொம்பவே சிரமப்பட்டோம். பக்கத்துல இருந்த ஒரு பெண், `என் நாத்தனாரை பிரசவத்துக்குகாகச் சேர்த்திருக்கேன். ஏன்டா... உங்களுக்குனு யாரும் இல்லையா? கவலைப்படாதீங்க நான் இருந்து பாத்துக்குறேன்'னு சொல்லி எல்லா உதவிகளையும் செஞ்சுட்டு வந்தாங்க.

குழந்தை கடத்தலில் ஈடுபட்ட பெண்
குழந்தை கடத்தலில் ஈடுபட்ட பெண்

இன்னைக்கு என்கிட்ட, `நீ பாத்ரூம் போயிட்டு வாம்மா, அதுவரை நான் குழந்தையைப் பார்த்துக்குறேன்'னு சொன்னாங்க. மூணு நாளா எங்க கூடவே இருந்து கவனிச்சுக்கிட்டதால நம்பி நானும் குழந்தையை விட்டுட்டுப் போனேன். அப்ப என் கணவர் குழந்தைகிட்ட இருந்திருக்கார். அவர்கிட்ட, `எனக்குத் தலை வலிக்குது, சுடு தண்ணி வாங்கிட்டு வாப்பா'னு கேட்டுருக்காங்க. அவரும் கடைக்குப் போயிட்டார். யாரும் இல்லாத நேரம் பார்த்துக் குழந்தையை கட்டப்பையில வெச்சு எடுத்து கடத்திக்கிட்டு போயிருக்காங்க.

அவங்களை எதிர்ல பார்த்த என் கணவர், `சுடு தண்ணி வாங்கிட்டு வந்துட்டேன், எங்க போறீங்க?'னு கேட்டிருக்கார். `நாத்தனாரை பார்த்துட்டு வந்துடுறேன்'னு சொல்லிட்டுப் போயிருக்காங்க. நாங்க ரெண்டு பேரும் பெட்டுக்கு வந்த பிறகு குழந்தையைக் காணாததைப் பார்த்து அதிர்ச்சியாகிட்டோம். யாரோ குழந்தையை தூக்கிட்டுப் போயிட்டாங்கனு நெனச்சுப் பதறினோம். போலீஸ் வந்து சிசிடிவி கேமராவுல பதிவான காட்சிகளைப் பார்த்தாங்க. அப்போதான், எனக்கு உதவி செஞ்ச பெண்தான் குழந்தையை கட்டைப்பைக்குள் வெச்சு கடத்திட்டுப் போயிருக்காங்கனு தெரிஞ்சது.

அரசு மருத்துவமனையில்  குழந்தையை கடத்திச் செல்லும் பெண்
அரசு மருத்துவமனையில் குழந்தையை கடத்திச் செல்லும் பெண்

உதவுறது போல நடிச்சு என் உசுர தூக்கிட்டுப் போயிட்டாங்க. எனக்கு உலகமே இருண்டது போல இருக்கு. போலீஸ் குழந்தையையும், கடத்திட்டுப் போன அந்தப் பெண்ணையும் தேடிக்கிட்டு இருக்காங்க. பிறந்து நாலு நாள்தான் ஆகுது... தாய்ப்பால் இல்லாம என் குழந்தை எப்படி தவிக்குமோ நெனச்சாலே உயிரே போகுது. போலீஸ் சீக்கிரம் என் உசுர என் கையில சேர்த்துடுவாங்கனு நம்பிக்கை இருக்கு'' என்று கலங்கினார்.

போலீஸ் தரப்பினர் கூறுகையில், ``அந்த இளம் தம்பதிக்கு யாரும் இல்லை என்பதை தெரிந்துகொண்டு, குழந்தையைக் கடத்துவதற்காகவே அந்தப் பெண் பழகி வந்துள்ளார். ராஜலெட்சுமி மருத்துவமனைக்கு ரெகுலர் செக்கப்புக்கு வரும்போதிலிருந்தே அவர்களை, குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் ஃபாலோ செய்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சிசிடிவி கேமரா பதிவில் உள்ள பெண்ணின் அடையாளங்களை வைத்து குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் குறித்து விசாரணை மேற்கொண்டு தேடி வருகிறோம். எந்தவிதமான பதற்றமும் இல்லாமல் குழந்தையைக் கடத்திச் சென்றிருக்கிறார் என்பதால் ஏற்கெனவே குழந்தை கடத்தலில் தொடர்புடைய பெண்ணாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கிறோம். விரைவில் பிடித்து விடுவோம்'' என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு