Published:Updated:

``நீங்கல்லாம் கோயிலுக்குள்ள வரலாமா?'' - வெளியேற்றிய மாற்றுச் சமூகத்தினர்... விசாரணையில் ஆட்சியர்!

கோயிலுக்குள் மறுக்கப்பட்ட அனுமதி

கோயில் உள்ளே சென்ற பட்டியல் சமூக மக்கள் வெளியேற்றப்பட்டதால், அவர்கள் சாலையிலேயே அமர்ந்து குழந்தைகளுக்குல் காதணிவிழா நடத்தியுள்ள சம்பவம் திண்டிவனம் வட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

``நீங்கல்லாம் கோயிலுக்குள்ள வரலாமா?'' - வெளியேற்றிய மாற்றுச் சமூகத்தினர்... விசாரணையில் ஆட்சியர்!

கோயில் உள்ளே சென்ற பட்டியல் சமூக மக்கள் வெளியேற்றப்பட்டதால், அவர்கள் சாலையிலேயே அமர்ந்து குழந்தைகளுக்குல் காதணிவிழா நடத்தியுள்ள சம்பவம் திண்டிவனம் வட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
கோயிலுக்குள் மறுக்கப்பட்ட அனுமதி

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ளது ரெட்டணை. கிராமமாக இருந்தாலும் சிறு நகரத்துக்கு இணையான வசதிகளைக்கொண்ட பகுதி இது. இங்குள்ள தொண்டி ஆற்றின் கரையோரமாக பிரசித்திபெற்ற ஸ்ரீ வெண்ணியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. கடந்த 11-ம் தேதி இந்தக் கோயிலுக்கு, அதே ஊரைச் சேர்ந்த பட்டியல் சமூக மக்கள் சிலர் குடும்பமாக மொட்டையடித்து, காணிக்கை செலுத்துவதற்காக சென்றிருக்கின்றனர்.

அப்போது, அவர்கள் கோயில் உள்ளே சென்று பொங்கல் வைத்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த சிலர், அவர்களை அங்கிருந்து கட்டாயமாக வெளியேற்றியதாகக் கூறப்படுகிறது.

வாக்குவாதம்
வாக்குவாதம்

அதையடுத்து, அந்தக் குடும்பத்தினர் தங்கள் குழந்தைகளுக்கு கோயிலுக்கு வெளியில் சாலையில் அமர்ந்தபடி மொட்டையடித்து காதணிவிழா நடத்தினர். பட்டியலின மக்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதையடுத்து, சம உரிமை கேட்டு அந்தப் பகுதியைச் சேர்ந்த பட்டியல் சமூக மக்கள் சிலர், நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து மனு அளித்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தச் சம்பவம் தொடர்பாக மனு அளித்தவர்களிடம் பேசினோம். ``நாங்கள் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மக்கள், கூலி வேலைதான் பிரதான தொழில். எங்கள் ஊரில் நாங்கள் 350 குடும்பங்கள் இருக்கிறோம் என்றால், மாற்றுச் சமூகத்தினர் சுமார் 1,500 குடும்பங்கள் வரை வசிக்கிறார்கள். எங்கள் ஊரில் மாற்றுச் சமூகத்தினர்தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். அவர்கள் வசிக்கும் பகுதியில் ஊருக்குப் பொதுவான வெண்ணியம்மன் கோயில் இருக்கிறது. அந்தக் கோயிலில், கடந்த வெள்ளிக்கிழமை எங்கள் பகுதியில் உள்ள ஒரு குடும்பத்தினர், பொங்கல்வைத்து குழந்தைகளுக்கு மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்காகச் சென்றுள்ளனர்.

மொட்டை அடித்தல்
மொட்டை அடித்தல்

அப்போது அங்கு வந்த வெளியூர்க்காரர் ஒருவர், `ஏன் கோயிலுக்கு வெளியில் பொங்கல் வைக்கிறீங்க. உள்ளே வந்து சாமி கும்பிடுங்க' என்று கூறியிருக்கிறார். அதன்படி, இவர்களும் உள்ளே சென்று பொங்கல் வைத்துள்ளனர். அப்போது அங்கு வந்த 20 - 30 மாற்றுச் சமூகத்தினர் ஒன்றாகச் சேர்ந்து, `நீங்க எப்படி உள்ளே வந்து பொங்கல் வைக்கலாம். வெளியே போங்க' என பயங்கரமாகத் திட்டித் துரத்தியிருக்கிறார்கள். அதனால், அந்த மக்களும் கோயிலுக்கு முன்பு நடு சாலையில் உட்கார்ந்து குழந்தைகளுக்கு மொட்டையடித்து, காது குத்தினார்கள். உடனே போலீஸ்காரர்கள் வந்து, `இங்க ஏதும் பிரச்னை பண்ணாதீங்க. அதிகாரிங்ககிட்ட மனு கொடுங்க' என்று கூறியிருக்கிறார்கள். எங்கள் சமூகத்தை மட்டும் சேர்க்காமல், எங்கள் ஊரில் வசிக்கும் பிற சமூகத்தினர் ஒன்றாகச் சேர்ந்து அந்தக் கோயிலில் திருவிழா நடத்துவார்கள். அதே கோயிலில், எங்கள் பகுதி மக்களும் வருடா வருடம் ஆடி மாதம் திருவிழா நடத்துவோம். அப்போதுகூட எங்களை கோயில் உள்ளே அனுமதிக்க மாட்டார்கள்.

வெளியிலிருந்தபடியேதான் பொங்கல் வைத்துவிட்டு சாமி கும்பிட்டுட்டு வருவோம். இது இன்று நேற்றல்ல... காலம் காலமாக நடந்துகொண்டிருக்கிறது. எங்கள் மக்களை மட்டும் சாமி கும்பிட உள்ளே விட மாட்டார்கள். இந்த நிலையில்தான், வெள்ளிக்கிழமை அன்று எங்கள் மக்கள் அவமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்னும் எவ்வளவு காலம்தான் இப்படியே இருப்பது என்று கலெக்டரிடம், `எல்லோருக்கும் சம உரிமை வழங்க வேண்டி' மனு அளித்திருக்கிறோம். கோயில் உள்ளே அனுமதிக்காதது மட்டுமின்றி, எங்கள் பகுதியில் உள்ள எந்தத் திருமண மண்டபத்திலும் எங்கள் பகுதி மக்கள் குடும்பவிழா நடத்துவதற்கு அனுமதி இல்லை. சாதியைக் காரணம் காட்டி அவமதிக்குறாங்க" என்றனர் ஆதங்கத்துடன்.

பட்டியல் சமூக மக்கள்
பட்டியல் சமூக மக்கள்

இது தொடர்பாக, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகனைத் தொடர்புகொண்டு பேசினோம். ``அந்த மக்கள் புகார் மனு அளித்ததைத் தொடர்ந்து, உண்மை நிலை குறித்து ஆய்வு செய்து பதில் அளிக்கும்படி துணை ஆட்சியருக்கு அனுப்பி வைத்துள்ளேன். அவர் விசாரணை செய்து பதில் அளித்ததும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார் சுருக்கமாக.