Published:Updated:

கொய்யாப்பழத்துக்குள் நாட்டு வெடிகுண்டு! - வனத்துறையினரைப் பதறவைத்த வேட்டைக்காரர்கள்

வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காகக் கொய்யாப்பழம் மற்றும் பனம்பழங்களின் நடுவில் நாட்டு வெடிகுண்டுகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

கைதான இளைஞர்கள்
கைதான இளைஞர்கள் ( ஆர்.எம்.முத்துராஜ் )

ராஜபாளையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கொய்யா மற்றும் பனம்பழத்துக்குள் நாட்டு வெடிகுண்டுகளை வைத்து வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

வனவிலங்குகளை வேட்டையாடியவர்கள்
வனவிலங்குகளை வேட்டையாடியவர்கள்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மேற்குத் தொடர்ச்சி மலையான புல்பத்தி காட்டுப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக மர்ம நபர்கள் சிலர் நாட்டு வெடிகுண்டுகளுடன் சுற்றித் திரிவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் ராஜபாளையம் வனச்சரக அலுவலர் சுப்பிரமணியம், வனவர் குருசாமி, வனக்காப்பாளர்கள் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் அப்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

Vikatan

அப்போது ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்த கணேசன் (30), சிவராமகிருஷ்ணன் (21) ஆகியோர் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காகக் கொய்யாப்பழம் மற்றும் பனம்பழங்களின் நடுவில் நாட்டு வெடிகுண்டுகளை மறைத்து வைத்திருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும், அப்பகுதியில் சுற்றித்திரிந்த அவர்களிடம் இருந்து 2 அரிவாள்கள், 3 செல்போன்கள், ஒரு பைக், 5 நாட்டு வெடிகுண்டுகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கைதான வேட்டைக்காரர்கள்
கைதான வேட்டைக்காரர்கள்

மேலும் வனத்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் 2 பேரும் தொடர்ந்து வனவிலங்குகளை வேட்டையாடி வருவது தெரியவந்தது. மேலும், சுந்தரராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பலர் இதேபோல வன விலங்குகளைத் தொடர்ந்து வேட்டையாடி வருவதும் தெரியவந்தது. எனவே கணேசன், சிவராமகிருஷ்ணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த வனத்துறை அதிகாரிகள் இருவரையும் மதுரைச் சிறைக்குக் கொண்டு சென்றனர்.