`இரண்டு வருடங்களில் 6,000 பாலியல் குற்றப் புகார்கள்!' - அதிரவைக்கும் ஊபர் அறிக்கை

அவற்றுள் 450 பாலியல் வன்புணர்வு புகார்களும் அடங்கும்!
அமெரிக்காவின் 2017-2018 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு அறிக்கையை அண்மையில் வெளியிட்டது ஊபர் கால் டாக்ஸி நிறுவனம். அதில் `இரண்டு ஆண்டுகளில் 6,000 பாலியல் குற்றப் புகார்கள் தங்கள் நிறுவனத்திடம் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவற்றுள் 450 வன்புணர்வு புகார்களும் அடங்கும்' எனக் குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையே `ஆயுதங்கள் கொண்டு தாக்கப்பட்டதாகவும் வாடிக்கையாளர்களிடமிருந்து 19 புகார்களும் வந்துள்ளன' என்று அந்த நிறுவனம் பதிவு செய்கிறது.
2017 ஆம் ஆண்டு தொடங்கியே ஊபர் தங்களது நிறுவனத்தின் பாதுகாப்பு அம்சங்களை மும்மடங்கு அதிகரித்துள்ளது. ஊபர் அப்ளிகேஷன்களில் அவசரப் பாதுகாப்புக்கான பட்டன்களையும் இணைத்துள்ளது. இருந்தும் இந்த நிறுவனம் பாதுகாப்பு தொடர்பாகப் பலதரப்பட்ட சர்ச்சைகளில் சிக்கிவருகிறது.
அமெரிக்காவை மையமாகக்கொண்டு இயங்கும் ஊபர் கால் டாக்ஸி நிறுவனம் நாளொன்றுக்கு நான்கு மில்லியன் ஊபர் பயணங்களைப் பதிவு செய்கிறது. இத்தனை பேர் பயணம் செய்யும் நிலையில், தங்களது நிறுவனத்தைக் குறித்து வாடிக்கையாளர்கள் அறிந்துகொள்ளவேண்டியது அவர்களுடைய உரிமை என்கிற அடிப்படையில் முதன்முறையாக இந்தப் பாதுகாப்பு அறிக்கையை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஊபர் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை மற்ற கால்டாக்ஸி நிறுவனங்களும் தங்களது பாதுகாப்பு அறிக்கையை வெளியிட வேண்டும் என்கிற அழுத்தத்தை உருவாக்கியுள்ளது.