Election bannerElection banner
Published:Updated:

குடியாத்தம்: தேடி வந்த கணவர்... `காதலனைப் பிரிய மனமில்லை!’ - மனைவியால் நேர்ந்த கொடூரம்

கொலை
கொலை

குடியாத்தம் அருகே இளம் வயது காதலனைப் பிரிய மனமில்லாமல் கணவனைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவியை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்துள்ள கென்னடி குப்பத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கு வயது 50. இரவு நேரக் காவலாளியாக வேலை செய்துவந்தார். கோவிந்தராஜின் மனைவி கல்யாணி கருத்து வேறுபாடு காரணமாகக் கணவனைப் பிரிந்து குடியாத்தம் அருகேயுள்ள ராமாலை தண்ணீர் பந்தல் பகுதியில் டிபன் கடை நடத்திவந்தார். இதற்கிடையே, பிரிந்து சென்ற மனைவியை சமீபத்தில் தேடிச் சென்ற கோவிந்தராஜ், `இனி சேர்ந்து வாழலாம்’ என்று கூறி மனைவியுடனேயே தங்கினார்.

மரணத்தில் சந்தேகம்

இந்தநிலையில், கடந்த 4-ம் தேதி மர்மமான முறையில் கோவிந்தராஜ் இறந்துகிடந்தார். தன்னைத் தானே கழுத்தை அறுத்துக்கொண்டு அவர் தற்கொலை செய்துகொண்டதாக கோவிந்தராஜின் உறவினர்களிடம் கூறியிருக்கிறார் மனைவி கல்யாணி. இதையடுத்து, சொந்த ஊரான கென்னடி குப்பத்துக்கு கணவரின் உடலைத் தூக்கிச் சென்று இறுதிச் சடங்கு செய்திருக்கிறார். உடலில் ரத்தக் காயங்களும், முகம் சிதைந்தும் இருந்ததைப் பார்த்து உறவினர்கள் சந்தேகமடைந்துள்ளனர்.

கல்யாணி
கல்யாணி

அது குறித்துக் கேட்டதற்கு மனைவி கல்யாணியும் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியுள்ளார். உறவினர்களுக்குச் சந்தேகம் வலுத்ததால், போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். நிகழ்வு பரதராமி காவல் நிலையத்துக்குட்பட்டு நடந்திருப்பதால், அந்த போலீஸார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனர். கோவிந்தராஜின் அக்காள் தங்கம்மாள், `தம்பி மரணத்தில் மர்மம் இருக்கிறது. கொலையாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது’ என்று புகாரளித்தார். அதன்பேரில், போலீஸாரும் வழக்கு பதிந்து விசாரணையைத் தொடங்கினர்.

இந்தநிலையில், மனைவி கல்யாணியைப் பிடித்து போலீஸார் கிடுக்கிப்பிடியாகத் தீவிர விசாரணை நடத்தியபோது, கோவிந்தராஜ் கொலை செய்யப்பட்ட பகீர் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இளம் வயது காதலன்

இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது, ``கோவிந்தராஜைப் பிரிந்து மகள் வசிக்கும் ராமாலை தண்ணீர் பந்தல் கிராமத்துக்குச் சென்ற கல்யாணி தனியாகவே வசித்துவந்திருக்கிறார். அவர் நடத்தி வந்த டிபன் கடைக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்காக அதே பகுதியைச் சேர்ந்த நித்தியானந்தம் என்பவரின் ஆட்டோவில் சென்று வந்திருக்கிறார். அப்போது, நித்தியானந்தத்துடன் கல்யாணிக்கு நெருங்கிய நட்பு ஏற்பட்டது. தன்னைவிட 10 வயது இளையவர் என்றாலும், கணவரைப் பிரிந்து வாழ்வதால் நித்தியானந்தத்துடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார் கல்யாணி. காதலன் நித்தியானந்தம், கல்யாணி தங்கியிருந்த வீட்டுக்கு தினமும் வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது

இந்தச் சூழலில், பிரிந்து சென்ற கணவர் கோவிந்தராஜ் மீண்டும் தன்னைத் தேடி வந்ததை கல்யாணி விரும்பவில்லை. கணவரின் வருகை காதலனுடன் இருந்த நெருக்கத்துக்கு இடையூறாக அமைந்தது. இதனால், கணவன் கோவிந்தராஜைக் கொலை செய்ய காதலனுடன் சேர்ந்து திட்டம் வகுத்துள்ளார் கல்யாணி.

நித்தியானந்தம்
நித்தியானந்தம்

கொடூரக் கொலை

சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கோவிந்தராஜின் தலையில் இருவரும் சேர்ந்து பாறாங்கல்லைப் போட்டுள்ளனர். இதில், அவரின் முகப் பகுதி நசுங்கியது. ரத்தம் பீறிட்டு வெளியேறியதால் கோவிந்தராஜ் துடிதுடித்துப்போனார். கோபம் அடங்காத மனைவி கல்யாணியும், அவரின் காதலனும் அதே பாறாங்கல்லை எடுத்து உடம்பின் மீது போட்டுள்ளனர். சிறிது நேரத்தில் கோவிந்தராஜ் உயிரிழந்தார். இதையடுத்து, அறை முழுவதும் தேங்கி உறைந்துபோன ரத்தக்கறையை இருவரும் சேர்ந்து சுத்தப்படுத்தியுள்ளனர். கோவிந்தராஜ் தற்கொலை செய்துகொண்டதாக அனைவரையும் நம்ப வைப்பதற்காக அவர் இறந்த பின்னரும் கத்தியால் கொடூரமாகக் கழுத்தை அறுத்துள்ளனர்.

உடலைத் துணியால் சுற்றி வைத்துவிட்டு அழுவதற்கு ரெடியாக அமர்ந்திருந்த கல்யாணி விடிந்ததும் கத்தி கூச்சலிட்டிருக்கிறார். அந்தப் பகுதியில் வசிக்கும் மகள், மருமகனுக்குத் தகவல் தெரிவித்துவிட்டு உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டு வந்திருக்கிறார். கல்யாணியின் நாடகம் உறவினர்களிடம் எடுபடவில்லை. வசமாக சிக்கிக்கொண்டது விசாரணையில் தெரியவந்தது’’ என்றனர். இதையடுத்து, கொலை வழக்காகப் பதிவு செய்த போலீஸார் மனைவி கல்யாணியையும், அவரின் காதலன் நித்தியானந்தத்தையும் கைதுசெய்துள்ளனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு