Election bannerElection banner
Published:Updated:

`பெண்களிடம் செல் நம்பர் வாங்குவார்; ஆபாச படம் அனுப்புவார்!' - வேலூர் டிராஃபிக் எஸ்.ஐ-க்குத் தண்டனை

சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம்
சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம்

பெண்களிடம் செல் நம்பர் வாங்கி ஆபாச வீடியோக்களை அனுப்பிய போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை, அ.ம.மு.க பிரமுகர் பொது இடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம், சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வேலூர் மாநகரில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிவந்தவர் ராஜமாணிக்கம். போக்குவரத்தைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ராஜமாணிக்கத்தை நடுரோட்டில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேலூர் கிழக்கு மாவட்டப் பொருளாளர் அப்பு பால் பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள் திடீரென சுற்றி வளைத்து பொதுமக்கள் முன்னிலையில் மிரட்டுவதைப்போன்ற வீடியோ காட்சிகள் வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அதில், எஸ்.ஐ ராஜமாணிக்கத்தைப் பார்த்து அ.ம.மு.க பிரமுகர் அப்பு பால் பாலாஜி, ``லேடீஸ்கிட்ட செல் நம்பர் ஏன் கேட்கிறீங்க? ஸ்டேஷனுக்கு வந்து போற பெண்கள்கிட்ட நம்பர் கேட்கிறீங்க. துரத்திகிட்டு பின்னாடியே போய் நம்பர் கொடுன்னு தொந்தரவு பண்றீங்க. நடுராத்திரி 12.30 மணிக்கு அசிங்கமான மெசேஜ் அனுப்புறீங்க. 

போலீஸ் அதிகாரியை மிரட்டிய அ.ம.மு.க பிரமுகர்
போலீஸ் அதிகாரியை மிரட்டிய அ.ம.மு.க பிரமுகர்

என்கிட்ட எவிடென்ஸ் இருக்கு’’ என்று கூறுகிறார். அதற்கு, கைக்கட்டிக்கொண்டு `மன்னிச்சுடுங்க அண்ணே, தெரியாம அனுப்பிட்டேன்னு’ அந்த எஸ்.ஐ கெஞ்சுகிறார். `மன்னிப்பு கேட்டா எல்லாம் சரியாகிடுமா’ என்று அப்பு பால் பாலாஜி கேட்பதோடு அந்த வீடியோ முடிகிறது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தையடுத்து, உடனடியாக எஸ்.ஐ ராஜமாணிக்கம் ஆயுதப் படை பிரிவுக்கு மாற்றப்பட்டார். போக்குவரத்து பிரிவுக்கு வருவதற்கு முன்னதாக ராஜமாணிக்கம் ஆயுதப் படையில்தான் இருந்தார். சம்பவம் குறித்து அ.ம.மு.க பிரமுகர் அப்பு பால் பாலாஜியிடம் கேட்டோம். ``எஸ்.ஐ ராஜமாணிக்கம் டூ வீலரில் வரும் பெண்களை சும்மாவே காவல் நிலையம் அழைத்துச் செல்கிறார். அவர்களைத் தொந்தரவு செய்து செல் நம்பர் கேட்கிறார். 

என் சொந்தக்கார பெண்ணுக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அந்தப் பெண் ஒரு மாதத்துக்கு முன்பு தம்பியுடன் டூ வீலரில் சென்றார். அந்த வண்டியை மடக்கிய எஸ்.ஐ ராஜமாணிக்கம் சைலன்சர் டிசைனாக இருப்பதாகக் கூறி வேண்டுமென்றே வழக்கு பதிவு செய்ய காவல் நிலையம் அழைத்துச் சென்றார். அந்தப் பெண் எனக்குப் போன் செய்தார். எஸ்.ஐ-யிடம் கொடுக்குமாறு கூறினேன். `நான் ரொம்ப ஸ்டிரிக்ட்டு’ என்று கூறி எஸ்.ஐ போனை வாங்கவில்லை. பிறகு, 500 ரூபாய் ஃபைன் போட்டு அனுப்பினார்.

அதைத்தொடர்ந்து, இரண்டு முறை என் உறவினர் பெண்ணை எஸ்.ஐ ராஜமாணிக்கம் பைக்கில் துரத்திச் சென்று செல் நெம்பர் கேட்டு தொந்தரவு செய்தார். இதுபற்றியும் அந்தப் பெண் என்னிடம் சொன்னார். `நம்பர் கொடும்மா... என்னதான் செய்கிறார். நான் பார்த்துக்கிறேன்’ என்றேன். செல் நம்பரை கொடுத்த அடுத்த நாளே ஆபாசமான வீடியோக்களையும் போட்டோக்களையும் வாட்ஸ் அப்பில் அனுப்புகிறார் எஸ்.ஐ ராஜமாணிக்கம். 

அப்பு பால் பாலாஜி
அப்பு பால் பாலாஜி

அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் என்னிடம் கூறினார். வேறொரு நபர் மூலம் எஸ்.ஐ-யை எச்சரித்தேன். திருந்தாத அவர் நக்கலாகப் பேசினார். நேரில் சென்று அவர் அனுப்பியிருந்த ஆபாச வீடியோவைக் காண்பித்து கேட்டதற்கு, அதிகார தோரணையில் திமிராகப் பேசினார். அதனால்தான் நான் வாக்குவாதம் செய்தேன்.

வீடியோ பார்த்த பலர், `நாங்களும் அந்த சப்-இன்ஸ்பெக்டரால் பாதிக்கப்பட்டுள்ளோம்’ என்று குமுறுகிறார்கள். இது சம்பந்தமாக, எஸ்.பி அலுவலகத்திலிருந்து தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் என்னிடம் விளக்கம் கேட்டார். `எஸ்.ஐ செய்தது தவறு. அதனால்தான் நான் கேட்டேன். என்மேல என்ன நடவடிக்கை எடுத்தாலும் பார்த்துக்கொள்கிறேன்’ என்று கூறிவிட்டேன்’’ என்றார். 

எஸ்.ஐ ராஜமாணிக்கத்திடம் பேசினோம். ``டெங்கு விழிப்புணர்வு செய்வதை போன்ற வீடியோவை என் நண்பர்கள் எனக்கு அனுப்பினர். அது, ஆபாசமாக இருந்தது. நான், அந்த வீடியோவை வேறு நண்பருக்கு அனுப்பினேன். தவறுதலாக அந்தப் பெண்ணுக்கு போய்விட்டது. எனக்கு 50 வயதாகிறது. இரண்டரை வயதில் பேரன் இருக்கிறான். தவறான நோக்கத்தில் அந்த மெசேஜை அனுப்பவில்லை. அதற்காக மன்னிப்பும் கேட்டேன். எனினும், பொது இடத்தில் அசிங்கப்படுத்திவிட்டார் அப்பு பால் பாலாஜி.

பணியில் இருந்த என்னை மிரட்டி கொன்னுடுவேன் என்று பொதுமக்கள் முன்னிலையில் மிரட்டினார். இதுபற்றி உயரதிகாரிகள் என்னை அழைத்து விளக்கம் கேட்டனர். என் மீது தவறில்லை’’ என்றுகூறி கைப்பட எழுதிக் கொடுத்திருக்கிறேன். வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்புவார்கள் என்று எனக்கு அப்போது தெரியாது. என்னால் வெளியில் தலைகாட்ட முடியவில்லை. அசிங்கமாக இருக்கிறது’’ என்றார். 

போலீஸ் அதிகாரியிடம் அ.ம.மு.க பிரமுகர் வாக்குவாதம்
போலீஸ் அதிகாரியிடம் அ.ம.மு.க பிரமுகர் வாக்குவாதம்

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய காவல்துறை உயரதிகாரிகள், ‘‘எஸ்.ஐ ராஜமாணிக்கத்திடம் விசாரணை நடத்தப்படும். பாலியல் புகார் உண்மையாக இருக்கும் பட்சத்தில் துறை ரீதியாகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து பிரிவில் அவர் தொடர்ந்து பணியாற்றினால், ராஜமாணிக்கத்தைப் பார்க்கும் மக்கள் கோபமடைவார்கள் என்பதால், ஆயுத படைக்கு மாற்றியிருக்கிறோம். அதேபோல், பொது இடத்தில் கொலை செய்துவிடுவதாக அப்பு பால் பாலாஜி மிரட்டியதைத் தவிர்த்திருக்கலாம்.

ஆபாச மெசேஜ் வந்ததாகக் கூறும் அவரின் உறவினர் பெண்ணிடமும் விசாரணை நடத்திவருகிறோம். அப்பு பால் பாலாஜி மீதும் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்று கூறினர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு