Published:Updated:

வேலூரில் ரூ.65,000-க்கு குழந்தை விற்பனை! - தாய் உட்பட 5 பேர் கைது

வாணியம்பாடியில், மூன்றாவது கணவனுக்குப் பிறந்த குழந்தையை 65,000 ரூபாய்க்கு விற்பனை செய்த, தாய் உட்பட 5 பேரைப் பிடித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள்.

தாய் சத்யா
தாய் சத்யா

வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த இந்திரா நகரைச் சேர்ந்தவர் சத்யா. ஏற்கெனவே, இரண்டு முறை திருமணம் செய்த இந்தப் பெண், தனியாக வசித்துவந்தார். ஓராண்டுக்கு முன்பு மூன்றாவதாக, முருகன் என்பவருடன் நெருக்கமாகத் தொடர்பு ஏற்பட்டதால் சத்யா கர்ப்பமடைந்தார். முருகனும் ஏற்கெனவே திருமணமாகி முதல் மனைவியுடன் வாழ்ந்துவருகிறார். இதையெல்லாம் தெரிந்துதான், இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

பெரியம்மாள் கீதா
பெரியம்மாள் கீதா

முதல் மனைவியுடன் வசிக்கும் முருகன் எப்போதாவதுதான் சத்யா வீட்டுக்கு வந்து செல்வார். இந்தநிலையில், சத்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. காசநோயால் பாதிக்கப்பட்ட முருகன் சத்யாவின் வீட்டுக்கு வரும்போதெல்லாம், குழந்தையை தூக்காமல் அருகில் நின்று கொஞ்சி மகிழ்ந்திருக்கிறார். இதனிடையே, `குழந்தையை வைத்துக்கொள்ள விரும்பவில்லை’ என்று தன் பெரியம்மாள் கீதாவிடம் கூறி சத்யா புலம்பியிருக்கிறார்.

``குழந்தையை விற்றுவிடலாம்'' என்று பெரியம்மாள் ஆலோசனை கூறினார். இதற்கு, ``கணவன் முருகன் ஒத்துக்கொள்ளமாட்டார்’' என்று சத்யா கூறவே, ``அவன் என்ன உன்னுடைய முதல் கணவனா... இல்லை நீ தான் அவனுக்கு முதல் மனைவியா... விட்டுத்தள்ளு, நான் பார்த்துக்கொள்கிறேன்'' என்று பெரியம்மாள் நம்பிக்கை கூறினார். முருகனுக்குத் தெரியாமல் குழந்தையை விற்க இடைத்தரகர் கவிதா என்பவரை கீதா அழைத்துவந்தார். 

இடைத்தரகர் கவிதா
இடைத்தரகர் கவிதா

தரகர் மூலம், பெங்களூரு ஜெய் நகரைச் சேர்ந்த ரஹமத்-சகிலா தம்பதியிடம் ஆண் குழந்தையை 65,000 ரூபாய்க்கு கீதா விற்பனை செய்தார். குழந்தையை வாங்கியவர்கள் பெங்களூருக்குக் கொண்டு சென்றுவிட்டனர். இடைத்தரகரும் `கமிஷன்’ வாங்கிக்கொண்டு நடையைக் கட்டினார். குழந்தையை விற்ற பணத்தில் பெரியம்மாளுடன் சேர்ந்து சத்யா ஜாலியாக செலவழித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சத்யாவைப் பார்க்கவந்த முருகன், `குழந்தை எங்கே?’ என்று கேட்டுள்ளார். 

``என் பெரியம்மாள், அவரது வீட்டுக்குத் தூக்கிச் சென்றுள்ளார்'' என்றுகூறி சத்யா மழுப்பியிருக்கிறார். இதனால், சந்தேகமடைந்த முருகன், ‘குழந்தையை தூக்கிக்கொண்டு வந்து கண்ணில் காட்டுமாறு’ சண்டை போட்டுள்ளார். அதன் பின்னரே, காசுக்காகக் குழந்தையை விற்றது, வெளிச்சத்துக்கு வந்தது. அதிர்ந்து போன முருகன் உடனே வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்தார். 

சத்யா
சத்யா

இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையிலான போலீஸார் பெங்களூருக்கு விரைந்தனர். அங்கு, ரஹமத்-சகிலா தம்பதியிடமிருந்து குழந்தையைப் பத்திரமாக மீட்டு இன்றுகாலை வாணியம்பாடிக்குக் கொண்டுவந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாகப் பெங்களூரு தம்பதி உட்பட தாய் சத்யா, அவரின் பெரியம்மாள் கீதா, இடைத்தரகர் கவிதா ஆகிய 5 பேரிடமும், காவல்துறையினர் கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்திவருகிறார்கள். பெற்ற தாயே குழந்தையை விற்ற சம்பவம், வாணியம்பாடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.