Published:Updated:

நள்ளிரவில் நடந்த கொலை... 18 நாள்கள் தலைமறைவு-ஒலிம்பிக் நாயகன் சுஷில் குமார் கைதானது ஏன்... எப்படி?!

சுஷில் குமார்

ஒலிம்பிக் நாயகன் டு கொலைக் குற்றவாளி: ஒரே இரவில் மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் வாழ்க்கை தலைகீழாக மாறியது எப்படி?

நள்ளிரவில் நடந்த கொலை... 18 நாள்கள் தலைமறைவு-ஒலிம்பிக் நாயகன் சுஷில் குமார் கைதானது ஏன்... எப்படி?!

ஒலிம்பிக் நாயகன் டு கொலைக் குற்றவாளி: ஒரே இரவில் மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் வாழ்க்கை தலைகீழாக மாறியது எப்படி?

Published:Updated:
சுஷில் குமார்

ஒலிம்பிக் பதக்கங்களை அணிந்துகொண்டு, புன்னகையுடன் கேமராக்களை நோக்கி போஸ் கொடுத்த மல்யுத்த வீரர் சுஷில் குமார், இன்று கேமராக்களுக்கு பயந்துகொண்டு துண்டால் தலையை மறைத்துக்கொண்டு செல்கிறார். சுஷில் குமாரின் கோபம், அவரை இந்தநிலைக்குத் தள்ளியிருக்கிறது. மல்யுத்தத்தில் தங்கப் பதக்கங்களை அள்ளிக்கொண்டிருந்த நம்பிக்கை நாயகன், தற்போது கொலை வழக்கில் கைதாகியிருப்பது சக விளையாட்டு வீரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சுஷில் குமார்
சுஷில் குமார்

தலைமறைவாக இருந்த சுஷில் குமாரைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கைதுசெய்திருக்கிறது டெல்லி காவல்துறை. அவர் எதற்காகக் கொலை செய்தார்... யாரைக் கொலை செய்தார்... தலைமறைவாக இருந்தவரை காவல்துறை எப்படிக் கைதுசெய்தது என்பதையெல்லாம் பார்ப்பதற்கு முன்பாக, மல்யுத்த அரங்கில் சுஷில் குமார் செய்த சாதனைகளைப் பார்க்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒலிம்பிக் சாம்பியன்!

டெல்லியின் பப்ரோலா (Baprola) கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் சுஷில் குமார். தன் அப்பாவின் மூலம் அறிமுகமான மல்யுத்தத்தின்மீது சுஷிலுக்கு தீராக் காதல் ஏற்பட்டது. 14 வயது முதல் கடும் நெருக்கடிகளுக்கிடையே மல்யுத்தத்தை முறையாகக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார் சுஷில். இதன் விளைவாக இந்தியாவுக்காக மல்யுத்தம் விளையாடும் வாய்ப்பு சுஷிலுக்கு கிடைத்தது. 2008 பீஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவர், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் சுதந்திரத்துக்குப் பின்னர், இரண்டு ஒலிம்பிக் பதக்கங்கள் வென்ற ஒரே இந்தியர் என்ற பெருமை சுஷிலை வந்து சேர்ந்தது.

சுஷில் குமார்
சுஷில் குமார்

2010 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார். காமன்வெல்த் போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களும், காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 5 தங்கம், ஒரு வெண்கலம் உட்பட 6 பதக்கங்களை வென்று இந்தியாவின் மல்யுத்த நாயகனாக வலம்வந்தார் சுஷில்.

2005-ம் ஆண்டில் இந்திய அரசின் அர்ஜுனா விருது பெற்ற சுஷில், 2009-ல் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கும் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதைப் பெற்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொலைக்கான காரணம் என்ன?

சரி, இப்போது கொலைச் சம்பவம் பற்றிக் காண்போம்... டெல்லி சத்ரசால் ஸ்டேடியத்தின் அருகேயிருக்கும் அப்பார்ட்மென்ட் ஒன்றில் இந்திய ஜூனியர் மல்யுத்த வீரரான சாகர் ராணா தங்கியிருந்தார். இந்த அப்பார்ட்மென்ட் வீடு சுஷில் குமாரின் மனைவிக்குச் சொந்தமானது என்று சொல்லப்படுகிறது. நண்பர்களோடு தங்கியிருந்த சாகர் ராணாவுக்கும், சுஷில் குமாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்தநிலையில், சாகர் ராணா தங்கியிருந்த வீட்டை காலி செய்யுமாறு சுஷில் குமார் வற்புறுத்தியதாகவும், ஆனால், சாகர் ராணாவும் அவரது நண்பர்களும் வீட்டைவிட்டு வெளியேற மறுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இதையடுத்து தன் நண்பர்களுடன் இணைந்து, சாகர் ராணாவையும் அவரது நண்பர்களையும் வலுக்கட்டாயமாக வீட்டைவிட்டு வெளியேற்றியிருக்கிறார் சுஷில் குமார். தொடர்ந்து சத்ரசால் ஸ்டேயத்தின் அருகே, சக மல்யுத்த வீரர்கள் மத்தியில் வைத்து சுஷில் குமாரை, சாகர் ராணா கெட்ட வார்த்தையில் திட்டியதாகவும், ``வீட்டைவிட்டு வெளியேற்றியதால் சுஷில் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்'' என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

சுஷில் குமார்
சுஷில் குமார்

இது தொடர்பாக மே 4-ம் தேதி நள்ளிரவில், சத்ரசால் ஸ்டேடியத்தின் பார்க்கிங் ஏரியாவில், இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டிருக்கிறது. இதில் சாகர் ராணவையும் அவரது நண்பர்களையும் கடுமையாகத் தாக்கியிருக்கிறது சுஷில் குமார் தரப்பு. இதையடுத்து சாகர் ராணாவும், அவரது நண்பர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பலத்த காயமடைந்த சாகர் ராணா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் நடைபெற்ற அன்றிலிருந்தே சுஷில் குமாரும் அவரது நண்பர் அஜயும் தலைமறைவாகினர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறை, சுஷில் குமாரின் நண்பர்களுள் ஒருவரான பிரின்ஸைக் கைதுசெய்தது. பிரின்ஸின் செல்போனில் சாகர் ராணா தரப்பைத் தாக்கும் வீடியோ பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த வீடியோவில் தாக்குதலில் ஈடுபட்ட அனைவரின் முகமும் தெளிவாகப் பதிவாகியிருப்பதாக டெல்லி காவல்துறை தெரிவித்தது.

சுஷில் குமார், அவரது நண்பர் பிரின்ஸிடம் இந்தத் தாக்குதலை வீடியோ எடுக்குமாறு கூறியிருக்கிறார். சுஷிலும் அவரது கூட்டாளிகளும் மிருகத்தைத் தாக்குவதைப்போல எதிர்த் தரப்பினரைத் தாக்கியிருக்கின்றனர். மல்யுத்த வீரர்களிடையே தன்மீது பயம் உண்டாக வேண்டும், இனி ஜூனியர்கள் தன்னிடம் பகை வைத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காகவே இந்தத் தாக்குதலில் சுஷில் ஈடுபட்டிருப்பதாகத் சொல்லப்படுகிறது.
டெல்லி போலீஸ்

இந்த விவகாரத்தில் சுஷில் குமார் உட்பட ஒன்பது பேர்மீது வழக்கு பதிவு செய்தது டெல்லி காவல்துறை. இதையடுத்து தலைமறைவான சுஷில் குமாரைத் தேடும் பணியில் இறங்கியது காவல்துறை.

சுஷில் சிக்கியது எப்படி?

கொலை நடந்த அடுத்த நாள் உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷிலுள்ள ஆசிரமத்தில் தங்கிய சுஷில், பின்னர் டெல்லிக்கு வந்திருக்கிறார். அங்கிருந்து உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டுக்குச் சென்றவர், அடுத்த நாள் ஹரியானாவுக்குச் சென்றிருக்கிறார். அதையடுத்து சண்டிகர், பஞ்சாப் என மாநிலம்விட்டு மாநிலம் சென்று காவல்துறையிடமிருந்து தப்பித்துக்கொண்டிருந்தனர் சுஷிலும் அவரது நண்பர் அஜயும்.

இதையடுத்து சுஷில் குமார் இருக்கும் இடம் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்தது டெல்லி போலீஸ். அஜய் இருக்கும் இடம் குறித்த தகவலுக்கு ரூ.50,000 சன்மானம் தரப்படும் எனவும் காவல்துறை அறிவித்தது. இதற்கிடையில் கடந்த 18-ம் தேதி, முன்ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் சுஷில் குமார் தரப்பில் போடப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டது.

சுஷில்
சுஷில்
ANI

18 நாள்களாகத் தலைமறைவாக இருந்த சுஷில், தன் கூட்டாளி அஜயுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று டெல்லியிலுள்ள முண்ட்கா பகுதியில் காவல்துறையினரிடம் பிடிபட்டார். ``நண்பரிடமிருந்து பணம் பெறுவதற்காக இரு சக்கர வாகனத்தில் தன் கூட்டாளி அஜயுடன் வந்த சுஷில் குமாரைப் பொறிவைத்துப் பிடித்துவிட்டோம்'' என டெல்லி காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். அவர்கள் பயணித்து வந்த இருசக்கர வாகனம் டெல்லியைச் சேர்ந்த இந்திய ஹேண்ட்பால் வீராங்கனை ஒருவருடையது என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது. முன்னதாக, கார் மூலம் சுஷில் குமார் மாநிலம்விட்டு மாநிலம் தப்பிச் செல்வதற்கு பப்லூ என்பவர் உதவி செய்திருப்பதும் கண்டறியப்பட்டிருக்கிறது. சுஷில் குமார் மீதும், அவரது நண்பர்கள் மீதும் ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர்களை ஆறு நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க டெல்லி மாவட்ட நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். விசாரணைக்குப் பிறகு, வரும் நாள்களில் இந்த வழக்கில் மேலும் சில புதிய தகவல்கள் வெளியாகலாம் என்கிறார்கள் காவல்துறையினர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism