Published:Updated:

`கொலையில் முடிந்த தவறான நட்பு!’ - விழுப்புரம் ரவுடிக்கு நேர்ந்த சோகம்

கொலை செய்யப்பட்ட காஜா
கொலை செய்யப்பட்ட காஜா

மது போதையில் ரவுடிகளுக்குள் நடைபெற்ற மோதலில், ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விழுப்புரத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி லாலி கார்த்திக்(36). கணபதி நகரில் இவர் குடியிருக்கும் வீட்டிலிருந்து நேற்று மதியம் துர்நாற்றம் வீசியதால், வீட்டின் உரிமையாளர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். அதையடுத்து அங்குசென்ற காவல்துறையினர் பூட்டப்பட்டிருந்த வீட்டின் முன்பக்கக் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர்.

சம்பவ இடத்தில் விழுப்புரம் எஸ்.பி ஜெயக்குமார்
சம்பவ இடத்தில் விழுப்புரம் எஸ்.பி ஜெயக்குமார்

அங்கே, லாலி கார்த்திக்கின் நண்பரான மற்றொரு ரவுடி காஜா என்பவர் கத்தியால் கொடூரமாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடப்பதுகண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, சடலத்தைக் கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.

காவல்துறையினர் முதல் கட்ட விசாரணை நடத்தியிருக்கியிருக்கிறார்கள். இதுகுறித்து காவல்துறை வட்டாரங்களில் விசாரித்தோம்,``ரவுடி லாலி கார்த்திக் மீது 2 கொலை வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சில மாதங்களுக்கு முன்பு இவருக்கும், கவிதா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்திருக்கிறது. அதையடுத்து கவிதா கர்ப்பமடைந்ததால், பையூரில் உள்ள தன் தாய் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.

சம்பவ இடத்தில் காவல்துறை விசாரணை
சம்பவ இடத்தில் காவல்துறை விசாரணை

இந்நிலையில், நேற்று முன்தினம் தனது நண்பர்களான பூந்தோட்டம் மேல்வன்னியர் தெருவைச் சேர்ந்த ராஜா (எ) காஜா மற்றும் `பொருள்’ வினோத் இருவரையும் தனது வீட்டுக்கு அழைத்து, அவர்களுடன் மது அருந்தியிருக்கிறார் லாலி கார்த்திக்.

கொலை செய்யப்பட்ட காஜா, தன் முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சாலாமேட்டைச் சேர்ந்த வேறொரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டு அங்கேயே வசித்திருக்கிறார். காஜாவின் இரண்டாவது மனைவிக்கு இரு தினங்களுக்கு முன்பு குழந்தை பிறந்திருக்கிறது. அதையடுத்து லாலி கார்த்திக், `பொருள்’ வினோத் ஆகிய இருவரும் காஜாவின் வீட்டுக்குச் சென்று குழந்தையைப் பார்த்துவிட்டு வந்திருக்கின்றனர்.

கொலை செய்யப்பட்ட ராஜா (எ) காஜா
கொலை செய்யப்பட்ட ராஜா (எ) காஜா

குழந்தை பிறந்ததற்காக மது விருந்து வைக்க நினைத்த காஜா, லாலி கார்த்திக் வீட்டில் யாரும் இல்லாததால் அந்த இடத்தைத் தேர்வு செய்திருக்கிறார். அதற்கு அனைவரும் ஒப்புக்கொண்ட நிலையில், அன்று இரவு மூவரும் மது அருந்தியிருக்கின்றனர். அப்போது மூவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில்தான் காஜாவை மற்ற இருவரும் சரமாரியாகக் கத்தியால் வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றனர். ஆனால், தப்பிச் சென்ற இருவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்’’ என்றனர்.

இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமாரிடம் பேசினோம். ``ரவுடி லாலி கார்த்திக், ஒரு வருடததுக்கு முன்பு ஒரு பெண்ணைத் திருமணம் செய்திருக்கிறார். லாலி கார்த்திக்கை சந்திக்கச் செல்லும்போது அவரின் மனைவிக்கும், காஜாவுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில் இருவரும் நெருங்கிப் பழக ஆரம்பித்த நிலையில் செல்போனிலும் பேச ஆரம்பித்திருக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட ரவுடி லாலி கார்த்திக்
கைது செய்யப்பட்ட ரவுடி லாலி கார்த்திக்

இது, லாலி கார்த்திக்கிற்கு தெரியவந்ததால் இருவரும் பேசும் ஆடியோக்களை தன் மனைவியின் செல்போனிலிருந்து எடுத்திருக்கிறார். அதேபோல, காஜாவின் மனைவிக்கும் வினோத்துக்கும் இடையே பழக்கம் இருந்திருக்கிறது.

இந்த விவகாரத்தில் காஜாவைத் தீர்த்துக்கட்ட வினோத்தும், வினோத்தைத் தீர்த்துக்கட்ட காஜாவும் திட்டமிட்டிருக்கிறார்கள். இந்தத் திட்டம் வினோத்துக்கு தெரியவந்ததும் முந்திக்கொண்டு காஜாவைக் கொலை செய்ய லாலி கார்த்திக்குடன் கைகோத்திருக்கிறார். இந்நிலையில்தான், காஜாவின் குழந்தையை வினோத் மற்றும் லாலி கார்த்தி ஆகியோர் சென்று பார்த்துவிட்டு வந்திருக்கிறார்கள்.

கைது செய்யப்பட்ட ’பொருள்’ வினோத்
கைது செய்யப்பட்ட ’பொருள்’ வினோத்

அன்று இரவு நடந்த மது விருந்தில் காஜாவிடம், `உன் குழந்தை வினோத் முகச்சாயலுடன் இருக்கிறதே?’ என்று பேசி லாலி கார்த்திக் அவரைச் சீண்டியிருக்கிறார். அதில் கோபமடைந்த காஜா, அவர்களிடம் தகராறு செய்திருக்கிறார். ஏற்கெனவே காஜாவைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்த லாலி கார்த்திக் மற்றும் வினோத், இருவரும் சேர்ந்து அவரைக் கொலை செய்திருக்கின்றனர். அதேபோல குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த ஆயுள் தண்டனைக் கைதி ஒருவரின் மனைவியை 2 குழந்தைகளுடன் அழைத்துவந்து குடித்தனம் நடத்தி வந்தார் காஜா. அவருக்குத்தான் தற்போது 3-வது குழந்தை பிறந்திருக்கிறது” என்றார்.

பிரபல ரவுடிகளான லாலி கார்த்திக், பொருள் வினோத், கொலைசெய்யப்பட்ட காஜா ஆகிய மூன்று பேரும், கடந்த 2015-ம் ஆண்டு கஞ்சனூரைச் சேர்ந்த வீரன் என்ற இளைஞரைக் கல்லால் அடித்துக் கொலை செய்தனர். அந்த வழக்கில் சிறை சென்ற மூவரும் சமீபத்தில்தான் விடுதலையானார்கள்.

அடுத்த கட்டுரைக்கு