Election bannerElection banner
Published:Updated:

வேலூர்: `மயக்க ஸ்பிரே அடித்துக் கடத்தல்; 7 மாத கர்ப்பம்!’ - மாணவிக்கு நேர்ந்த கொடுமை

வேலூர் - பாலியல் வன்கொடுமை
வேலூர் - பாலியல் வன்கொடுமை

``கல்லூரிக்கு வரச்சொல்லி மயக்க ஸ்பிரே அடித்து, கடத்திச் சென்றனர். ஓர் அறையில் அடைத்துவைத்து பாலியல் வன்கொடுமை செய்ததால் கர்ப்பமடைந்தேன்’’ என்று அதிரவைத்திருக்கிறார், வேலூரைச் சேர்ந்த ஓர் மாணவி.

வேலூர் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்த 16 வயது மாணவி, இறைவன்காடு பகுதியிலுள்ள ஸ்ரீஅன்னை பாலிடெக்னிக் கல்லூரியில், இரண்டாம் ஆண்டு படிப்பதாகக் கூறப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் வீட்டிலிருந்தார் மாணவி. ஆனால் ஒருகட்டத்தில் அவர் வயிறு வீக்கமடைந்ததுபோல் பெரிதாகியிருக்கிறது. பெற்றோரும் அலட்சியமாக விட்டிருக்கிறார்கள். இந்தச் சூழலில், மாணவியின் பாட்டிக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த 16-ம் தேதி, வடுகந்தாங்கலிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அந்த மாணவியை அழைத்துச் சென்று பரிசோதனை செய்து பார்த்தபோது, மாணவி ஏழு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

`16 வயதே ஆகிறது. சின்னப் பெண்ணாக இருக்கிறாள். திருமணமும் ஆகவில்லை’’ என்பதால் மாணவிக்கு நடந்த விபரீதம் குறித்து மருத்துவர்கள் கேட்டறிய முயன்றனர். முன்னுக்குப்பின் முரணாக மாணவி பதில் கூறியதால், சமூக நலத்துறையின்கீழ் இயங்கும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Representational Image
Representational Image

மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) கோமதி உத்தரவின்பேரில், சேவை மைய பணியாளர்கள் பிரியங்கா, சாந்தி ஆகியோர் நேரில் சென்று மாணவியிடம் விசாரிக்கத் தொடங்கினர். ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்தவருடன் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 2-ம் தேதி தனக்கு திருமணம் நடைபெற்றதாகவும், கணவர் விஜயவாடா சென்றுவிட்டதாகவும் மாணவி கூறினார். மாணவியின் கழுத்தில் தாலிக்கயிறு இல்லை. பேச்சில் தடுமாற்றமும் அச்சமும் தெரிந்ததால், மனநல ஆலோசனை வழங்கினர். அதன் பின்னரே, மாணவிக்கு திருமணம் ஆகவில்லை என்பதும், பாலியல் வன்கொடுமையால் அவர் பாதிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

‘‘ஊரடங்கு அமலுக்கு வந்த அதே மார்ச் மாதம் 28-ம் தேதி என்னுடைய அப்பாவின் செல்போனுக்கு கல்லூரியிலிருந்து போன் வந்தது. போனில் பேசியவர், ரெக்கார்டு நோட் எடுத்துக்கொண்டு கல்லூரிக்கு வருமாறு கூறினார். சக மாணவிகளும் வருகிறார்களோ... என்று நினைத்து நானும் கல்லூரிக்குச் சென்றேன்.

சென்னை: `பிரியாணி... 4 மாத கர்ப்பம்... மருத்துவமனையில் மாணவி'- கேன்டீன் ஊழியர் சிக்கிய பின்னணி

கல்லூரிக்கு அருகில் சென்றபோது, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் யாரோ என்னுடைய முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்தனர். மயங்கிய நான் நீண்டநேரம் கழித்து கண்விழித்துப் பார்த்தபோது, ஓர் அறையில் நாற்காலியில் அமர வைக்கப்பட்டிருந்தேன். அருகில் என் கல்லூரியில் பணிபுரியும் பிரதாப் என்பவர் இருந்தார். அவர்தான் என்னை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தார். `இது பற்றி வெளியில் யாரிடமும் சொல்லக் கூடாது’ என்று மிரட்டியதால், பெற்றோரிடமும் கூறவில்லை’’ என்று பாதிக்கப்பட்ட மாணவி எழுத்துபூர்வமாக பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர்களிடம் எழுதிக் கொடுத்திருக்கிறார்.

இந்தப் புகார் கடிதத்துடன் சேவை மையப் பணியாளர்கள் காட்பாடி அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்குச் சென்றனர். அங்கு இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் யாரும் இல்லை. அதனால், லத்தேரி காவல் நிலையத்துக்குச் செல்லுங்கள் என்று சக காவலர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

Representational Image
Representational Image

சேவை மையப் பணியாளர்களும் லத்தேரி காவல் நிலையம் சென்றனர். இரவு நேரம் வரை அவர்களைக் காத்திருக்கவைத்த காவல்துறையினர்,`சம்பவம் எங்கள் பகுதியில் நடக்கவில்லை. பள்ளிகொண்டா காவல் நிலையம் செல்லுங்கள்’ என்று அலட்சியமாகப் பேசி அனுப்பியிருக்கிறார்கள். சேவை மையப் பெண் பணியாளர்களும் இரவு நேரம் என்றும் பார்க்காமல் பள்ளிகொண்டா காவல்நிலையத்துக்கு விரைந்தனர். அங்கிருந்த காவல்துறையினரும் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு செல்லுமாறு கூறியிருக்கிறார்கள். `பாதிக்கப்பட்ட பெண்ணுக்காகப் புகார் கொடுக்க வந்த அரசு அலுவலர்களுக்கே இந்த நிலைமையா... எஸ்.பி அலுவலகத்தில் புகார் கொடுத்துக்கொள்கிறோம்’ என்று சேவை மைய பணியாளர்கள் காட்டமாகக் கூறிய பின்னரே புகார் மனுவை பள்ளிகொண்டா போலீஸார் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்ய முறையிடப்பட்டிருப்பதால், பாலியல் குற்றவாளியாகக் கருதப்படும் பாலிடெக்னிக் கல்லூரி ஊழியரான பிரதாப்பை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில்,`பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவியிடம் நான் தவறாக நடந்துகொள்ளவில்லை. அந்தச் சம்பவத்துக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. ஏழை மாணவி என்பதால் அவரது அக்காவுக்கும் நான்தான் கல்விக் கட்டணம் செலுத்தி படிக்கவைத்தேன். இந்த மாணவியின் படிப்புக்கும் நான்தான் உதவி செய்கிறேன். என்மீது பொய்ப் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது’ என்று புகாருக்குள்ளான பிரதாப் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்த வழக்கில் மாணவியின் தாய்மீதும் குற்றம்சாட்டப்படுகிறது. எப்படியிருந்தாலும், மாணவிக்கு நேர்ந்த இந்தக் கொடூரச் சம்பவத்துக்கு காரணமான பாலியல் குற்றவாளிகளும், சம்பவத்தை மறைக்கப் பார்த்த அத்தனை பேரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகிறார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு