அரசியல்
Published:Updated:

அநீதி... அவதூறு... அவமானம்... கலங்கவைக்கும் ஹத்ராஸ் கொடூரம்!

ஹத்ராஸ் கொடூரம்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஹத்ராஸ் கொடூரம்!

ஒட்டுமொத்த கிராமத்துக்கும் தடை போட்டுவிட்டு, பெண்ணின் சடலத்தைத் தூக்கிக்கொண்டு சுடுகாட்டுக்குக் கிளம்பினர்.

அவர் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட முதல் பட்டியலினப் பெண் அல்ல... உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில், புல்கடி என்ற கிராமத்தில் அந்த 19 வயதுப் பெண் இந்தக் கொடுமையை அனுபவித்துச் சாவதற்கு முன்னர் பல்லாயிரம் பேருக்கு இங்கு இந்தக் கொடூரம் நிகழ்ந்திருக்கிறது. அவர் கடைசிப் பெண்ணும் அல்ல... இதற்குப் பிறகும் இதே போன்ற கொடூரங்கள் நிகழும். அவை வெறும் புள்ளிவிவரங்களாகச் சேகரிக்கப்படும். தேசத்தின் முகத்தில் அழியாத அவமானக் கறைகளாக அவை காலம் முழுக்க நிலைத்திருக்கும்.

எனில், எதற்காக தேசம் முழுக்க இவ்வளவு கொந்தளிப்பு? டெல்லியில் நிர்பயாவுக்கு நிகழ்ந்த கொடூரத்தின் சுவடுகளை ஹத்ராஸ் சம்பவத்திலும் காண முடியும். மனிதத்தன்மையற்ற இந்தக் கொடூரத்தை எவராலும் ஜீரணிக்க முடியவில்லை. பா.ஜ.க மூத்த தலைவர் உமாபாரதி போன்றவர்கள் வேதனையுடன் இது பற்றிப் பேசுகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தச் சம்பவத்தை மூடி மறைப்பதற்காக உத்தரப்பிரதேச போலீஸார் மேற்கொண்ட செயல்கள், நாகரிக சமூகத்தை வெட்கித் தலைகுனிய வைத்துவிடும். அதுதான் இந்தக் கொடூரத்தை தேசம் முழுக்க விவாதப் பொருளாக்கியிருக்கிறது.

நள்ளிரவில் சடலத்தை எரித்த போலீஸ்!

டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹத்ராஸ் பெண், சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 29-ம் தேதி இறந்தார். இரவோடு இரவாக அவரது சடலத்தை சொந்த ஊருக்கு எடுத்துவந்த போலீஸார், அந்த இரவிலேயே தகனம் செய்யுமாறு கட்டாயப்படுத்தினர். ஆனால், ‘இரவில் எரிக்கும் வழக்கம் எங்களுக்கு இல்லை. காலையில் குளிப்பாட்டி, வேறு உடை அணிவித்து தகனம் செய்கிறோம்’ என்று குடும்பத்தினர் மறுத்தனர்.

உடனே போலீஸார், ‘யாரும் வீட்டைவிட்டு வெளியில் வரக் கூடாது’ என்று ஒட்டுமொத்த கிராமத்துக்கும் தடை போட்டுவிட்டு, பெண்ணின் சடலத்தைத் தூக்கிக்கொண்டு சுடுகாட்டுக்குக் கிளம்பினர். வீடுகளிலிருந்து வெளியில் வந்தவர்கள், சடலத்தை நெருங்க முயன்றவர்கள் என எல்லோரையும் லத்தியால் அடித்து விரட்டியது போலீஸ். ‘கடைசியாக ஒரு முறை மகளின் முகத்தைப் பார்த்துக் கொள்கிறேன்’ என நெருங்க முயன்ற அம்மாவும்கூட அடித்துத் துரத்தப்பட்டார். அவசர அவசரமாக அந்த இரவிலேயே சடலத்தை பெட்ரோல் ஊற்றி தகனம் செய்தனர். மீடியாக்களில் இது வெளியானதும், தேசம் முழுக்க அந்த நெருப்பு பரவியது.

அநீதி... அவதூறு... அவமானம்... கலங்கவைக்கும் ஹத்ராஸ் கொடூரம்!

வீட்டுக்குள் சிறை!

ஹத்ராஸ் பெண் இறந்த நிமிடத்திலிருந்து, புல்கடி கிராமத்தைச் சுற்றி வளைத்து அரண் அமைத்தது போலீஸ். யாரும் உள்ளே வர அனுமதிக்கப்படவில்லை. மீடியாக்களுக்கும் அனுமதி இல்லை. வீட்டைச் சுற்றிலும், வீட்டுக்குள்ளும் எப்போதும் போலீஸ் இருந்தது. ‘‘துக்கம் விசாரிக்க வந்த உறவினர்களுக்குச் சமைப்பதற்காக மளிகைச் சாமான்கள் வாங்கு வதற்குக்கூட எங்களை வெளியில் விடவில்லை’’ என்று கதறினார் பெண்ணின் அண்ணன்.

கேட்டால், கொரோனா தொற்றைக் காரணம் காட்டினர். கூடவே, ‘சிறப்புப் புலனாய்வுக்குழு விசாரணை முடியும் வரை யாரையும் அனுமதிக்க முடியாது’ என்றும் காரணம் சொன்னார்கள். எதிர்க்கட்சிகளின் கூக்குரல்களுக்குப் பிறகு அக்டோபர் 3-ம் தேதி சனிக்கிழமை ஒரு நாள் மீடியாக்களுக்கு அனுமதி கிடைத்தது.

இதற்கிடையே அலகாபாத் உயர் நீதிமன்றம் இந்த வழக்கைத் தானாகவே விசாரணைக்கு எடுத்துக்கொண்டு நோட்டீஸ் அனுப்ப, உ.பி அரசு வேறு வழியின்றி மாவட்ட எஸ்.பி விக்ராந்த் வீர் உள்ளிட்ட நான்கு போலீஸாரை சஸ்பெண்ட் செய்தது. இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு 25 லட்ச ரூபாய் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அறிவித்தது. கடைசியாக சி.பி.ஐ விசாரணைக்கும் பரிந்துரைத்தது. ஆனால், ‘ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கண்காணிப்பில் விசாரணை நடைபெற வேண்டும்’ என்று கோருகிறது பெண்ணின் குடும்பம்.

‘‘வாங்கிக்கொண்டு வாயை மூடு!’’

வால்மீகி என்ற பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நான்கு குடும்பங்கள் மட்டுமே அந்த ஊரில் இருக்கின்றன. அவற்றில் ஒரு குடும்பத்தில் பிறந்தவர்தான் இந்தப் பெண். ஊரில் பெரும்பான்மையாக இருக்கும் தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்த நான்கு பேர் தன்னைப் பாலியல் வன்முறை செய்ததாக அந்தப் பெண் குற்றம்சாட்டியிருந்தார். அந்த நான்கு பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

இந்தநிலையில், ‘‘வழக்கை முடித்துக் கொள்ளுமாறு எனக்கு அழுத்தம் தருகிறார்கள். தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஊர்ப் பஞ்சாயத்தைக் கூட்டி என்னை தண்டிக்கப் போவதாக மிரட்டுகிறார்கள். போலீஸார் ஏதேதோ காகிதங்களில் கையெழுத்து கேட்கிறார்கள்’’ என்று குமுறியிருக்கிறார் பெண்ணின் அப்பா.

இவரை ஹத்ராஸ் மாவட்ட கலெக்டர் பிரவீன் குமார் லக்ஸ்கர் மிரட்டும் வீடியோவும் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. ‘‘மீடியாக்காரர்கள் இப்போது இருப்பார்கள். சில நாள்களில் போய்விடுவார்கள். நாங்கள்தான் இங்கு இருப்போம். உன் மகள் கொரோனாவில் இறந்திருந்தால் பணம் கிடைத்திருக்குமா... இப்போது மாநில அரசு 25 லட்ச ரூபாய் தருகிறது. அரசு வேலை கொடுக்கிறது. வாங்கிக்கொண்டு அமைதியாக இரு’’ என்று மிரட்டுகிறார் கலெக்டர்.

‘இந்தியா டுடே’ நிருபர் தனுஸ்ரீ பாண்டே, இறந்த பெண்ணின் அண்ணனிடம் போனில் பேசினார். அந்த போன் உரையாடல், அரசுக்கு ஆதரவான ஓர் இணையதளத்தில் வெளியானது. ‘‘எங்கள் நிருபரின் போனோ அல்லது அந்தக் குடும்பத்தினரின் போனோ அரசால் ஒட்டுக் கேட்கப்படுகிறது. எதற்காக இப்படி சட்டவிரோத செயலில் அரசே ஈடுபடுகிறது?’’ என ‘இந்தியா டுடே’ கேள்வி எழுப்பியிருக்கிறது.

அநீதி... அவதூறு... அவமானம்... கலங்கவைக்கும் ஹத்ராஸ் கொடூரம்!

பதைபதைக்கவைத்த போலீஸ் ராஜ்ஜியம்!

மிரட்டப்படுவது அந்தக் குடும்பம் மட்டுமல்ல... அந்தக் குடும்பத்துக்கு ஆதரவாக நிற்க முயன்ற எல்லோரும்தான்! இறந்த பெண்ணின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், அவர் சகோதரி பிரியங்காவும் சென்றனர். டெல்லி, நொய்டா நெடுஞ்சாலையிலேயே போலீஸ் அவர்களைத் தடுத்தது. ‘‘சரி, நாங்கள் நடந்தே செல்கிறோம்’’ என்று காரிலிருந்து இறங்கி ராகுல் நடக்க, அப்போதும் தடுத்தது போலீஸ். இந்தத் தள்ளுமுள்ளு கலாட்டாவில் தடுமாறிக் கீழே விழுந்தார் ராகுல். அவருக்கு சிராய்ப்பு ஏற்பட்டது. போலீஸ் அவர்களைக் கைதுசெய்து, வலுக்கட்டாயமாகத் திருப்பி அனுப்பியது.

திரிணாமுல் காங்கிரஸ் குழு ஒன்று, கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி-யுமான டெரெக் ஓ பிரையன் தலைமையில் வந்தது. ஊருக்கு வெளியில் போலீஸ் கட்டியிருந்த தடுப்புக் கயிற்றைத் தாண்டி உள்ளே சென்ற ஓபிரையனை, கிரிக்கெட் ஹெல்மெட் அணிந்திருந்த ஹத்ராஸ் சப் கலெக்டர் பிரேம் பிரகாஷ் மீனா பிடித்து கயிற்றுக்கு வெளியில் தள்ளிவிட்டார். தடுமாறித் தரையில் விழுந்த ஓ பிரையன் வாக்குவாதம் செய்ய, மீண்டும் அவரைத் தள்ளிவிட்டபடி, செஞ்சுரி அடித்த கிரிக்கெட் வீரர்போல கம்பீரமாகக் கைகட்டி நின்றார் அந்த சப் கலெக்டர். அவருடன் சென்ற ஒரு பெண் எம்.பி., முன்னாள் பெண் எம்.பி ஆகியோரைச் சர்வசாதாரணமாக ஆண் போலீஸார் பிடித்துத் தள்ளினர்.

ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியின் தலைவர் ஜெயந்த் சௌத்ரி தலைமையில் ஒரு குழு சென்றது. போலீஸ் அவர்களைத் தடியடி நடத்தி விரட்டியது. ஜெயந்த் மீது அடி விழாமலிருக்க, நான்கைந்து தொண்டர்கள் அவரைச் சூழ்ந்து நின்று அடியை வாங்கிக்கொண்டனர். தர்மேந்திர யாதவ் தலைமையில் சென்ற சமாஜ்வாடி கட்சியினருக்கும் இதேபோல அடி விழுந்தது. ‘‘இந்த இரண்டு கட்சித் தொண்டர்களும் பெண்களிடம் தவறாக நடக்க முயன்றனர். அதனால் போலீஸ் அடித்தது’’ என அலட்சியமாகச் சொன்னார் சப் கலெக்டர்.

உண்மையில் திரிணாமுல் காங்கிரஸ் பெண் பிரமுகர்களிடமும், பிறகு பிரியங்கா காந்தியிடமும் தவறாக நடந்துகொண்டது போலீஸார்தான். இரண்டாவது முறையாக ராகுலும் பிரியங்காவும் சென்றபோது, அவர்களை ஊருக்குள் அனுமதித்தது போலீஸ். ஆனால், உடன் சென்ற தொண்டர்களை அனுமதிக்கவில்லை. அவர்களைத் தடியடி நடத்தி போலீஸ் கலைத்தபோது, பிரியங்கா தன் காரிலிருந்து இறங்கித் தடுக்க முயன்றார். அப்போது அவரது மேலாடையைப் பிடித்து இழுத்தார் ஒரு போலீஸ்காரர். இரண்டு நாள்களுக்குப் பிறகு போலீஸ் இதற்காக மன்னிப்புக் கேட்டது!

‘செல்போன்கள் மூலம் எல்லோரது கைகளுக்கும் கேமரா வந்துவிட்ட காலத்தில் இந்தியாவில் நிகழ்ந்த மிகப்பெரிய போலீஸ் அத்துமீறல்’ என ஹத்ராஸ் சம்பவங்களைக் குறிப்பிடலாம். எல்லோரது கேள்வியும் ஒன்றே ஒன்றுதான்... ‘யார் சொல்லி போலீஸும் அதிகார வர்க்கமும் இவ்வளவு அராஜகத்தில் ஈடுபடுகின்றனர்?’ அவர்களின் விரல்கள் சுட்டுவது, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை!

அங்கே கூடுவதற்குத் தடை இல்லை!

இத்தனை பரபரப்பு களுக்கும் மத்தியில் புல்கடி கிராமத்திலிருந்து வெறும் 6 கிலோமீட்டர் தூரத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. நடத்தியவர், பா.ஜ.க-வின் முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்விர் சிங் பெஹல்வான். தாக்கூர்கள் திரண்ட இந்தக் கூட்டத்தில், ‘‘ஹத்ராஸ் பெண் புகாரில் கைது செய்யப்பட்ட அப்பாவிகளை விடுதலை செய்ய வேண்டும்’’ என முழக்கம் எழுப்பப்பட்டது. ‘பொய்ப் புகார் அளித்த அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்’ எனவும் பேட்டி கொடுத்தனர். ‘144 தடை உத்தரவு அமலில் இருப்பதாக’க் கூறி அத்தனை தலைவர்களையும் அடித்து விரட்டிய போலீஸ், 200 பேருக்கும் மேல் கூடிய இந்தக் கூட்டத்துக்கு காவல் புரிந்தது.

அநீதி... அவதூறு... அவமானம்... கலங்கவைக்கும் ஹத்ராஸ் கொடூரம்!

உத்தரப்பிரதேச அரசும் போலீஸும் யார் பக்கம் நிற்கின்றன என்பதைத் தெளிவாக உணர்த்திய காட்சி இது. ஆரம்பத்திலிருந்தே உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த விவகாரத்தில் கனத்த மௌனம் காத்துவந்தார். பா.ஜ.க இடைத்தேர்தலுக்கான ஆயத்தக் கூட்டம் ஒன்றில், ‘‘நம் மாநிலத்தில் சாதிரீதியாகப் பிளவு ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயல்கின்றன’’ என்றார். இது மட்டும்தான் அவரின் ரியாக்‌ஷன்.

பா.ஜ.க-வின் ஐ.டி பிரிவினர் உள்ளிட்ட பலரும், ‘பாலியல் வன்கொடுமை ராஜஸ்தானில் நடக்கவில்லையா... கேரளாவில் நடக்கவில்லையா... இதை மட்டும் ஏன் பெரிதுபடுத்துகிறீர்கள்?’ என்று கேட்டனர். இப்போது, ‘பாலியல் வன்கொடுமையே நடக்கவில்லை. அந்தப் பெண் பொய் சொல்லிவிட்டார்’ என்கின்றனர். எதிர்ப்பு நெருப்பை அணைப்பதற்காக, இவர்கள் தண்ணீர் என நினைத்துக்கொண்டு இப்படி பெட்ரோல் வார்க்கின்றனர்.

***

பாலியல் வன்கொடுமையே நடக்கவில்லையா?

ஹத்ராஸ் பெண்ணின் இறுதி மருத்துவ அறிக்கை வெளியாவதற்கு மூன்று நாள்களுக்கு முன்னரே, ‘‘எல்லோரும் சொல்வதுபோல இது பாலியல் வன்கொடுமை வழக்கு அல்ல’’ என்று சொன்னார் உத்தரப்பிரதேச ஏ.டி.ஜி.பி பிரசாந்த் குமார். உ.பி போலீஸ் இந்த வழக்கை எப்படிக் கொண்டு போக விரும்புகிறது என்பதை இது உணர்த்தியது. அவர் சொன்னதுபோலவே மருத்துவ அறிக்கையும் வெளியாகியிருக்கிறது.

உண்மையில் என்ன நடந்தது? சம்பவம் நடந்தது செப்டம்பர் 14-ம் தேதி. அம்மாவுடன் வயலுக்குப் போன பெண்ணை திடீரெனக் காணவில்லை. கடும் வெயிலாக இருந்ததால், அருகிலேயே இருக்கும் வீட்டுக்குத் தண்ணீர் குடிக்க மகள் போயிருப்பதாக அம்மா நினைத்துக்கொள்கிறார். (அவருக்குக் காது சரியாகக் கேட்காது!) நீண்டநேரமாக வராததால் தேடியபோது, பக்கத்து வயலில் நிர்வாணமாகக் கிடந்த மகளைக் கண்டெடுக்கிறார். தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்த சந்தீப், அவரின் மாமா ரவி, நண்பர்கள் ராமு, லவகுஷ் ஆகியோர் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்து, துப்பட்டாவால் கழுத்தை இறுக்கிக் கொல்ல முயன்றதாக தன் அம்மாவிடம் சொல்கிறார் மகள்.

போலீஸில் புகார் செய்துவிட்டு, குற்றுயிராகக் கிடந்த அவரை மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். ‘‘மகளின் எதிர்காலத்தைக் கருதி, பாலியல் வன்கொடுமை நடந்த விஷயத்தைக் குடும்பத்தினருக்குக்கூட சொல்லாமல் மறைத்தேன். கழுத்திலும் முதுகிலும் ஏற்பட்ட காயங்களால் கடும் பாதிப்பு ஏற்பட்டு, அவள் கைகளும் கால்களும் செயலிழந்த நிலையில்தான் இந்த உண்மையை மற்றவர்களிடம் சொன்னேன்’’ என்கிறார் பெண்ணின் அம்மா.

எட்டு நாள்கள் கழித்து மருத்துவப் பரிசோதனை நடந்ததால், பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததற்கான ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை. தனக்கு என்ன நடந்தது என்பதை மருத்துவர்களிடம் அந்தப் பெண் விவரித்திருக்கிறார். அவருக்கு முதலில் சிகிச்சையளித்த அலிகார் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியும், பிறகு சிகிச்சை அளித்த டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையும் முரண்பட்ட மருத்துவ அறிக்கைகளையே கொடுத்தன. இந்த வழக்கு குறித்து மீடியாக்களில் இவ்வளவு விவாதிக்கப்பட்ட சூழலிலும், போஸ்ட் மார்ட்டம் அறிக்கையில் பாலியல் வன்கொடுமை குறித்து எதுவுமே இல்லை. சடலத்தையும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்காமல் போலீஸாரே டெல்லியிலிருந்து ஹத்ராஸ் எடுத்து வந்தனர்.

இது போன்ற சந்தேகச் சூழலில், பாதிக்கப்பட்ட பெண் தரும் மரண வாக்குமூலமே ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். ஆனால், ‘பெண்ணின் குடும்பத்தினர் மாற்றி மாற்றிப் பேசுகிறார்கள். அவர்களிடம் உண்மை அறியும் பரிசோதனை நடத்தப்படும்’ என்று அறிவிக்கும் அளவுக்குப் போனது உ.பி போலீஸ். ‘‘எங்களுக்கு ஏன் அந்தப் பரிசோதனை... நாங்கள் என்ன குற்றவாளிகளா?’’ என்று கேட்கிறார்கள் பெண்ணின் உறவினர்கள்.

இறந்த பெண்ணுக்கு இரண்டு அண்ணன்கள். அந்தப் பெண் எரிக்கப்பட்ட இடத்திலிருந்து நான்கு நாள்களுக்குப் பிறகு அஸ்தியை எடுத்துவந்த அவர்கள், ‘‘இது எங்கள் தங்கையின் அஸ்திதானா என்பது எங்களுக்குத் தெரியாது. ஏதோ ஒரு நம்பிக்கையில் எடுத்து வந்திருக்கிறோம். ஆனால் ஒன்று, எங்கள் தங்கைக்கு நீதி கிடைக்காமல் இதைக் கரைக்க மாட்டோம்’’ என்று உறுதியாகச் சொல்லியிருக்கிறார்கள்.