உ.பி அதிர்ச்சி: பாலியல் தொல்லை கொடுத்த உறவினர்! - மருத்துவமனையில் உயிரிழந்த 6 வயது சிறுமி

உத்தரப்பிரதேச மாநிலம், அலிகார் மாவட்டத்தில் உறவினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 6 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் விவகாரம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவத்தில் நீதி கோரி நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்துவருகின்றன. இந்தச்சூழலில் உ.பி-யின் அலிகார் பகுதியில் 20 நாள்களுக்கு முன்னர் 6 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

மனநலம் பாதிப்பட்ட அந்தச் சிறுமியை, அவரது உறவினரான சிறுவன் ஒருவன் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறான். இதில் பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்துப் பேசிய ஹத்ராஸ் மாவட்ட எஸ்.பி வினீத் ஜெய்ஸ்வால், ``ஹத்ராஸின் சதாபாத் பகுதியிலுள்ள ஜடோய் கிராமத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி, அலிகாரில் தங்கியிருந்தபோது இந்தக் கொடூரம் அரங்கேறியிருக்கிறது. மூன்று வாரங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அந்தச் சிறுமி நேற்று உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் குடும்பத்தினரால் தகனம் செய்யப்பட்டது

இது தொடர்பாக அலிகார் மாவட்டம், இக்லாஸ் காவல் நிலையத்தில் சிறுமியின் உறவினர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட அந்த நபர் அலிகார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். காவல்துறையினர் இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுத்துவருகிறார்கள்" என்று தெரிவித்தார்.