Published:Updated:

தீண்டாமைச் சுவர்: வாடகை விளம்பரம் முதல் டிக்டாக் வரை... சாதியத்தின் கோரமுகம்!

நடூரில் இடிந்துவிழுந்த சுவர்
நடூரில் இடிந்துவிழுந்த சுவர் ( Photo: T.Vijay / vikatan )

கோவை அருகே சுவர் இடிந்துவிழுந்து 17 உயிர்கள் பறிபோய்விட்டனவே என்ற கவலையைக் காட்டிலும், `தீண்டாமைச் சுவர்’ என்று பிரச்னையைக் கிளப்புகிறார்களே என்ற பதற்றம் பலரிடம் காணப்படுகிறது.

கோவையை அடுத்த நடூரில், சுவர் இடிந்துவிழுந்து குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்த சம்பவம், பெரும் சோகம். மழையில் வீடுகள் இடிந்துவிழுந்து 17 பேர் உயிரிழந்தனர் என்றுதான் முதலில் செய்திகள் வெளியாகின. பல மணி நேரத்துக்குப் பிறகுதான், அருகில் இருந்த காம்பவுண்டு சுவர் இடிந்து வீடுகள் மீது விழுந்ததால் அந்த மரணங்கள் நிகழ்ந்தன என்ற உண்மை வெளியுலகத்துக்குத் தெரியவந்தது.

உறவுகளை இழந்து கதறும் நடூர் மக்கள்
உறவுகளை இழந்து கதறும் நடூர் மக்கள்

கூடவே, 17 உயிர்களைப் பலிவாங்கிய அந்தச் சுவர், ஒரு தீண்டாமைச் சுவர் என்ற குற்றச்சாட்டும் கிளம்பியது. அதுவரை 17 பேர் மரணத்துக்கு இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துவந்த சிலர், `அது வெறும் சுவர்தான். தீண்டாமைச் சுவர் என்றெல்லாம் சொல்லாதீர்கள்’ என்று பதற்றமடைய ஆரம்பித்தனர். தீண்டாமைச் சுவர் என்ற வார்த்தையை அவர்களால் ஏற்க முடியவில்லை. `சுவருக்கு சாதிச்சாயம் பூச முடியுமா... தீண்டாமைச் சுவர் என்ற வார்த்தையை எங்கிருந்து கண்டுபிடித்தீர்கள்?’ என்றும் சிலர் ஆத்திரப்பட்டனர்.

சாதிபேதமற்ற, மதமாச்சர்யமற்றதாக நம் சமூகம் இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதே சமயத்தில், சாதியில் ஊறியதுதான் நம் சமூகம் என்ற கசப்பான உண்மையையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. சுவருக்கு சாதி உண்டு என்று முதலில் உலகுக்குச் சொன்னது, மதுரையை அடுத்த உத்தப்புரம் கிராமம். `எங்கள் ஊரில் தீண்டாமைச் சுவர் இருக்கிறது. அதை இடிக்க வேண்டும்’ என்று பத்தாண்டுகளுக்கு முன்பு அந்த மக்கள் குரல் எழுப்பினர். அப்போதுதான், தீண்டாமைச் சுவர் என்ற வார்த்தை சமூகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

நடூர்
நடூர்
17 பேரின் உயிரைப் பறித்த ஒற்றைச் சுவர்... மேட்டுப்பாளையம் நடூரில் நடந்தது என்ன? முழு விவரம்!

உத்தப்புரத்தில் தங்கள் பகுதிக்குள் பட்டியலின மக்கள் வருவதைத் தடுப்பதற்காக, 1989-ம் ஆண்டு வேறு ஒரு சமூகத்தினர் 15 அடி உயரத்துக்கு ஒரு சுவரை எழுப்பியுள்ளனர். அது, சாதியக் கண்ணோட்டத்துடன் கட்டப்பட்ட சுவர் என்று குற்றம் சாட்டிய பட்டியலின மக்கள், அந்தச் சுவர் இருப்பதால் முக்கிய இடங்களுக்கு நீண்ட தூரம் சுற்றிக்கொண்டு போகவேண்டியிருக்கிறது என்று புகார் கூறினர். அந்தச் சுவரை இடிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். அதற்கு, சுவர் எழுப்பிய சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு சமூகத்தினருக்கு இடையே பதற்றம் ஏற்பட்டதால், இரு தரப்பினரையும் அழைத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். உடன்பாடு ஏற்படவில்லை.

அந்தப் பிரச்னை 2008-ம் ஆண்டு தீவிரமடைந்தது. `அது ஒரு தீண்டாமைச் சுவர்... அதை இடிக்கவேண்டும்’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் போராட்டங்களை நடத்தின. மேலும், மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத், உத்தப்புரம் வருவதாக அறிவிக்கப்பட்டது. அவர் வருவதற்கு முந்தைய நாள், உத்தப்புரத்தில் இருந்த தீண்டாமைச் சுவரின் ஒரு பகுதியை அதிகாரிகள் இடித்தனர்.

2008-ம் ஆண்டு மே மாதம் 6-ம் தேதி, உத்தப்புரம் தீண்டாமைச் சுவர் இடிக்கப்பட்டது. அதே தினம் சட்டசபையில், `இதுவரை சமத்துவம் நிகழாத உத்தப்புரம் இனி உத்தமபுரமாக இருக்கட்டும்’ என்று குறிப்பிட்டார் அன்றைய முதல்வர் கருணாநிதி.

நடூரில் நொறுங்கி வீடுகள்
நடூரில் நொறுங்கி வீடுகள்

அந்தச் சம்பவம் நிகழ்ந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு, தீண்டாமைச் சுவர் பற்றிய விவாதம் தற்போது எழுந்துள்ளது. கோவை அருகே உள்ள நடூரில், அருந்ததியர் மக்களின் குடியிருப்பு அமைந்துள்ள பகுதியில், 20 அடி உயரத்துக்கு கருங்கல் சுவரைக் கட்டியிருக்கிறார், ஜவுளிக்கடை தொழிலதிபர் ஒருவர். தான் வசிக்கும் பங்களாவின் பாதுகாப்புக்காக அவர் எழுப்பிய சுவர் அது. ஆனால், அந்தச் சுற்றுச்சுவரைப் பார்த்தாலே அது சாதியக் கண்ணோட்டத்தில் கட்டப்பட்ட சுவர் என்பது புரியும் என்கிறார், கோவையைச் சேர்ந்த எழுத்தாளர் முருகவேள்.

``அந்தச் சுவரைப் பார்த்தாலே அது ஒரு தீண்டாமைச் சுவர் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஒரு வீட்டின் காம்பவுண்டு சுவர், அனைத்துப் புறங்களிலும் ஒரே உயரத்தில்தானே இருக்க வேண்டும். ஆனால், அந்த வீட்டின் சுற்றுச்சுவர் ஒரு பக்கம் 5 அடி உயரத்திலும் இன்னொரு பக்கம் 20 அடி உயரத்திலும் உள்ளது. இதற்கு என்ன காரணம்? 20 அடி சுவர் அமைந்துள்ள பகுதி, அருந்ததியர் சமூக மக்கள் வாழும் பகுதி. அந்த மக்கள், தங்கள் பார்வையிலேயே இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் அவ்வளவு உயரத்தில் கட்டியிருக்கிறார் அந்த பங்களாவின் உரிமையாளர்.

உத்தப்புரம் தீண்டாமைச்சுவர்
உத்தப்புரம் தீண்டாமைச்சுவர்

சாதியக் கண்ணோட்டத்துடன் கட்டப்பட்டிருப்பதால்தான், அது தீண்டாமைச் சுவர் என்று சொல்லப்படுகிறது. பட்டியலின மக்கள் அல்லாமல் வேறு சமூக மக்கள் வாழ்கிற இடமாக அது இருந்திருந்தால், அந்தச் சுவர் 5 அடி உயரத்துக்கு மேல் உயர்ந்திருக்காது. தொட்டால் தீட்டு என்பதையும் தாண்டி அந்த மக்களைப் பார்த்தாலே தீட்டு என்ற எண்ணத்தில்தான் அந்தச் சுவர் கட்டப்பட்டுள்ளது. அதற்குக் காரணமானவர்மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமைச் சட்டத்தின் பிரிவுகளில் கைதுசெய்ய அனைத்து முகாந்திரங்களும் உள்ளன” என்கிறார் எழுத்தாளர் முருகவேள்.

எந்தச் சுவரையும் தீண்டாமைச் சுவர் என்று சொல்லக்கூடாது என்று பதற்றத்துடன் பலர் இப்போதும் பேசிவருகிறார்கள். ஆனால், பல ஆண்டுக் காலமாக அந்தச் சுவரால் பல துயரங்களை அனுபவித்துவந்த, தற்போது தங்களின் ரத்தசொந்தங்களை இழந்து வலியைச் சுமந்துகொண்டிருக்கும் அந்த மக்களே சொல்கிறார்கள், அது ஒரு தீண்டாமைச்சுவர் என்று.

நடூரில் அந்தக் கொடூரம் நிகழ்ந்த அதே பகுதியில், ஹாலோ பிளாக்கால் கட்டப்பட்ட மற்றொரு பிரமாண்டமான சுவர் இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அருந்ததியர் சமூக மக்கள் வசிக்கும் பகுதியை மறைப்பதற்காகவே இந்தச் சுவரும் கட்டப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால், இதையும் `தீண்டாமைச் சுவர்' என்று சொல்லாதீர்கள் என்று சொல்கின்றனர் சிலர்.

Vikatan

எந்தச்சுவரும் தீண்டாமைச் சுவராக இருக்கக்கூடாது எனும் எண்ணத்தில் இந்தக் குரல்கள் வருமென்றால், நாம் அதை வரவேற்கலாம். ஆனால், மனிதம் தாண்டிய ஒரு செயலை மறைப்பதற்காக இந்தக் குரல்கள் எழும் என்றால், அதைக் கண்டிக்கவேண்டியதும் நாம்தான். `இப்பெல்லாம் யார் சார் சாதி பாக்கறாங்க?’ என்று பலர் பேசிக்கொண்டிருந்தாலும், வீட்டு வாடகை விளம்பரங்களில் ஆரம்பித்து டிக்டாக் வரை ஒரு வலம் வந்தாலே சாதியின் கோரமுகம் தெரிந்துவிடும். இன்றைய இளைஞர்களில் சிலரும் இந்த சாதிப்பித்தால் பீடிக்கப்பட்டுள்ளனர் என்பது வேதனைப்படவேண்டிய உண்மை.

`17 உயிர் போயிருக்கு. இப்ப சாதி பத்திப் பேசணுமா?’ என்று கேட்கும் நடுநிலையாளர்களுக்கு நம்மிடம் ஒரே கேள்விதான் உள்ளது.

``இப்போது இல்லையென்றால்... பிறகெப்போது?”

அடுத்த கட்டுரைக்கு