விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே கேரளாவைச் சேர்ந்த கும்பல் போலி ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில்விட திட்டமிட்டிருப்பதாக மாவட்ட காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மனோகர் தலைமையிலான குழுவினர் அப்பகுதியில் கடந்த சில நாள்களாகத் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுவந்தனர்.

இந்தநிலையில், தாணிப்பாறை - சேதுநாராயணபுரம் விலக்கு பகுதியில் சந்தேகப்படும்படி காரில் வந்த நான்கு பேர், பணத்துக்குப் பணம் இரட்டிப்பாகத் தருவதாகக் கூறி கூமாப்பட்டியைச் சேர்ந்த பூமிராஜ், பாலமுருகன், குபேந்திரன், வினோத், ராஜா ஆகியோருடன் 'டீல்' பேசிக்கொண்டிருந்ததாகத் தெரிகிறது. இதில், பூமிராஜுக்கும், காரில் வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அந்தப் பகுதியில் ரோந்து வந்த வத்திராயிருப்பு காவல்துறையினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களைத் தடுத்து, பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதில் அவர்கள் சந்தேகப்படும்படி முன்னுக்குப் பின் முரணாக பதில் சொல்லவும் போலீஸார் சுதாரித்துக்கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்து வத்திராயிருப்பு காவல் நிலையத்துக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர், பிடிபட்டவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டார். அப்போது, காரில் வந்த கும்பல் கேரளாவைச் சேர்ந்த சஜித்குமார், கூடலூரைச் சேர்ந்த கனகசுந்தரம், திண்டுக்கல்லைச் சேர்ந்த மணி, கொடைக்கானலைச் சேர்ந்த செல்வம் என்பது தெரியவந்தது.

தொடர்ந்து சஜித்குமாருக்குச் சொந்தமான காரை சோதனை செய்ததில், சினிமா படப்பிடிப்புக்குப் பயன்படுத்தப்படும் 'சில்ரன்ஸ் பேங்க்' போலிப் பணம் ரூபாய் 67 லட்சத்து 85 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு ஒரிஜினல் பணம் ரூ.36 ஆயிரத்து 500 இருந்ததும் தெரியவந்தது. அவர்கள், எந்த மதிப்பிலான ஒரிஜினல் ரூபாய் நோட்டு ஒன்று கொடுத்தாலும், அதே மதிப்பில் இரட்டிப்பு மடங்கில் போலியான ரூபாய் நோட்டுகளை மாற்றி புழக்கத்தில்விடத் திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதைத் தொடர்ந்து, அவர்கள் கொண்டுவந்த போலிப் பணம் ரூ.67,85,000, ஒரிஜினல் பணம் ரூ.36,500 மற்றும் காரைப் பறிமுதல் செய்த போலீஸார், போலிப் பணத்தை புழக்கத்தில்விட முயன்றது தொடர்பாக ஒன்பது பேர் மீது வழக்கு பதிவுசெய்து, சஜித்குமார், கனகசுந்தரம், பூமிராஜ், குபேந்திரன், பாலமுருகன் ஆகியோரைக் கைதுசெய்தனர்.
மேலும் வழக்கில் தலைமறைவான செல்வம், மணி, வினோத், ராஜா ஆகியோரைப் பிடிக்க தனிப்படை அமைத்து போலீஸார் தேடிவருகின்றனர். வத்திராயிருப்பில் படப்பிடிப்புக்காகப் பயன்படுத்தப்படும் பணம் மற்றும் கார் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.