Published:Updated:

பெண் எஸ்.பி பாலியல் வழக்கு: தி.மு.க அரசு வந்தும் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி கைது செய்யப்படாதது ஏன்?

விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம்
விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம்

சாதாரண நபர்கள் இதுபோன்ற குற்றச்சாட்டில் சிக்கினால் உடனடியாகக் கைது செய்யும் காவல்துறை, சிறப்பு டி.ஜி.பி-யை ஏன் கைது செய்யவில்லை என்ற கேள்வி தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.` நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கைது செய்வோம்' என்று சொன்ன தி.மு.க-வும் இன்னும் அவரை கைது செய்யாமல் இருப்பது ஏன்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``பெண் எஸ்.பி-யிடம் தான் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகத் தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்" என்ற முன்னாள் சிறப்பு டி.ஜி.பி-யின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அதுமட்டுமல்லாது விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் இந்த வழக்கை உயர் நீதிமன்றம் கண்காணிக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இந்த நிலையில், இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோருவதன் பின்னணி என்ன? `நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அவரை கைது செய்வோம் என்று கூறிய தி.மு.க ஏன் இன்னும் அவரை கைது செய்யவில்லை, அதில் ஏதாவது சட்டச் சிக்கல் இருக்கிறதா?' என்றெல்லாம் மக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளன.

`நடந்தது என்ன... வழக்கின் ஃப்ளாஷ்பேக்!'

கடந்த பிப்ரவரி மாதம், 21-ம் தேதி, சட்டமன்றத் தேர்தல் பரப்புரைகள் வேகமெடுத்திருந்த நேரம்... அன்று முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, டெல்டா மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். அவரின் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கண்காணிப்பதற்காக அப்போதைய சிறப்பு டி.ஜி.பி அங்கு சென்றிருந்தார். இந்த நிலையில், பணி நிமித்தமாக, சிறப்பு டி.ஜி.பி-யின் காரில் பயணித்தபோது அவர் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகப் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி முன்வைத்த குற்றச்சாட்டு தமிழகத்தையே அதிரவைத்தது.

`சிறப்பு டி.ஜி.பி-யின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தமிழக அரசின் அப்போதைய உள்துறைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி-யிடம் புகார் அளிப்பதற்கு பாதிக்கப்பட்ட பெண் ஐ.பி.எஸ் அதிகாரி சென்னைக்கு காரில் விரைந்தார். அந்தத் தகவலையறிந்த சிறப்பு டி.ஜி.பி, அவரை தடுக்குமாறு செங்கல்பட்டு மாவட்டத்தின் போலீஸ் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட போலீஸாருடன் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியின் காரை மடக்கிய செங்கல்பட்டு போலீஸ் அதிகாரி, பெண் ஐ.பி.எஸ் அதிகாரியைத் தடுத்துள்ளார். அதற்கெல்லாம் அசராத அந்தப் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி அந்தத் தடைகளையெல்லாம் கடந்து சிறப்பு டி.ஜி.பி மீது புகார் கொடுத்தார்.

கனிமொழி
கனிமொழி

`போராட்டம் நடத்திய தி.மு.க!'

இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்த 6 பேர் அடங்கிய விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. ஆனால், அவர்மீது உடனடியாக வழக்கு பதிவுசெய்து கைது செய்யவில்லை. `அவரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்' என்று பிப்ரவரி 21-ம் தேதி, தி.மு.க மகளிரணி தலைவி கனிமொழி தலைமையில் போராட்டம் நடத்தியது தி.முக. `பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரியை அ.தி.மு.க அரசு கைது செய்யவில்லை என்றால் தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் கைது செய்வோம்' என்று மு.க.ஸ்டாலினும் அறிக்கை வெளியிட்டார். பல்வேறு தரப்பிலிருந்து அழுத்தங்கள் உருவானதும் சிறப்பு டி.ஜி.பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஆனாலும், அவர் கைதுசெய்யப்படவில்லை. தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிறப்பு டி.ஜி.பி மீதும் செங்கல்பட்டு போலீஸ் அதிகாரி மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது சி.பி.சி.ஐ.டி போலீஸ்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`தலையிட்ட உயர் நீதிமன்றம்!'

இந்த வழக்கின் விசாரணை, விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்துவந்த நிலையில், தாமாக முன்வந்து இந்த வழக்கை எடுத்து விசாரித்தது சென்னை உயர் நீதிமன்றம். ``பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு நேர்ந்திருக்கும் அதிர்ச்சி சம்பவம் மிகுந்த கவலையளிக்கிறது. இந்த வழக்கின் நகர்வுகளை உன்னிப்பாகக் கவனிப்போம்" என்று உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம் மேலும், ``இந்த வழக்கு விசாரணை முறையாக நடப்பதை உறுதிசெய்யும் பொருட்டு, அரசியல் கட்சிகள் இந்த வழக்கை அரசியலாக்கவோ, பரப்புரை மேற்கொள்ளவோ, அறிக்கைகள் வெளியிடவோ கூடாது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

விசாரணை நடைபெறும் நேரத்தில், பாதிக்கப்பட்ட பெண் ஐ.பி.எஸ் அதிகாரியின் பெயரையும், குற்றம்சாட்டப்பட்டவரின் பெயரையும் ஊடகங்களில் வெளியிடவும் அனுமதி மறுக்கப்படுகிறது. இந்த உத்தரவுகளை மீறுவது, நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும்" என்று எச்சரித்திருந்தது. இதற்கிடையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க ஆட்சியமைத்தது. ஆகஸ்ட் 2-ம் தேதி, இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இரு அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கை நாள்தோறும் விசாரணை என்ற அடிப்படையில் விசாரித்து, டிசம்பர் 20-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று விழுப்புரம் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்துக்குச் சென்ற முன்னாள் சிறப்பு டி.ஜி.பி!

இதையடுத்துதான், இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் சிறப்பு டி.ஜி.பி. ``இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலையீடு சரியானதாக இல்லை" என்பது அவர் தரப்பு வாதமாக இருந்தது. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற முடியாது. விழுப்புரம் நீதிமன்றத்தில்தான் நடக்கும். ஆனால், சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை கண்காணிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரியதன் பின்னணி குறித்தும், முன்னாள் சிறப்பு டிஜிபி இதுவரை கைது செய்யப்படாதது குறித்தும் கேள்விகள் எழுந்திருக்கின்றன.

Representational image
Representational image
`சிறப்பு டி.ஜி.பி... மாவட்ட எஸ்.பி... எவனா இருந்தா எனக்கென்ன?' - அந்த துணிவுக்கே சல்யூட் மேடம்!

ஏன் கைது செய்யப்படவில்லை?!

சாதாரண நபர்கள் இதுபோன்ற குற்றச்சாட்டில் சிக்கினால் உடனடியாகக் கைது செய்யும் காவல்துறை, இவரை ஏன் கைது செய்யவில்லை என்ற கேள்வி தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கைது செய்வோம் என்று சொன்ன தி.மு.க-வும் அதற்கான முயற்சிகளை எடுக்கவில்லையா என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது. அதில் ஏதாவது சட்ட சிக்கல் இருக்கிறதா என வழக்கறிஞர் லோகநாதனிடம் கேட்டோம், ``சட்டத்தின் முன்பு அனைவரும் சமம்தான். போலீஸ் உயர் அதிகாரிக்கு தனி சட்டமெல்லாம் கிடையாது. புகார் கொடுக்கப்பட்டு எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்ட பின், அவர் குற்றத்தைச் செய்திருப்பதற்கான முகாந்திரங்கள் இருந்தால் நிச்சயம் கைது செய்யலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால், என்ன காரணத்தினாலோ அ.தி.மு.க அரசு அதைச் செய்யாமல் விட்டுவிட்டது.

தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் கைது நடவடிக்கை இருக்கும் என்று பலரும் நினைத்துக்கொண்டிருந்தனர். ஏனெனில், தேர்தல் சமயத்தில் மு.க.ஸ்டாலின் அவ்வாறு உறுதியளித்திருந்தார். தி.மு.க அரசு கைது நடவடிக்கை எடுப்பதற்குள்ளாக சிறப்பு டி.ஜி.பி விழுப்புரம் நீதிமன்றத்தை அணுகி முன்ஜாமீன் பெற்றுவிட்டார். பெண் ஐ.பி.எஸ் அதிகாரியைத் தடுத்த எஸ்.பி-க்கும் முன்ஜாமீன் வழங்கப்பட்டுவிட்டது. ஆகையால், இப்போது கைது நடவடிக்கை எடுக்க முடியாது. முன்ஜாமீன் வழங்கும்போது விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மீறினாலோ, சாட்சிகளைக் கலைக்க முயன்றாலோ முன்ஜாமீனை ரத்து செய்யச் சொல்லி நீதிமன்றத்தில் முறையிடலாம். அது ரத்து செய்யப்பட்டால் கைது செய்யலாம். எல்லோரும் கைது நடவடிக்கை குறித்துதான் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், சென்னை உயர் நீதிமன்றம் விதித்த விசித்திரமான உத்தரவு குறித்து யாரும் இன்றுவரை கேள்வி எழுப்பவில்லை.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
காவல்துறையின் பாலியல் குற்றங்கள் தண்டனைக்கு உட்படாதவையா... 3 சம்பவங்கள் சொல்லும் சேதி! #VoiceOfAval

தாமாக இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் நடவடிக்கையைப் பலரும் பாராட்டினார்கள். ஆனால், குற்றம் சாட்டப்பட்டவரின் பெயரையும் புகைப்படத்தையும் ஊடகங்களும் அரசியல்வாதிகளும் பயன்படுத்தக் கூடாது என்று பிறப்பித்த உத்தரவுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அந்த உத்தரவை எதிர்த்து யாரும் மேல்முறையீடு செய்யவில்லை. ஊடகங்களும் இன்றுவரை அவரது பெயரை குறிப்பிடாமல் காவல்துறை உயர் அதிகாரி என்றே குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுவருகின்றன. சிறைத்தண்டனை கிடைக்கும் என்பதைவிட சமூகத்தில் தன் பெயர் கெட்டுவிடும் என்ற அச்சத்தில்தான் ஒருவன் குற்றச்செயலில் ஈடுபடத் தயங்குகிறான்.

குற்றம்சாட்டப்பட்ட ஒருவரின் பெயரை வெளியிடக் கூடாது என்பதை எதன் அடிப்படையில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது என்று தெரியவில்லை. தமிழக ஆளுநர் மீது பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டபோது எல்லா ஊடகங்களும் அவரது பெயரைக் குறிப்பிட்டுத்தான் எழுதின. இத்தனைக்கும் அவர்மீது ஒரு எஃப்.ஐ.ஆர்கூட பதிவு செய்யப்படவில்லை. ஒரு பெண் போலீஸ் அதிகாரியால் புகார் கொடுக்கப்பட்டு எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்ட ஒருவரின் பெயரை வெளியிடக் கூடாது என்று இவருக்கு மட்டும் தனிச்சலுகை கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? அப்படியெனில் இவர் எந்த இடத்தில் வேறுபடுகிறார்? சிறப்பு டி.ஜி.பி-யாக இருந்ததால் வேறுபடுகிறாரா அல்லது இவரது இழுப்புக்கு உயர் நீதிமன்றம் செயல்படுகிறதா என்று சந்தேகம் எழுகிறது.

லோகநாதன்
லோகநாதன்

பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரையும் புகைப்படத்தையும் வெளியிடக் கூடாது என்று சொல்லித்தான் இதுவரை கேள்விபட்டிருக்கிறோம். ஆனால், குற்றம் சுமத்தப்பட்டவரின் பெயரையும் வெளியிடக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்ததை இந்த வழக்கில்தான் பார்த்தேன். பள்ளி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியர்கள், சிவசங்கர் பாபா, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் எனப் பலரும் தங்கள்மீதான குற்றம் நிரூபிக்கப்படும்வரை அவர்களது பெயர்களையும் புகைப்படத்தையும் வெளியிடக் கூடாது என்று நீதிமன்றத்தை அணுகினால் அப்படி உத்தரவிடுவார்களா? அப்படி உத்தரவிட்டால் என்ன நடக்கும்? குற்றங்கள் எளிதாகப் பெருகும். இந்த வழக்கில் ஏன் உயர் நீதிமன்றம் தலையிட்டது என்று நினைக்கும் வகையில் ஆகிவிட்டது அந்த நிகழ்வு.

உயர் நீதிமன்றம் இந்த வழக்கை கண்காணிக்கக் கூடாது என்று இப்போது உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு சரியானதுதான். ஏனெனில், விழுப்புரம் விசாரணை நீதிமன்றத்துக்குத் தேவையில்லாமல் ஓர் அழுத்தத்தை உருவாக்கும். சுதந்திரமாக விசாரணையை மேற்கொள்ள முடியாது. விசாரணை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் தீர்ப்பு வரும் என்று நம்புவோம்" என்றார்.

விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு