Published:Updated:

திருச்சி கொள்ளைச் சம்பவத்தில் வடமாநிலத்தவர்கள் கைவரிசை? - புதுக்கோட்டையில் சிக்கியவர்களிடம் விசாரணை!

பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளைக் கொள்ளையடித்த விசாரணையில் வட இந்தியர்கள் புதுக்கோட்டையில் கைதுசெய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள  வட இந்தியர்கள்
கைது செய்யப்பட்டுள்ள வட இந்தியர்கள்

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே லலிதா ஜுவல்லர்ஸ் நகைக் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று (2-ம் தேதி அதிகாலை), இந்தக் கடையின் பின்பக்க சுவரில் பெரிய ஓட்டைப் போடப்பட்டிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நகைக் கடை பணியாளர்கள் திருச்சி கோட்டை காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீஸார் நடத்திய விசாரணையில், மூன்று மாடி கொண்ட லலிதா ஜுவல்லர்ஸ் நகைக் கடையில் கீழ் தளம் மற்றும் மேல் தளத்தில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

lalitha jewellery
lalitha jewellery

இந்நிறுவனம், அருகில் உள்ள தனியார் சுயநிதி கலை அறிவியல் கல்லூரி மைதானத்தின் ஒரு பகுதியைக் குத்தகைக்கு எடுத்து அதில் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவை நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அந்த மைதானம் வழியாக நகைக்கடையின் பக்கவாட்டுச் சுவரில் பெரிய துளையிட்டு, நகைக்கடையின் உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் கைவரிசைக் காட்டியது தெரியவந்தது.

இந்த நிலையில், தங்க நகைக் கடையில் நடந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக லலிதா ஜுவல்லரி உரிமையாளர் கிரண்குமார், போலீஸாரின் விசாரணையில் நம்பிக்கை உள்ளதாகவும், திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக் கடையில் இருந்த சுமார் 35 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் வைரம், பிளாட்டினம் உள்ளிட்ட ஆபரணப் பொருள்கள் கொள்ளை போயிருப்பதாகவும், விரைவில் குற்றவாளிகளை போலீஸார் கைது செய்வார்கள்" என நம்பிக்கை தெரிவித்தார்.

lalitha jewellery theft
lalitha jewellery theft

நடந்த கொள்ளைச் சம்பவம் குறித்து தகவலறிந்த திருச்சியில் உள்ள பெரிய நகைக்கடை அதிபர்கள், திருச்சி எம்.பி திருநாவுக்கரசு உள்ளிட்டோர் நேரில் வந்து சம்பவ இடத்தைப் பார்வையிட்டுச் சென்றனர். இதையடுத்து, கொள்ளைச் சம்பவம் குறித்து விசாரிக்கத் திருச்சி மாநகரக் காவல் ஆணையர் அமல்ராஜ் 7 தனிப்படைகள் அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டார். நேற்று காலை முதல் தனிப்படை போலீஸாரின் ஒரு பிரிவினர் கொள்ளை போன லலிதா ஜுவல்லர்ஸ் நகைக்கடையின் பணியாளர்கள் 160 பேரிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

போலீஸாரின் விசாரணையில் நகைக் கடையின் பின்பக்க சுவரை துளையிட்ட கொள்ளையர்கள் 2.30 முதல் 4.30 மணி வரை உள்ளே இருந்ததும், குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் முகமூடியை முகத்தில் மாட்டிக்கொண்டு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதும் நகைக் கடையிலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் அம்பலமானது.

lalitha jewellery theft
lalitha jewellery theft

அதைத்தொடர்ந்து திருச்சி மட்டுமல்லாமல், புதுக்கோட்டை பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் தங்கியிருக்கும் நபர்கள் குறித்த தகவல்களை போலீஸார் விசாரிக்கத் தொடங்கினார்கள். புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் போலீஸார் நடத்திய விசாரணையில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நான்கு வட இந்தியர்கள் தங்கியிருப்பது தெரியவந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது ஒருவர் போலீஸாரிடமிருந்து தப்பிக்க சுவர் ஏறிக் குதித்து ஓட முயன்றார். அதில் அவரது கால் உடைந்தது. அவனைப் பிடித்து விசாரித்ததில் அவன் பெயர் அபிஜூடு என்று தெரியவந்தது. தொடர்ந்து அவனுக்குப் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கைது செய்யப்பட்டுள்ள  வட இந்தியர்கள்
கைது செய்யப்பட்டுள்ள வட இந்தியர்கள்

போலீஸாரிடம் சிக்கியுள்ள அபிஜூடு மற்றும் சமீர் ஷேக் உள்ளிட்ட நான்கு பேரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். போலீஸாரின் விசாரணையில் பல திடுக்கிடும் சம்பவங்கள் குறித்து தகவல்கள் வெளியாகலாம் எனத் தெரிகிறது.