Published:Updated:

வேதாரண்யம்: 16 வயது சிறுமி... பாலியல் வன்கொடுமை! - அ.தி.மு.க பிரமுகர் உட்பட 4 பேர் கைது

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை ( Representational Image )

`போக்சோ சட்டத்துக்கு சாட்சியே தேவையில்லை. பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் வாக்குமூலம்தான் முக்கியம். அதை வைத்துத்தான் முதலில் விஜயன், அரவிந்தன், துர்காதேவி மூவரையும் கைதுசெய்தோம்.’

வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் அ.தி.மு.க பிரமுகர் உட்பட மூன்று பேரும், அதற்கு உடந்தையாக இருந்த ஒரு பெண்ணும் போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

துர்கா தேவி
துர்கா தேவி

நாகை மாவட்டம், வேதாரண்யத்தைச் சேர்ந்த விவசாயக்கூலித் தொழிலாளியின் மகளான அந்தச் சிறுமி, அருகிலுள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துவருகிறார். அவருடைய தாய் வேதாரண்யம் கடைவீதியிலுள்ள ஓர உணவகத்தில் வேலை செய்துவந்தார். தாய் வேலைக்குச் செல்ல முடியாத நேரத்தில், அவருக்கு பதிலாக அந்தச் சிறுமி உணவகத்துக்கு வேலைக்குச் சென்றிருக்கிறார். அப்போது அந்தக் கடையின் உரிமையாளர் சண்முகசுந்தரம் என்பவர், தனிமையைப் பயன்படுத்தி அந்தச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து சிறுமி பெற்றோரிடம் சொல்ல அச்சப்பட்டுக்கொண்டு, வீட்டுக்கருகேயுள்ள அரவிந்தன் என்பவரின் மனைவி துர்காதேவியிடம், கடை முதலாளி தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டதைக் கூறியிருக்கிறார். இதை துர்காதேவி தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, அதே தெருவில் வசிக்கும் அ.தி.மு.க பிரமுகர் விஜயன் என்பவரிடம் கூறியிருக்கிறார். இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்திக்கொண்ட விஜயன், அந்தச் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இதை அறிந்த துர்காதேவியின் கணவர் அரவிந்தனும் அந்தச் சிறுமியை மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்ததாகச் சொல்கிறார்கள்.

விஜயன் - அரவிந்தன்
விஜயன் - அரவிந்தன்

இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மலர்கொடி போக்சோ சட்டம் மற்றும் பல்வேறு பிரிவுகளின் கீழ் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விஜயன், அரவிந்தன், துர்காதேவி ஆகிய மூன்று பேரைக் கைதுசெய்து சிறையிலடைத்திருக்கிறார். ஆனால், முதல் குற்றவாளியான சண்முகசுந்தரத்தின் சகோதரர் காவல்துறையில் பணியாற்றுவதாகவும், அதனால் அவரைக் கைது செய்யவில்லை என்றும் ஒரு செய்தி பரவியது.

இது பற்றி வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மலர்க்கொடியை நேரில் சந்தித்து விளக்கம் கேட்டோம். ``அது தவறான தகவல். தவறு செய்த யாரையும் யாருக்காகவும் விட மாட்டோம். அந்த அப்பாவிப் பெண்ணுக்கு நேர்ந்த துயரம் மிகவும் கொடுமையானது.

மலர்க்கொடி
மலர்க்கொடி

போக்சோ சட்டத்துக்கு சாட்சியே தேவையில்லை. பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் வாக்குமூலம்தான் முக்கியம். அதை வைத்துத்தான் முதலில் விஜயன், அரவிந்தன், துர்காதேவி மூவரையும் கைதுசெய்தோம். தலைமறைவாகியிருந்த சண்முகசுந்தரத்தை இன்று கைதுசெய்திருக்கிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு