Published:Updated:

9 ஆண்டுகள் டெலிகாம் அனுபவம்; OLX-ல் விற்பனை செய்தவர்களிடம் Paytm மூலம் மோசடி - சிக்கிய உ.பி ஆசாமி!

சைபர் க்ரைம்
சைபர் க்ரைம்

பழைய ஃபர்னிச்சர்களை விற்பதற்காக, ஆன்லைன் விற்பனை தளமான OLX-ல் விளம்பரம் பதிவிடுபவர்களை முதலில் தொடர்புகொள்வார் பங்கஜ்.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான பங்கஜ் வெர்மா என்பவரை சைபர் க்ரைம் மோசடிக்காகக் கைது செய்திருக்கிறது டெல்லி காவல்துறை. பங்கஜ் வெர்மா உ.பி-யிலுள்ள அலிகார்க் பகுதியைச் சேர்ந்தவர். இவர் OLX தளத்தில் விற்பனைக்காக ஃபர்னிச்சர் குறித்துத் தகவல்களைப் பதிவிட்டிருப்பவர்களிடம் மோசடி செய்திருப்பது கண்டறியப்பட்டு, கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

எப்படி மோசடியில் ஈடுபடுவார்?

பழைய ஃபர்னிச்சர்களை விற்பதற்காக, ஆன்லைன் விற்பனை தளமான OLX-ல் விளம்பரம் பதிவிடுபவர்களை முதலில் தொடர்புகொள்வார் பங்கஜ். அடுத்து, அவர்களிடம் அந்தப் பொருளை வாங்குவதற்கு ஆர்வமாக இருப்பதுபோல காட்டிக்கொள்வார். பின்னர் மறுபடியும் விற்பனையாளர்களை அழைத்து, ``எனக்கு இந்தப் பொருள் மிகவும் பிடித்துவிட்டது. நான் வாங்கிக்கொள்கிறேன். அதற்கான தொகையை Paytm-ல் போட்டுவிட்டேன். உங்களுக்கு லிங்க் அனுப்பியிருக்கிறேன். அதை ஸ்கேன் செய்யுங்கள், பணம் உங்கள் வங்கிக் கணக்கில் ஏறிவிடும்'' என்று சொல்லுவார். இதை நம்பி அந்த லிங்க்கை க்ளிக் செய்தால், விற்பனையாளரின் Paytm அக்கவுன்ட்டிலிருந்து பணம் பறிபோய்விடும். இது போன்று பல பேரிடம் நூதன மோசடியில் ஈடுபட்டிருக்கிறார் பங்கஜ்.

மோசடி
மோசடி
MIG-23: ரூ.9.99 கோடிக்கு OLX-ல் விற்பனைக்கு வந்ததா கார்கில் போர் விமானம்? #FactCheck

வெளிச்சத்துக்கு வந்தது எப்படி?

நவம்பர் 2019-ல் டெல்லியின் வடமேற்குப் பகுதியிலுள்ள கேஷவ்புரம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு பதிவானது. அந்த வழக்கில், மயங்க் சின்ஹா என்பவர், தனது நண்பர் ராஜிவ் OLX-ல் பொருள் விற்க முயன்றபோது மோசடி நடந்துவிட்டதாகப் புகாரளித்திருந்தார்.

அந்தப் புகாரில், ``எனது நண்பர் ராஜிவ் OLX தளத்தில் ஃபர்னிச்சர் விற்பனைக்காக விளம்பரம் கொடுத்திருந்தார். அதைப் பார்த்துவிட்டு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ராஜிவை அழைத்து, பொருளை வாங்கிக்கொள்வதாகச் சொன்னார். அதோடு வாட்ஸ்அப்பில் ஒரு Paytm லிங்க்கையும் அனுப்பினார். ராஜிவிடம் பேடிஎம் இல்லாத காரணத்தால், எனக்கு அந்த லிங்க்கை அனுப்பினார் ராஜிவ். லிங்க்கை க்ளிக் செய்து உள்ளே சென்றவுடன், நான் பேடிஎம்மில் லிங்க் செய்து வைத்திருந்த வங்கிக் கணக்கிலிருந்து 19,358 ரூபாய் எடுக்கப்பட்டுவிட்டது'' என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கில், லிங்க் அனுப்பப்பட்ட செல்போன் எண்ணைக் கொண்டு சைபர் க்ரைம் பிரிவினர் விசாரணை செய்ததாகவும், அதன் மூலம் பங்கஜ் வெர்மாவின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் டெல்லி போலீஸார் தகவல் தெரிவித்திருக்கின்றனர். இதையடுத்து பங்கஜ் வெர்மாவை அலிகார்கில் வைத்து கைதுசெய்திருக்கிறது டெல்லி காவல்துறை.

cyber crime
cyber crime

டெலிகாம் அனுபவம், போலி ஆதார் கார்டுகள்!

பங்கஜ் வெர்மாவைக் கைதுசெய்யும்போது, அவரிடமிருந்து ஒரு பென் டிரைவ் மீட்கப்பட்டிருக்கிறது. அந்த பென் டிரைவில் 50 போலி ஆதார் கார்டு ஆவணங்கள் இருந்திருக்கின்றன. அந்த 50 ஆதார் கார்டுகளில் உள்ள தகவல்கள் வேறு வேறாக இருந்தாலும், அனைத்து கார்டுகளிலும் பங்கஜ் வெர்மாவின் புகைப்படமே இடம்பெற்றிருக்கின்றன.

பங்கஜ் வெர்மா குறித்து டெல்லி போலீஸார் கூறுகையில், ``பங்கஜ் 2008 முதல் 2017 வரை டெலிகாம் நிறுவனம் ஒன்றில் பணியாற்றியிருக்கிறார். அங்கு பணியாற்றியபோது சிம் கார்டுகளை ஆக்டிவேட் செய்வது எப்படி என்பதைக் கற்றுக்கொண்டிருக்கிறார். பின்னர், ஆதார் கார்டு, பான் கார்டு உள்ளிட்ட டாக்குமென்ட்டுகளைத் தயார்செய்து கொடுக்கும் மையம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். அங்கு அச்சிடப்படும் ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை இன்னொரு காப்பி அச்சடித்திருக்கிறார். அதன் மூலம் சிம் கார்டுகளை வாங்கியிருக்கிறார். புதிய சிம் கார்டுகளை ஆக்டிவேட் செய்யும் Flexi சிம் கார்டைக் கொண்டு போலி சிம்களை ஆக்டிவேட் செய்து, மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்'' என்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல், மேவாட், மேற்கு வங்கம் உள்ளிட்ட பகுதிகளில் மோசடி தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு, போலி சிம் கார்டுகளை பங்கஜ் விற்பனை செய்திருப்பதாகவும் போலீஸார் கூறுகின்றனர். பங்கஜ் வெர்மா குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், யார் யாரிடம் மோசடியில் ஈடுபட்டிருக்கிறார் என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் டெல்லி போலீஸார் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

கெஜ்ரிவால் - ஹர்ஷிதா
கெஜ்ரிவால் - ஹர்ஷிதா
`கியூஆர் கோடு... பறிபோன 34,000 ரூபாய்!’ - டெல்லி முதல்வர்  மகளிடம் ஆன்லைன் மோசடி

கடந்த பிப்ரவரி மாதத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா, OLX-ல் பழைய சோபாவை விற்பனை செய்வதற்காக விளம்பரம் கொடுத்திருந்தார். அவரிடமும் இதேபோல லிங்க் அனுப்பி 34,000 ரூபாய் மோசடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதையும் பங்கஜ் வெர்மா செய்தாரா என்றும் டெல்லி போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு