Published:Updated:

கஞ்சா போதையில் பாதை மாறும் இளைஞர்கள்... பதைபதைக்க வைக்கும் வேலூர் கொலைகள்!

இரண்டு கொலைகளிலும் கைதுசெய்யப் பட்டிருக்கும் சிறுவர்கள், இளைஞர்கள்மீது ஏற்கெனவே வழக்குகள் இல்லை.

பிரீமியம் ஸ்டோரி

வேலூரில் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ள கொடூரக் கொலைகள், பொதுமக்களை அச்சமடையச் செய்திருக்கின்றன. இந்தச் சம்பவங்களைச் செய்தவர்கள் 17 முதல் 20 வயதுக்குள்ளான சிறுவர்கள், இளைஞர்கள் என்பதுதான் அதிர்ச்சிக்குக் காரணம். அத்துடன், இந்தக் கொலைகளின் பின்னணியில் இருப்பது, கஞ்சா போதை என்பது அதிர்ச்சியை இன்னும் அதிகமாக்குகிறது!

சம்பவம் ஒன்று...

வேலூர் தோட்டப்பாளையத்தைச் சேர்ந்த 20 வயதான பாலமுருகனை `அக்டோபர் 28-ம் தேதியிலிருந்து காணவில்லை’ என்று அவரின் தாய் பேபி போலீஸில் புகார் கொடுத்தார். பாலமுருகன் தந்தையை இழந்தவர். இவர், கடந்த 2019-ல் அதே ஏரியாவைச் சேர்ந்த சுகுமார் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்றாவது குற்றவாளி. ஜாமீனில் வெளிவந்த இவருக்குக் கொலையானவர் தரப்பிலிருந்து மிரட்டல்கள் வந்ததால், வேறு ஏரியாவுக்குக் குடியேறினார்கள். இருப்பினும், தினமும் தாயார் வேலைக்குச் சென்றதும், பழைய ஏரியாவுக்குச் சென்று நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா புகைத்துவந்திருக்கிறார். பழிக்குப் பழியாக ஏதேனும் நடந்திருக்கலாம் என்று சந்தேகப்பட்ட நிலையில், நண்பர்களே பாலமுருகனைக் கொலைசெய்தது நவம்பர் 10-ம் தேதி தெரியவந்தது. இது தொடர்பாக 19 வயது கரியன் என்ற ஜெகதீஸ்வரன், 18 வயது மதிவாணன், 17 வயது சிறுவன் ஒருவன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

கஞ்சா போதையில் பாதை மாறும் இளைஞர்கள்... பதைபதைக்க வைக்கும் வேலூர் கொலைகள்!

அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தில், ‘‘நாங்க நாலு பேரும் சேர்ந்து கிரீன் சர்க்கிள் பகுதியில இருக்கிற கால்வாய் புதர்லதான் கஞ்சா அடிப்போம். பசி எடுத்தா பக்கத்துல இருக்குற மதிவாணன் வீட்டுக்குப் போய் பாலமுருகன் சாப்பிடுவான். அப்ப மதிவாணன் தங்கச்சிகிட்ட தப்பா நடந்துக்கப் பார்த்தான். இதனால, ரெண்டு பேருக்கும் சண்டை. எவ்வளவோ சொல்லியும் பாலமுருகன் கேக்கலை. அதனால அவனைத் தீர்த்துக்கட்ட முடிவு செஞ்சோம். அன்னிக்கு நாலு பேரும் ஒண்ணா சேர்ந்து சரக்கடிச்சோம். அப்புறமா கஞ்சா அடிச்சோம். பாலமுருகன் முழு போதைக்குப் போனதும், சரமாரியா தாக்கினோம். செத்துட்டான்னு நினைச்சு அங்கேயே குழிதோண்டி, பாடியை உள்ளே தள்ளினோம். அப்ப, உடம்பு லேசா அசைஞ்சுச்சு. கடப்பாறையால ஒரே போடா போட்டு கதையை முடிச்சுப் புதைச்சுட்டோம்’’ என்று சிரித்துக்கொண்டே சொல்லியிருக்கிறார்கள்.

சம்பவம் இரண்டு...

காட்பாடி வண்டறந்தாங்கலைச் சேர்ந்த 20 வயது இளைஞர்கள் நேசகுமார், விஜய். இருவரையும் நவம்பர் 10-ம் தேதியிலிருந்து காணவில்லை. ஐந்து நாள்களுக்குப் பிறகே கஞ்சா போதையில் இருவரது கதையும் முடிக்கப்பட்டிருப்பது போலீஸாருக்குத் தெரியவந்தது. இது தொடர்பாக விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்த சாண்டில்யன், பாலா, சந்தோஷ், சரத் மற்றும் 17 சிறுவன் உட்பட ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் சம்பந்தப்பட்ட நவீன் என்பவனைத் தேடிவருகிறார்கள். பிடிபட்டபோதுகூட இவர்களில் மூவர் கஞ்சா போதையில் இருந்திருக்கிறார்கள்.

வண்டறந்தாங்கலைச் சேர்ந்த நேசகுமாருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த கௌதம் என்பவருடன் பகை. ஆள் கடத்தல் வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் கௌதம் கைது செய்யப்பட்ட நிலையில், ‘ஜெயில்லருந்து கௌதம் வெளியே வந்தா, அவனைத் தீர்த்துக்கட்டுவேன்’ என்று நேசகுமார் சவால் விடுத்திருக்கிறார். இது கௌதமின் நண்பரான பாலாவுக்குத் தெரியவரவே, ‘பேசித் தீர்த்துக்கொள்ளலாம்’ என்று கூறி நேசகுமாரை விருதம்பட்டு பாலாற்றங்கரைப் பகுதிக்கு அழைத்திருக்கிறார். நேசகுமாரும் தன் நண்பர் விஜய்யுடன் செல்ல... பாலா தன் நண்பர்கள் ஐவருடன் வந்திருக்கிறார். பிரச்னையைப் பேசித் தீர்ப்பதற்கு பதில், ஆளையே தீர்த்துக்கட்டியிருக்கிறார்கள்.

கொலையாளிகள் கொடுத்த வாக்குமூலத்தில், ‘‘எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து சரக்கடிச்சுக்கிட்டே பிரச்னையைப் பேசுனோம். அப்புறம் கஞ்சா அடிச்சோம். கிறுகிறுன்னு போதை ஏறுச்சு. ரெண்டு பேரையும் அரிவாள், கத்தியால வெட்டிக் கொன்னோம். அப்புறம் பெட்ரோல் ஊத்தி பாடிகளை எரிக்க முயற்சி பண்ணினோம். முழுசா எரியலை. அதனால, கல்லைக்கட்டி ஆத்துல வீசிட்டோம்’’ என்று சாதாரணமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

இந்தச் சம்பவங்கள் குறித்து வேலூர் சமூக ஆர்வலர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘வேலூரில் அதிகரித்துவரும் குற்றங்களுக்குக் கஞ்சா போதைதான் காரணம். மாநகரத்தில் ஓல்டு டவுன், சைதாப்பேட்டை, தோட்டப்பாளையம், கஸ்பா, விருதம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா பொட்டலங்கள் சாதாரணமாகக் கிடைக்கின்றன. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை கஞ்சா வாங்கிப் புகைக்கிறார்கள். அருகிலிருக்கும் ஆந்திர மாநிலத்திலிருந்துதான் கஞ்சா கடத்திவரப்படுகிறது.

கஞ்சாவுடன் போதை மாத்திரையையும் இளைஞர்கள் பயன்படுத்துகிறார்கள். குறிப்பிட்ட அந்த மாத்திரையைத் தூளாக்கி, தண்ணீரில் கலக்கி, சிரிஞ்சுகளில் நிரப்பி கை நரம்பில் ஊசி மூலம் ஏற்றிக்கொண்டால் தலைக்கு ‘கிர்ர்’றென்று போதை ஏறுமாம். வேலூரிலிருக்கும் பல மருந்துக் கடைகளிலும், மருத்துவரின் பிரிஸ்கிரிப்ஷன் இல்லாமலேயே அந்த மாத்திரை விற்பனைச் செய்யப்படுகிறது. கொலைசெய்யும் அளவுக்குச் சிறுவர்கள், இளைஞர்களின் மனநிலையைச் சீரழிக்கும் கஞ்சா, போதை மாத்திரை விற்பனையைத் தடுக்க காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்கிறார்கள்.

பாலமுருகன்,  நேசகுமார், விஜய்
பாலமுருகன், நேசகுமார், விஜய்

வேலூர் எஸ்.பி செல்வகுமாரிடம் இந்த விவகாரங்கள் தொடர்பாகக் கேட்டபோது, ‘‘இரண்டு கொலைகளிலும் கைதுசெய்யப் பட்டிருக்கும் சிறுவர்கள், இளைஞர்கள்மீது ஏற்கெனவே வழக்குகள் இல்லை. முன்விரோதம் காரணமாக அந்தச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இப்படி நடக்கப்போகிறது என்று முன்கூட்டியே காவல்துறையினருக்குத் தெரிய வாய்ப்பில்லை. என்றாலும், இனி கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்படும். கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை குறித்து உடனடியாக விசாரிக்கிறேன். பாதை மாறும் சிறுவர்கள், இளைஞர்களை நல்வழிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

வாக்குமூலங்களில் வெளிப்படும் இளைஞர்களின் மனநிலை அதிர்ச்சி தருவதாக இருக்கிறது. எங்கேயிருந்து இதற்கான சிகிச்சையைத் தொடங்குவது?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு