Published:Updated:

``நீங்க, இனிமே இங்க இருக்கக் கூடாது..!" - நாடோடி மக்களை மிரட்டிய ஊர் மக்கள்... நடந்தது என்ன?!

நாடோடி சமூக மக்கள் - சின்னசெவலை

நாடோடி சமூக மக்கள் சிலருக்கு, அடையாள அட்டை, இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கும்; அவர்களுடைய குழந்தைகள் படிப்பதற்கும் ஊர்மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து, ஒன்றிணைந்து மிரட்டியதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

``நீங்க, இனிமே இங்க இருக்கக் கூடாது..!" - நாடோடி மக்களை மிரட்டிய ஊர் மக்கள்... நடந்தது என்ன?!

நாடோடி சமூக மக்கள் சிலருக்கு, அடையாள அட்டை, இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கும்; அவர்களுடைய குழந்தைகள் படிப்பதற்கும் ஊர்மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து, ஒன்றிணைந்து மிரட்டியதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
நாடோடி சமூக மக்கள் - சின்னசெவலை

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சின்னசெவலை கிராமத்தைச் சேர்ந்த நாடோடி மக்கள் சிலர், கடந்த 12-ம் தேதி திருவெண்ணைய்நல்லூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை முற்றிகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், "அந்த கிராமத்தில, எங்க ஜனங்க வாழுறதுக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறாங்க. நாங்கள் ஊர் ஊரா போய் யாசகம் செய்வதைப் போல, எங்க பிள்ளைங்களும் எதிர்காலத்தில கஷ்டப்படக்கூடாது. அவங்க நல்ல நிலைமைக்கு வரணும். இப்படி ஊர்க்காரங்க எங்களை துரத்தினா... எங்க பிள்ளைங்க எப்படி படிப்பாங்க!" என்று அந்த சமூக பெண் ஒருவர் பேசும் வீடியோவும், "எங்கள, பள்ளிக்கூடத்துல இருந்து துரத்துறாங்க. எங்களுக்கு ஒரு வீடு வேணும். நீங்க தான் சார் அதுக்கு ஒரு வழி பண்ணனும்" என பள்ளி சிறுமி ஒருவர் பேசும் வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

வீடியோவில் பேசிய பெண்மணி.
வீடியோவில் பேசிய பெண்மணி.

இதன் பின்னணி குறித்து அறிந்துக்கொள்ள, வி.சி.க-வைச் சேர்ந்த ஆதி.குப்பன் என்பவரிடம் பேசினோம். "இந்த நாடோடி மக்களுக்கு சொந்தமாக வீடு, வாசல் ஏதும் கிடையாது. இவங்க எல்லாம் இந்து-ஆதியன் சமூகத்தை சேர்ந்தவங்க. சின்னசெவலையில் இருக்கிற அரசு நடுநிலைப்பள்ளியின் அருகே சுமார் ஆறு, ஏழு வருஷமா இருக்காங்க. இவங்க எல்லோருமே, மரத்தடியில் துணிமணிகளை மூட்டை கட்டி வைச்சிட்டு, அங்கேயே சமைத்து சாப்பிட்டுகிட்டு இருப்பாங்க. ராத்திரி நேரம் ஆச்சுனா... ரோட்டோரத்தில படுத்துப்பாங்க. மழை, காத்து வந்துச்சுன்னா மட்டும் ஸ்கூல் வரண்டாவுல ஒண்டிப்பாங்க. அவங்களுக்கு நிலையா வருமானம் ஏதும் கிடையாது. ஊர் ஊரா நாடோடியாக சென்று, சிலநாள் தங்கி பூம் பூம் மாட்டை வைத்து பொழப்பு பாத்துப்பாங்க. மீண்டும் இதே ஊருக்கு வந்து எப்போதும் போல இருப்பாங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த ஊர்ல இவங்க மொத்தம் ஆறு குடும்பம் இருக்காங்க. அதுல, ரெண்டு குடும்பத்துக்காரங்க மட்டும் அடிக்கடி பொழப்புக்காக சுத்துப்பட்டு ஊருக்கு போவதும்... வருவதுமா இருப்பாங்க. சின்னசெவலை கிராமத்து பாதையில நான் கடை வைச்சிருக்கேன். ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒருநாள், இந்த மக்கள் அவ்வழியா வந்தாங்க. 'ஏங்க உங்க பசங்கல படிக்க வைக்கலியா'னு கேட்டேன். `எங்களுக்கு ஆதார், குடும்ப அட்டைகள் ஏதும் இல்லங்க. அதனால பிள்ளைங்கள படிக்க வைக்க முடியல'னு சொன்னாங்க. இவங்கள பத்திய செய்தி கலெக்டர் சார் கவனத்துக்கு போச்சு. அப்புறம், இந்த நாடோடி மக்களின் வாழ்க்கை சூழலை விசாரிக்க சொல்லி சிறப்பு தாசில்தார் ஜெயலட்சுமி அவர்களை நியமிச்சாரு கலெக்டர் சார். அவங்க நேரில் வந்து விசாரணை பண்ணும் போதே, `இவங்க இந்த இடத்துல இருக்கக்கூடாது'னு ஊர்காரங்க எதிர்ப்பு தெரிவிச்சிருக்காங்க.

ஆர்.ஐ அலுவலகத்தில் அம்மக்கள்
ஆர்.ஐ அலுவலகத்தில் அம்மக்கள்

அப்புறம், ஜெயலட்சுமி மேடம், சம்பந்தப்பட்ட வருவாய்துறை அதிகாரிகள் எல்லாம் ஆய்வு செஞ்சு, அந்த மக்களுக்கு ஆதார் அட்டைகள் வழங்கும் பணி நடந்தது. ஓ.ஏ.பி., வாங்க தகுதியானவர்களுக்கு அதை தருவதற்கான பணிகளும், வாழ்வாதாரம் மேம்படுவதற்கு சிறிய அளவிலான லோன் மற்றும் வீட்டுமனை பட்டா தருவதற்கு இடம் தேர்வு செய்யும் பணிகள் எல்லாம் சிறப்பா நடந்துட்டு வந்துச்சு. சுமார் 25 நாளுக்கு முன்னாடி, ஊர்காரங்க சிலர் இந்த மக்கள் இருக்கும் இடத்துக்கு வந்து... `இந்த ஊர் அட்ரஸை, யார் உங்கள ஆதார் கார்டுக்கு கொடுக்க சொன்னது. நீங்க இனிமே இங்க இருக்கக்கூடாது' அப்படினு கடுமையா பேசியிருக்காங்க. அப்புறம் ஆர்.டி.ஓ நேராக வந்து, பிரச்னை செய்த மக்கள்கிட்ட சமரசம் பேசினார். அப்போ, `எங்க ஊர்ல அவங்களுக்கு வீட்டுமனை தரக்கூடாது'னு சொல்லி எதிர்ப்பு தெரிவிச்சிருக்காங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கிடையில், இந்த மக்களுடைய பசங்க 8 பேரை, அதே ஊரில் உள்ள நடுநிலைப்பள்ளியில சேர்த்தோம். இந்த நிலையில்தான், 12-ம் தேதி அன்னைக்கு ஊர்காரங்க 30 பேர் சேர்ந்து, அந்த மக்கள் இருக்கிற இடத்துக்கு வந்து, `இனியும் நீங்க இங்க இருந்தாக்கா நடக்குறதே வேர... உங்க பசங்க படிக்கிற இடத்துல எங்க பசங்கள படிக்க வைக்க மாட்டோம். நீங்களே படிக்க வச்சிக்கோங்க. ஊர்ல தண்டோரா போட்டு எங்க பசங்கள நாங்க நிறுத்திப்போம்' அப்படினு மிரட்டிப் பேசி, இந்த மக்களை அங்கிருந்து கிளப்பி அனுப்பிட்டு தான் அங்கிருந்து ஊர்காரங்க வந்திருக்காங்க. இந்த மக்களும் என்ன பண்ணுறதுனு தெரியாம, பயந்துக்கிட்டு 9 கி.மீ தூரத்துல இருக்கிற ஆலங்குப்பம் காரிய கொட்டகைக்கு வந்துட்டாங்க. நானும் இந்த விஷயத்தை கேள்விப்பட்டு ஆலங்குப்பம் போனேன். கண்ணீருடன் எதிர்கொண்ட அந்த மக்களை, திருவெண்ணெய்நல்லூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துக்கு போக சொன்னேன். அவங்களும் அங்கு போனாங்க. உடனே, தாசில்தார், ஆர்.ஐ, போலீஸ் அதிகாரிங்க எல்லாம் பிரச்னை செய்த சின்னசெவலை ஊர்மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

ஆதி.குப்பன், பேருந்து நிலையத்தில் உறங்கிய நாடோடி மக்கள்
ஆதி.குப்பன், பேருந்து நிலையத்தில் உறங்கிய நாடோடி மக்கள்

என்ன பதில் வந்துச்சோ தெரியல, `இப்போதைக்கு வேரு எங்காவது இருங்கள். நான்கு நாள்கள் டைம் தாருங்கள், அதற்குள் ஊர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு சொல்கிறோம்'னு தாசில்தார் அந்த மக்கள் கிட்ட சொன்னாங்க. அந்த மக்களும் போலீஸில் புகார் கொடுக்க பயந்துக்கிட்டு, `சரிங்க சார், எங்களுக்கு சுமுகமா முடிச்சி கொடுங்க'னு சொல்லிட்டு வந்துட்டாங்க. அன்னைக்கு நைட் தூங்குறதுக்கு கூட இடம் இல்லாம திருவெண்ணெய்நல்லூர் பஸ் ஸ்டான்ல படுத்துக் கிடந்தாங்க. அவங்களுக்கு நல்ல முடிவு கிடைக்கனும்" என்றார் ஆதங்கமாக.

நாடோடியின மக்கள் தரப்பு குற்றச்சாட்டுகள் குறித்து, எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படும் ஊர்மக்கள் தரப்பில் பேசினோம். "நாங்க, அந்த மக்களோடைய பிள்ளைங்கள படிக்க கூடாதுனாலம் சொல்லவில்லை. அது தவறான தகவல். அந்த இடத்துல, ஒரு வயதான அம்மாவும் அவருடைய பையனும் தான் நீண்ட நாளாக இருந்தாங்க. இப்போ இருக்கும் மீதி பேரை அடையாளமே தெரியல, புதுசா இங்க வந்திருக்காங்க. அதனால, 'நீங்க இப்போ 20 பேருக்கு மேல இருக்கீங்க. தீடீர்னு எங்கிருந்து வந்தீங்க..! எங்கிருந்து வந்தீங்களோ அந்த ஊர்லியே போய் பட்டா, ஆதார் அட்டை எல்லாம் வாங்கிக்கோங்க. பள்ளிக்கூடத்துக்கு பக்கத்துல இப்படி கூட்டமா இருக்காதீங்க' அப்படினு தான் சொன்னோம். எங்க ஊர்ல இருக்கும் ஆதிதிராவிட சமூக மக்களில் சுமார் 250 குடும்பங்களுக்கு இன்னும் வீட்டுமனையே இல்லாம ஒரே இடத்துல கூட்டமா இருக்காங்க. அப்படி இருக்கும் போது, இந்த மக்களுக்கு எங்க ஊர்ல பட்டா தரக்கூடாதுனு அதிகாரிங்க விசாரணை பண்ணும் போது சொன்னோம். வேரேதும் இல்லை" என்றனர்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன்.

இது குறித்து திருவெண்ணெய்நல்லூர் வட்டாட்சியர் பாஸ்கர் தாஸிடம் பேசினோம். "அந்த பிரச்னையை பேசி சமரசம் செய்துள்ளோம். இப்போது, அந்த மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். இவர்களில், 3 குடும்பங்கள்தான் அந்த ஊரில் முன்பிலிருந்தே இருந்திருக்கிறார்கள். மீதி 3 குடும்பங்கள் அதன் பின்னர் வந்துள்ளனர். ஒரு சில குடும்பத்திற்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. 6 குடும்பத்தினருக்கும் பட்டா கொடுப்பதற்கு ஏற்பாடு செய்து கொண்டுள்ளோம். அதற்கு உரிய விசாரணையும் நடைபெற்றுக் கொண்டுள்ளது" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism