Published:Updated:

`என்னைக் காப்பாற்றுங்கள்.. அவர்களின் சாவைப் பார்க்க வேண்டும்!' -உன்னாவ் பெண்ணின் இறுதி நிமிடங்கள்

உன்னாவ் பெண் சம்பவம் நடந்த இடம்
உன்னாவ் பெண் சம்பவம் நடந்த இடம்

எனது மகளைச் சீரழித்த குற்றவாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும் அல்லது ஹைதராபாத்தில் நடந்ததைப் போல சுட்டுக் கொல்லப்பட வேண்டும். இது தவிர, அரசிடமிருந்து வேறெந்த உதவியும் வேண்டாம்.

ஹைதராபாத்தில் பெண் மருத்துவரைப் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் அடங்குதற்குள் உத்தரப்பிரதேசத்தில் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார். ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் வழக்கில் என்கவுன்டர் செய்யப்பட்டதைப் போன்று உத்தரப்பிரதேசத்தில் உன்னாவ் பெண் கொலைவழக்கின் குற்றவாளிகளுக்கும் அதே தண்டனையை வழங்க வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.

வன்கொடுமை
வன்கொடுமை
மாதிரி புகைப்படம்

மருத்துவமனையில் உயிரிழந்த உன்னாவ் பெண்ணின் தந்தை பேசுகையில், ``அரசாங்கத்திடமும் அதிகாரிகளிடமும் நாங்கள் கேட்பது என்னவென்றால், எனது மகளைச் சீரழித்தக் குற்றவாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும் அல்லது ஹைதராபாத்தில் நடந்ததைப் போல சுட்டுக் கொல்லப்பட வேண்டும். இது தவிர, அரசிடமிருந்து வேறெந்த உதவியும் வேண்டாம்"என்றார்.

அப்பெண்ணின் சகோதரர் பேசுகையில், ``அவளைச் சீரழித்த குற்றவாளிகள் அவளுடைய கண்முன்னே இறந்துபோக வேண்டும் என்று விரும்பினாள். அதற்காகவே `என்னைக் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... நான் உயிருடன் இருக்க வேண்டும். அவர்களைச் சட்டத்தின்முன் நிறுத்தி தண்டனை வாங்கித் தரவேண்டும்' என்று கதறித் துடித்தாள்.

``நிச்சயமாக உன்னை நாங்கள் காப்பாற்றுவோம். நீ பயப்படவேண்டாம்" என்று கூறியிருந்தேன். ஆனால், அவள் இறந்துவிட்டாள். அவளைக் காப்பாற்றத் தவறிவிட்டேன்" என்று கண்ணீர்மல்கப் பேசியுள்ளார்.

உன்னாவ் பெண் எரிக்கப்பட்ட இடம்
உன்னாவ் பெண் எரிக்கப்பட்ட இடம்

உயிரிழந்த அந்த இளம்பெண் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், "பெட்ரோலை ஊற்றுவதற்கு முன்பாக என்னைச் சுற்றி வளைத்துக்கொண்டு அந்த ஐந்து பேரும் தாக்கினர். பின்னர் கழுத்தில் கத்தியை வைத்தனர். அதன் பின்னரே பெட்ரோலை ஊற்றி எரித்தனர்" என்று கூறியுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உன்னாவ் பெண், இறந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு