Published:Updated:

குலைநடுங்க வைக்கும் வேலூர் ரௌடிகள்!

குலைநடுங்க வைக்கும் வேலூர் ரௌடிகள்!
பிரீமியம் ஸ்டோரி
குலைநடுங்க வைக்கும் வேலூர் ரௌடிகள்!

குழந்தைகளைக் குறிவைக்கும் ஜானி... பணத்தைக் கறக்கும் காதல் மனைவி ஷாலினி... சிறையிலிருந்து மிரட்டும் வசூர் ராஜா...

குலைநடுங்க வைக்கும் வேலூர் ரௌடிகள்!

குழந்தைகளைக் குறிவைக்கும் ஜானி... பணத்தைக் கறக்கும் காதல் மனைவி ஷாலினி... சிறையிலிருந்து மிரட்டும் வசூர் ராஜா...

Published:Updated:
குலைநடுங்க வைக்கும் வேலூர் ரௌடிகள்!
பிரீமியம் ஸ்டோரி
குலைநடுங்க வைக்கும் வேலூர் ரௌடிகள்!
‘‘ ‘வேலூரில் கத்தி கலாசாரம் பெருகிவிட்டது. 18 வயதுக்கு உட்பட்ட சிறார் குற்றவாளி களும் அதிகரித்துள்ளனர்.

‘சில்லறை நோட்டுக்கும், பிரியாணிக்கும், குவார்ட்டருக்கும் ஆசைப்பட்டு ரௌடிகளின் புகைப்படங்களை பர்ஸில் வைத்துச் சுற்றும் இளைஞர்களைத் தெருவுக்குத் தெரு பார்க் கலாம். வேலூரை ஆட்டிப்படைக்கும் பிரபல ரௌடிகளான வசூர் ராஜா, காட்பாடி ஜானி ஆகியோரால் காவல்துறை யினரே கதிகலங்கி நிற்கிறார்கள். `குழந்தைகளைக் கொன்றுவிடுவோம்’ என்று மிரட்டுவது தொடங்கி பல வகைகளிலும் பணம் பறிக்கிறார்கள். வேலூர் மக்களைக் காப்பாற்றுங்கள்”- இப்படி ஒரு கடிதம் வரவே ஜூவி க்ரைம் டீமைக் களத்தில் இறக்கிவிட்டோம். ஒரு வாரமாக வேலூரை வட்டமடித்த நமது டீம் உறுப்பினர் களுக்குக் கிடைத்த தகவல்கள் அனைத்துமே அதிர்ச்சி ரகம். ‘சிங்கம்’, ‘அஞ்சாதே’ படங்களில் வரும் கடத்தல் தாதாக்களையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு பகீரிடச் செய்கின்றன வேலூர் ரெளடிகளின் அட்டகாசங்கள். நடுரோட்டில் ஓடவிட்டு வெட்டுவது, துப்பாக்கியைக் காட்டி மிரட்டுவது என ஊரையே நடுநடுங்கவைத்துக் கொண்டிருக்கின்றனர் ராஜாவும் ஜானியும்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

குலைநடுங்க வைக்கும் ஜானி!

காட்பாடி வன்றந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த 34 வயது ஜானி மீது ஆறு கொலை, எட்டு ஆள்கடத்தல் உட்பட 45-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. `புகார் பதியப்படாத குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை 100-ஐ கடந்திருக்கும்’ என்கிறது போலீஸ். ‘என்கவுன்ட்டர்’ லிஸ்ட்டிலுள்ள ஜானி, பல ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தபடியே தன் அடியாட்கள் மூலம் காரியங்களைக் கச்சிதமாக முடிக்கிறாராம். ‘வீடியோ போன்கால் மூலம் தொழிலதிபர்களுக்கு உயிர் பயத்தை ஏற்படுத்தி, லட்சக்கணக்கில் பணத்தைக் கறந்துவிடுகிறார்’ என்று விலாவரியாகச் சுட்டிக்காட்டும் காவல்துறையினருக்கு ஜானி பதுங்கியிருக்கும் இடம் மட்டும் தெரிய வில்லையாம்.

குழந்தைகளைக் குறிவைக்கும் ஜானி...
குழந்தைகளைக் குறிவைக்கும் ஜானி...

காவல்துறையில் சில கறுப்பு ஆடுகளுக்கு மத்தியில் நேர்மையான அதிகாரிகளும் இருக்கிறார்கள். அவர்களிடம் பேசினோம். ‘‘ரௌடிகளை வளர்த்துவிடுவதே போலீஸ்தான். ஜானி மிகவும் கொடூரமானவன். அவனால் பாதிக்கப்பட்ட தொழிலதிபர்கள் ஏராளம். பள்ளியிலிருந்து வீடு திரும்பும் குழந்தைகளைப் பின்தொடர்ந்து அவர்களின் பெற்றோரை செல்போனில் மிரட்டுகிறார்கள் ஜானியின் கூட்டாளிகள். கையில்வைத்திருக்கும் ஆயுதங்களால் ‘தாக்கட்டுமா... குத்தட்டுமா’ என்று குலைநடுங்க வைக்கிறார்கள். உடனே, அவர்கள் சொல்லும் வங்கிக் கணக்குக்கு அந்தக் குழந்தையின் பெற்றோரும் பதறியடித்துக்கொண்டு பணத்தை டெபாசிட் செய்துவிடுகிறார்கள். கேட்ட பணத்தில் சிறு தொகை குறைந்தாலும், சம்பந்தப்பட்டவரின் வாகனத்தை எரித்துச் சேதப்படுத்திவிடுகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தலைமறைவாக உள்ள ஜானியின் அட்டகாசம் நாளுக்குநாள் எல்லை மீறுவதால், தொழிலதிபர்களும் வணிகர்களும் அச்சத்தில் உறைந்துள்ளனர். ஜானிக்கு அவரின் காதல் மனைவி ஷாலினி மூலமாகத்தான் அனைத்து உதவிகளும் கிடைக் கின்றன. தொழிலதிபர்களிடம் பறிக்கப்படும் பணமும் ஷாலினியிடம்தான் கொடுக்கப்படுகிறது. ஷாலினியின் நடமாட்டத்தை ரகசியமாகக் கண்காணித்துவந்த காட்பாடி போலீஸார், மார்ச் 23-ம் தேதி அவரைக் கைதுசெய்து வேலூர் பெண்கள் தனிச் சிறையில் அடைத்தனர். அப்போது, தன் 9 வயது மகளை தன் அப்பாவின் அரவணைப்பில் விட்டிருந்தார் ஷாலினி.

சிறையிலிருந்து மிரட்டும் 
வசூர் ராஜா...
சிறையிலிருந்து மிரட்டும் வசூர் ராஜா...

ஜானியின் வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி, மே 29-ம் தேதி ஷாலினிக்கு ஜாமீன் பெற்றனர். ‘காட்பாடி காவல்நிலையத்தில் தினமும் நேரில் ஆஜராகி கையெழுத்துப் போட வேண்டும்’ என்ற நிபந்தனையுடன் சிறையிலிருந்து வெளியில் வந்த ஷாலினி, கணவன் ஜானி இருக்கும் இடத்துக்கே சென்று தலைமறைவாகிவிட்டார். இந்த நிலையில் ஷாலினியின் தந்தை, ‘இனியும் என்னால் பேத்தியைப் பார்த்துக்கொள்ள முடியாது. நானே அன்றாடங்காய்ச்சி’ என்று கூறியதால், சிறுமியை மீட்ட வேலூர் தெற்கு போலீஸார் அரியூரிலுள்ள பெண்கள் பிற்காப்பு இல்லத்தில் தங்கவைத்துள்ளனர். தலைமறைவான ஷாலினியையும் போலீஸார் தேடிவருகிறார்கள். ஜானி பிடிபடாமல் பாதுகாப்பாக இருப்பதற்கு, சில வழக்கறிஞர்கள்தான் காரணம்’’ என்கிறார்கள்.

இதனிடையே, ஜானியைப் பற்றி நாம் விசாரிப்பதைத் தெரிந்துகொண்ட அவரின் மனைவி ஷாலினி நம்மை போன் மூலம் தொடர்புகொண்டு பேசினார். ‘‘என் கணவர் ஜானியுடன் நான் இல்லை. ஜாமீனில் வெளிவந்த என்மீது மீண்டும் பொய் வழக்குப் பதிந்து சிறையில் அடைக்கப் பார்த்தனர். போலீஸின் தொந்தரவால்தான் தலைமறைவாகி விட்டேன். என் கணவரைப் பார்த்தே பல ஆண்டுகள் ஆகின்றன. முன்ஜாமீனுக்காக முயன்று வருகிறேன். ஜாமீன் கிடைத்தவுடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்து என்மீதான பொய்ப் புகார்களை உடைத்தெறிவேன்’’ என்றார் கலங்கிய குரலுடன்.

சிறையிலிருந்து மிரட்டும் வசூர் ராஜா!

கடந்த ஆண்டு, ஆகஸ்ட் 29-ம் தேதி மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் சொகுசுக் காரில் சென்ற ரௌடி கும்பல் 50 ரூபாய் கட்டணம் செலுத்த மறுத்து, துப்பாக்கிச்சூடு நடத்தியது. தமிழக ஊடகங்களில் அன்றைய பிரேக்கிங் செய்தியான அந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆறு ரௌடிகளில் மாடர்ன் கெட்டப்பில் இருந்தவர்தான் வசூர் ராஜா. வேலூர் சத்துவாச்சாரியை அடுத்த புதுவசூரைச் சேர்ந்த ராஜாமீது கொலை, கொள்ளை உட்பட 35-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. ஏழு முறை குண்டர் சட்டமும் பாய்ந்திருக்கிறது.

சிறையிலிருந்து மிரட்டும் 
வசூர் ராஜா...
சிறையிலிருந்து மிரட்டும் வசூர் ராஜா...

மதுரையில் சிக்கிய பின்னரே தமிழகம் முழுவதுமுள்ள ரௌடிகளுடன் வசூர் ராஜா வுக்குத் தொடர்பு இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. வசூர் ராஜாவுக்குக் காக்கிகளின் சப்போர்ட்டும், கரை வேட்டிகளின் அரவணைப்பும் இருப்பதால், பெயருக்கு ஏற்ப வேலூரில் ராஜாவாகவே வலம்வந்தார். மதுரைச் சிறையிலிருந்து ஜாமீனில் வந்த ராஜாவை கர்நாடகா போலீஸார் பல்வேறு குற்றங்கள் தொடர்பாக கைதுசெய்து பெங்களூரு சிறையில் அடைத்துள்ளனர். சிறையில் இருந்தபடியே செல்போன் மூலம் வேலூரிலுள்ள தொழிலதிபர்களையும் வணிகர்களையும் ராஜா மிரட்டி, பணம் பறிப்பதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, வசூர் ராஜாவின் கூட்டாளிகள் இரண்டு பேரை சத்துவாச்சாரி போலீஸார் சமீபத்தில் கைதுசெய்தனர்.

கடும் முயற்சிகளுக்குப் பிறகு பணத்தைப் பறிகொடுத்த சிலரைத் தொடர்புகொண்டு பேசினோம். பெயர் வேண்டாம் என்ற நிபந்தனை யுடன் பேசியவர்கள், ‘‘வசூர் ராஜா இன்டர்நெட் போன் காலில் முதலில் பேசினார். அவரைப் பற்றி நாங்கள் ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்ததால் பயந்துவிட்டோம். ‘வசூர் ராஜா என்ற பெயரில் வேறு யாராவதுகூட மிரட்டலாம்’ என்று நினைத்த நேரத்தில் வீடியோ காலில் முகத்தைக் காட்டினார் ராஜா. ‘டேய், நான் பெங்களூரு ஜெயில்லதான் இருக்கேன். இன்னும் கொஞ்ச நாள்ல வெளியில வந்துடுவேன். நான் கேட்கிற பணத்தைக் கொடுத்துடுங்க. போலீஸுக்குப் போனாலும் என்னை எதுவும் செய்ய முடியாது’ என்று கூறினார்.

5,00,000 ரூபாயில் பேரத்தைத் தொடங்கி கடைசியில் 1,00,000 ரூபாய் நிர்ணயித்தார். பணத்தைத் தவணை முறையில் அவர் சொல்லும் வங்கிக் கணக்கிலும், அவரின் ஆட்களிடமும் கொடுத்தோம். மீசையே முளைக்காத இரண்டு மூன்று வாண்டுப் பையன்கள்தான் பணத்தை வந்து வாங்கிச் சென்றார்கள். ‘அண்ணன் அனுப்பி விட்டாரு... காசு ரெடியாகிடுச்சா? லேட் பண்ணா அண்ணன் குத்திப் போட்டுறச் சொன்னாரு’ என்று சகிக்க முடியாத அளவுக்குப் பேசுவார்கள்.

அவர்களை அடித்துத் துவைக்கலாம் என்று தோன்றும். ஆனால், தொழில் செய்யும் இடம். நாளைக்கு வேறு பிரச்னைகள் வந்துவிடக் கூடாது என்பதால் பணிந்து சென்றுவிடுகிறோம்’’ என்றனர் கவலை தோய்ந்த முகத்துடன். இதேரீதியில்தான் பணத்தைப் பறிகொடுத்த வேறு சிலரும் பேசினார்கள்.

இந்த நிலையில், ரௌடிகளின் கொட்டத்தை அடக்க ஸ்பெஷல் டீம் அமைத்திருக்கிறார் வேலூர் எஸ்.பி-யான பிரவேஷ்குமார். அந்த டீமிலுள்ள சில போலீஸ் அதிகாரிகளிடம் பேசினோம். ‘‘ரௌடி களைக் களையெடுக்கத் தொடங்கியிருக்கிறோம். பழைய குற்றவாளிகள் மற்றும் புதிய குற்றவாளிகளின் பட்டியலைத் தயார் செய்து, அவர்களைச் சிறையில் அடைத்து வருகிறோம். பெங்களூரு சிறையில் இருந்துகொண்டே வசூர் ராஜா தொழிலதிபர்களை மிரட்டி, பணம் பறிப்பது உண்மைதான். அதேபோல், தலைமறைவாக உள்ள ஜானியை வேட்டையாடவும் தீவிரம் காட்டி வருகிறோம். தேடுதல் வேட்டையில் துப்பாக்கிச் சூடும் நடக்கலாம். இனி `ரௌடி’ என்று வேலூர் மாவட்டத்தில் எவனும் காலரைத் தூக்கிவிட்டு சுற்ற முடியாது’’ என்றனர் உறுதியான குரலில்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism