Published:Updated:

"டீக்கடையில் ரெட்டை கிளாஸ் முறை; மளிகைக்கடையில எந்தப் பொருளும் தருவதில்லை" - பட்டியலின மக்கள் புகார்

பட்டியலின மக்கள் புகார்

ஒரத்தநாடு அருகே கிளாமங்கலம் கிராமத்தில் பல ஆண்டுகளாக சாதியப் பாகுபாடு, தீண்டாமைப் பிரச்னை நிலவிவருவதாகக் கூறப்படுகிறது.

"டீக்கடையில் ரெட்டை கிளாஸ் முறை; மளிகைக்கடையில எந்தப் பொருளும் தருவதில்லை" - பட்டியலின மக்கள் புகார்

ஒரத்தநாடு அருகே கிளாமங்கலம் கிராமத்தில் பல ஆண்டுகளாக சாதியப் பாகுபாடு, தீண்டாமைப் பிரச்னை நிலவிவருவதாகக் கூறப்படுகிறது.

Published:Updated:
பட்டியலின மக்கள் புகார்

ஒரத்தநாடு அருகேயுள்ள கிராமத்தில் தீண்டாமைக் கொடுமை நிலவுவதாகவும், பட்டியலின மக்களுக்குக் கடைகளில் பொருள்கள் தருவதில்லை எனவும், டீக்கடையில் இரட்டைக் குவளை முறை நடைமுறையில் இருப்பதாகவும் புகார் எழுந்திருக்கிறது. இந்தப் பிரச்னை தொடர்பாக முடி திருத்தும் கடையின் உரிமையாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மூடப்பட்ட சலூன் கடை
மூடப்பட்ட சலூன் கடை

ஒரத்தநாடு அருகே கிளாமங்கலம் கிராமத்தில் பல ஆண்டுகளாகச் சாதியப் பாகுபாடு, தீண்டாமைப் பிரச்னை நிலவிவருவதாகக் கூறப்படுகிறது. அந்த ஊரிலுள்ள டீக்கடையில் இரட்டைக் குவளை முறை இப்போதும் பின்பற்றப்படுகிறது. முடி திருத்தும் கடையில் தங்களுக்கு முடிவெட்டுவதில்லை என கிளாமங்கலத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள் புகார் கூறிவருகின்றனர்.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கெனவே போலீஸிடம் மனு அளித்திருக்கின்றனர். இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், எம்.பி-யுமான ரவிக்குமார், தீண்டாமைக் கொடுமைப் பிரச்னை தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினிடமும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஆணையத்திடமும் வலியுத்தியிருக்கிறார். இந்தப் பிரச்னை அந்தப் பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தீண்டாமைக் கொடுமை பிரச்னைக்குள்ளான கிராமம்
தீண்டாமைக் கொடுமை பிரச்னைக்குள்ளான கிராமம்

இது குறித்து ராஜேந்திரன் என்பவரிடம் பேசினோம். ``எங்க ஊரில் பல ஆண்டுகளாகத் தீண்டாமைக் கொடுமைகள் நடந்துவருகின்றன. டீக்கடையில் இரட்டைக் குவளை முறை பின்பற்றப்படுகிறது. பட்டியலின மக்களுக்கென தனியாக டீ கிளாஸ் வைத்திருக்கின்றனர். மளிகைக்கடையில் பொருள்கள் தருவதில்லை. எங்கள் பெண்கள் அவசரத்துக்கு நாப்கின் கேட்டால்கூட தருவது இல்லை.

முடி திருத்தும் கடையில் எங்களுக்கு முடிவெட்டுவதில்லை. 2000, 2004-ம் ஆண்டுகளில் தீண்டாமைக் கொடுமை தொடர்பாக பிரச்னை நடந்தது. அதுமட்டுமல்ல, ஐந்துக்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இது தொடர்பாக அந்தச் சமயங்களில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலை, இன்னும் தொடர்வதால் பாப்பாநாடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம்.

ஆனால், போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை. புகார் கொடுத்ததால் ஆத்திரமடைந்த மாற்றுச் சமூகத்தினர் ஊர்க்கூட்டம் கூட்டி மளிகைக்கடையில் பொருள்கள் தரக் கூடாது, முடி வெட்டிவிடக் கூடாது, ஆடு, மாடு மேய்க்க விடக் கூடாது என உத்தரவு போட்டார்கள். எங்கள் இளைஞர்கள் முடிவெட்டச் சென்றால் கடைக்காரர் மூடிவிட்டுச் சென்றுவிடுவார். பால் உள்ளிட்ட பொருள்கள்கூட மளிகைக்கடையில் தர மாட்டார்கள்.

இந்த விவகாரம் மே 19 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி உள்ளிட்டவர்களின் கவனத்துக்குச் சென்ற பிறகு, அவர் மாவட்ட உயரதிகாரிகள் கவனத்துக்குக் கொண்டு சென்றார். அதன் பிறகு தாசில்தார் உள்ளிட்டவர்கள் விசாரணை மேற்கொண்டு தீண்டாமைக் கொடுமை நிலவுவதை உறுதி செய்தனர். நாங்கள் 16 பேர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் அளித்திருக்கிறோம். இனி எங்கள் ஊரில் தீண்டாமைக் கொடுமை இல்லாமல் முழுமையாகப் பிரச்னையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்க வேண்டும். நாங்கள் நிம்மதியாக வாழ வழிவகை செய்ய வேண்டும்" என்றார்.

கைது
கைது

இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் பேசினோம். ``முடி திருத்தும் கடை வைத்திருக்கும் வீரமுத்து என்பவர்மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து கைதுசெய்திருக்கிறோம். ஊரில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. மேற்கொண்டு விசாரணை நடத்திவருகிறோம்" எனத் தெரிவித்தனர்.

இது குறித்து அந்த கிராமத்தில் வசிக்கும் மாற்றுச் சமூகத்தினர் சிலரைக் கேட்டதற்கு, ``எங்க ஊரில் எந்தப் பிரச்னையும், எங்களுக்குள் எந்த மோதலும் இல்லை. ஒற்றுமையுடன் இருந்துவருகிறோம். வெளியூரைச் சேர்ந்த சிலர் எங்க ஊர் இளைஞர்களைத் தூண்டிவிடுகின்றனர். மளிகைக்கடையில் பெட்ரோல் விற்பனை செய்யக் கூடாது என்பது விதி. கடையில் பெட்ரோல் கேட்டு இல்லை எனக் கூறியதை, தீண்டாமைக் கொடுமை என்கிறார்கள்" என்று கூறினர்.