Published:Updated:

புதுச்சேரி: `திரைப்பட இயக்குநர் ஷங்கரின் மருமகன் மீது போக்சோ ஏன்? - எஃப்.ஐ.ஆர் முழு விவரம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இயக்குநர் ஷங்கரின் மருமகன் ரோஹித்
இயக்குநர் ஷங்கரின் மருமகன் ரோஹித்

17 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் திரைப்பட இயக்குநர் ஷங்கரின் மருமகன், சம்பந்தி உள்ளிட்ட ஐந்து பேர் மீது புதுச்சேரியில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், எஃப்.ஐ.ஆர் தகவல்கள் தற்போது முழுமையாக வெளியாகியிருக்கின்றன.

புதுச்சேரி துத்திப்பட்டு கிராமத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில், பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் ‘சீசெம்’ (Siechem) என்ற தனியார் நிறுவனம் ஐந்து கிரிக்கெட் மைதானங்களை கட்டியிருக்கிறது. இங்கு `ரஞ்சி’ உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. அந்தப் பகுதியில் நீர்நிலைகளையும், அரசு புறம்போக்கு இடங்களையும் ஆக்கிரமித்து கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டிருக்கிறது என்று பல்வேறு சமூக அமைப்புகள் அளித்த புகாரின் அடிப்படையில் `சீசெம்’ கிரிக்கெட் மைதானத்தின் உரிமையாளர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவிட்ட அப்போதைய கவர்னர் கிரண் பேடி, அனைத்துப் போட்டிகளையும் உடனடியாக நிறுத்தவும் உத்தரவிட்டிருந்தார். அதன்படி அப்போது நடைபெற்றுக்கொண்டிருந்த டி-20 கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தப்பட்டு, 2020 நவம்பர் 11-ம் தேதி கிரிக்கெட் மைதானத்துக்கும் சீல் வைக்கப்பட்டது. தற்போது அந்த கிரிக்கெட் மைதானம் திறக்கப்பட்டு கிரிக்கெட் பயிற்சிகள் நடைபெற்றுவருகின்றன.

போக்சோ
போக்சோ

அங்கு பயிற்சிக்குச் சென்ற 17 வயது சிறுமிக்குப் பயிற்சியாளரான தாமரைக்கண்ணன் என்பவர் பாலியல்ரீதியில் தொல்லை கொடுத்திருக்கிறார். அது குறித்து கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்தபோது பயிற்சியாளரை அட்ஜஸ்ட் செய்து செல்லும்படி கூறிய நிர்வாகிகள், சிறுமி கொடுத்த புகாரையும் கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறார்கள். அதனால் தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்தவர்மீதும், அதற்கு துணையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழந்தைகள் நல பாதுகாப்புக்குழுவிடம் புகார் அளித்ததன் அடிப்படையில் பயிற்சியாளர்கள் தாமரைக்கண்ணன், ஜெயக்குமார், கிரிக்கெட் சங்கத் தலைவர் தாமோதரன், அவரின் மகன் ரோஹித் (இயக்குநர் ஷங்கரின் மருமகன்) இணைச் செயலாளர் வெங்கட் உள்ளிட்ட ஐந்து பேர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கின் எஃப்.ஐ.ஆர் தற்போது வெளியாகியிருக்கும் நிலையில், அதிலுள்ள சிறுமியின் புகார் அப்படியே விகடன் வாசகர்களுக்காக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

`என் பெயர் ரூபா, வயது 16. (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). தனியார் பள்ளியில் ப்ளஸ் ஒன் படித்துவருகிறேன். புதுச்சேரியிலுள்ள தனியார் கிரிக்கெட் பயிற்சி மையத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக கிரிக்கெட் பயிற்சி எடுத்துவருகிறேன். போன சீஸனிலிருந்து கிரிக்கெட் அசோசியேஷன் ஆஃப் பாண்டிச்சேரியின் கீழ் கிரிக்கெட் விளையாடிவருகிறேன். `ஸ்மாஷஸ்’ என்ற கிரிக்கெட் அகாடமியின் பயிற்சியாளர் ஜெயக்குமார் என்பவர், கிரிக்கெட் அசோசியேஷன் ஆஃப் பாண்டிச்சேரியின் முன்னணிப் பயிற்சியாளராக இருப்பதாலும், லாக்டெளனில் அனைத்துப் பயிற்சி மையங்களும் மூடப்பட்டிருந்ததாலும் அங்கு சென்று பயிற்சி எடுத்துக்கொள்ளும்படி எனது பயிற்சியாளர் கூறியதன் அடிப்படையில் அங்கு சேர்ந்தேன்.

பயிற்சியாளர் தாமரைக்கண்னன்
பயிற்சியாளர் தாமரைக்கண்னன்

ஜெயக்குமாரும்ம் கனகலிங்கமும்தான் பயிற்சியாளர்கள். தினமும் காலை 6 மணி முதல் 8:30 மணி வரையிலும், மாலை 3:30 மணி முதல் 6:30 மணி வரையிலும் பயிற்சிகள் நடைபெற்றாலும் காலையில் மட்டும்தான் பயிற்சியாளர்கள் வருவார்கள். அதனால் அங்கு சீனியர் பிளேயராக இருந்த தாமரைக்கண்ணன் என்பவர்தான் அனைவருக்கும் பயிற்சி கொடுப்பார். சில மாணவிகள் மட்டுமே மாலை நேரப் பயிற்சிக்கு வருவார்கள். தாமரைக்கண்ணனிடமிருந்து ரூ.10,000 மதிப்புள்ள தொப்பியை விலைக்கு வாங்கினோம் என்பதால் அவரை எனக்கு முன்பே தெரியும். அனைத்து மாணவிகளுடன் எனக்கும் அவர்தான் பயிற்சி கொடுத்தார். அப்போது எனது உடலிலும், அந்தரங்கப் பகுதிகளிலும் கைவைத்து பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போது நான் அவரைத் திட்டியதுடன், `என்னிடம் இப்படியெல்லாம் நடந்துக்காதீங்க...’ என்று எச்சரித்தேன். அந்தச் சம்பவம் குறித்து பயிற்சியாளர் ஜெயக்குமாரிடம் இரண்டு முறை புகார் செய்தபோது, `நான் அவரைக் கண்டிக்கிறேன்’ என்று கூறினார். ஆனால், அவர் தாமரைக்கண்ணனைக் கண்டிக்காததுடன் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஆனால், தாமரைக்கண்ணன் மீண்டும் மீண்டும் என்னிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டார். நான் அமர்ந்திருக்கும்போது வேண்டுமென்றே என் மீது பந்துகளை வீசுவது போன்ற செயல்களைச் செய்தார். செலக்‌ஷனுக்காக 2021, ஜூலை மாதம் கிரிக்கெட் அசோசியேஷன் ஆஃப் பாண்டிச்சேரிக்கு சென்றிருந்தபோது, கிரிக்கெட் அசோசியேஷன் ஆஃப் பாண்டிச்சேரியின் கேப்டனும், சீனியர் பிளேயருமான ரோஹித் அண்ணனைச் சந்தித்தேன்.

புதுச்சேரி துத்திப்பட்டிலுள்ள சீசெம் கிரிக்கெட் மைதானம்
புதுச்சேரி துத்திப்பட்டிலுள்ள சீசெம் கிரிக்கெட் மைதானம்

அப்போது தாமரைக்கண்ணன் என்னிடம் தவறாக நடந்துகொள்வது குறித்து அவரிடம் கூறியபோது, `அது ஒரு பெரிய விஷயமில்லை. இங்கு விளையாடும் அனைத்துப் பெண்களும் இப்படியான தொல்லைகளைத் தாண்டித்தான் வருகிறார்கள். நீ விளையாடணும்னா அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு கடந்து போ’ என்று கூறிவிட்டுப் போய்விட்டார். சில நாள்களுக்குப் பிறகு கிரிக்கெட் அசோசியேஷன் ஆஃப் பாண்டிச்சேரியின் முன்னாள் செயலாளரும், சீசெம் விளையாட்டு மைதானத்தின் உரிமையாளருமான தாமோதரனை (இயக்குநர் ஷங்கரின் சம்பந்தி) சந்தித்து தாமரைக்கண்ணன் குறித்துப் புகார் செய்தபோது, அவரும் ரோஹித் அண்ணன் கூறியதுபோலவே கூறினார்.

இயக்குநர் ஷங்கர் மருமகன் உள்ளிட்டவர்கள்மீது போக்சோ வழக்கு!

அதுமட்டுமல்லாமல் இது பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது என்று மிரட்டிய அவர், அப்படிக் கூறினால் இருபது பேர் விளையாடக்கூடிய அணிக்கு என்னைத் தேர்வு செய்ய மாட்டேன் என்றும் கூறினார். அத்துடன் `என் நேரத்தை வீணாக்காதே’ என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார். சில நாள்கள் கழித்து 2021, ஆகஸ்ட் 8-ம் தேதி உடைந்துபோன எனது கிரிக்கெட் பேட் குறித்து கேட்பதற்காக தாமரைக்கண்ணனுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினேன். அதற்கு அவர் சில தவறான எஸ்.எம்.எஸ்-களை அனுப்பினார். அதில் அவர் மனைவி கர்ப்பமாக இருப்பதால், அவருடன் நெருக்கமாக இருக்க முடியாததால் என்னை காதலிப்பதாகவும், எனக்கும் அவருக்குமான உறவு அண்ணன் தங்கை உறவு இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். அவர் கூறுவதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் எனக்கு பயிற்சி கொடுக்க மாட்டேன் என்று மிரட்டினார்.

 பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

இது பற்றி வீட்டில் தெரிவித்தால் இனிமேல் விளையாட அனுமதிக்க மாட்டார்கள் என்ற பயத்தால் அப்போது அப்பா, அம்மாவிடம் கூறவில்லை. அதன் பிறகு பயோ பப்பிளுக்கு தேர்வாகி ஸ்லிம்ஸ் மைதானத்துக்குச் சென்றுவிட்டேன். ஒருநாள் அங்கு வந்த அம்மா, தாமரைக்கண்ணன் சரியான ஆள் இல்லை என்றும், அவரிடம் கவனமாக இரு என்றும் கூறினார். உடனே தாமரைக்கண்ணன் எனக்கு அனுப்பிய எஸ்.எம்.எஸ் தகவல்களை அம்மாவிடம் காட்டினேன். உடனே அம்மா அந்த அனைத்துத் தகவல்களையும் ஏற்கெனவே எனக்குப் பயிற்சி கொடுத்த மேடமுக்கு அனுப்பிவைத்தார்கள். உடனே அவர்கள் கிரிக்கெட் அசோசியேஷன் ஆஃப் பாண்டிச்சேரியின் செயலர் சந்துரு சாரிடம் புகார் அளிக்கும்படி கூறினார். அதன்படி புகார் கடிதத்தை எழுதிக்கொண்டு சென்றபோது, அங்கிருந்த இணைச் செயலர் வெங்கட், ’புகாரெல்லாம் கொடுக்கக் கூடாது’ என்று என் அப்பாவையும் அம்மாவையும் மிரட்டினார்.

தொடர்ந்து நாங்களே தாமரைக்கண்ணன் மீது நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறிவிட்டு ஒரு வெள்ளை பேப்பரில் எங்களிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு எங்களை அனுப்பிவிட்டார். ஆனால் அதன் பிறகும் தாமரைக்கண்ணன் மீது எந்த நடவடிக்கையையும் அவர்கள் எடுக்கவில்லை. அதைத் தொடர்ந்து 14.10.2021 அன்று தாமரைக்கண்ணன் தன் மனைவி மற்றும் இரண்டு பேருடன் எங்கள் வீட்டுக்கு வந்து தன்மீது புகார் எதுவும் கொடுக்க வேண்டாம் என்று கூறினார். அப்போது அப்பா அவருடைய நண்பர்களுக்கு போன் செய்ததால் இரண்டு போலீஸ் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். அதுக்கப்புறம்தான் அவர்கள் என் வீட்டைவிட்டு வெளியேறினார்கள். இதையெல்லாம் பார்த்து எனக்கு பயம் வந்ததால் 1098 எண்ணுக்கு போன் செய்து குழந்தைகள் நல பாதுகாப்புக்குழுவிடம் புகாரளித்தேன். தயவுசெய்து தாமரைக்கண்ணன் உள்ளிட்ட அனைவர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுங்கள்’ என்று அதில் தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் ஷங்கர் மருமகன் உள்ளிட்டவர்கள்மீது போக்சோ வழக்கு!

இந்தப் புகாரின் அடிப்படையில்தான் பயிற்சியாளர் தாமரைக்கண்ணன் மீது போக்சோ பிரிவு 10 மற்றும் 12-ன்படி பாலியல் சீண்டல், பாலியல்ரீதியில் ஆபாசமாகப் பேசுவது உள்ளிட்ட பிரிவுகளிலும், பாலியல் குற்றத்தை மறைத்து தவறுக்கு உறுதுணையாக இருக்கும் குற்றத்துக்கான போக்சோ பிரிவு 12-ன் கீழ் கிரிக்கெட் சங்க முன்னாள் செயலர் தாமோதரன், பயிற்சியாளர் ஜெயக்குமார், இணைச் செயலர் வெங்கட், புதுச்சேரி சீனியர் கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தற்போது தலைமறைவாக இருக்கும் இந்த ஐந்து பேரும் காவல்துறையினரால் தேடப்பட்டுவருகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு