Published:Updated:

`பேய் பிடித்துவிட்டது, ஆத்தா இறங்கிவிட்டாள்!’ - மனைவியின் மூடநம்பிக்கையால் கணவனுக்கு நேர்ந்த சோகம்

கொலை
கொலை ( மாதிரிப் படம் )

மதுப்பழக்கத்துக்கு அடிமையான கணவனை மனைவியே அடித்துக் கொலை செய்த சம்பவம் புதுச்சேரி மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

புதுச்சேரி, வில்லியனூர் பகுதியைச் சேர்ந்தவர் கட்டடத் தொழிலாளி மஞ்சுநாதன், வயது 49. பெங்களூருவைச் சேர்ந்த இவர், 20 வருடங்களுக்கு முன்பு வேலைக்காக புதுச்சேரி வந்திருக்கிறார். அப்போது வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த பிரதாப் என்பவருடன் நட்பு ஏற்பட்டிருக்கிறது.

கொலை செய்யப்பட்ட மஞ்சுநாதன்
கொலை செய்யப்பட்ட மஞ்சுநாதன்

அந்த நட்பின் அடிப்படையில் பிரதாப் தனது சகோதரியான சத்யாவை மஞ்சுநாதனுக்குத் திருமணம் செய்து வைத்திருக்கிறார். இந்தத் தம்பதியருக்கு 18 மற்றும் 16 வயதில் இருபெண் பிள்ளைகளும், 14 வயதில் ஒரு மகனும் உள்ளனர். மதுப் பழக்கத்துக்கு அடிமையான மஞ்சுநாதன் தினமும் மது குடித்துவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார். அதனால் கணவன் மனைவிக்கு இடையேயான சண்டை அன்றாட நிகழ்வாகியிருக்கிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் மஞ்சுநாதன் திடீரென மயக்கம் போட்டு விழுந்துவிட்டதாக அவரது மனைவியும், மகள்களும் கூச்சலிட்டிருக்கிறார்கள். அதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மஞ்சுநாதனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மஞ்சுநாதன்
மஞ்சுநாதன்

அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கெனவே மஞ்சுநாதன் இறந்துவிட்டதாகக் கூறியதுடன், தலையில் பலமாக அடிபட்டிருப்பதுதான் அதற்குக் காரணம் என்றும் தெரிவித்திருக்கிறார்கள். அதையடுத்து மஞ்சுநாதனின் மனைவி சத்யாவிடம் போலீஸ் மேற்கொண்ட விசாரணை உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது.

காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில், பெங்களூரைச் சேர்ந்த மஞ்சுநாதன், புதுச்சேரியைச் சேர்ந்த சத்யாவைக் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து அவருடன் வில்லியனூரை அடுத்த கூடப்பாக்கத்தில் வசித்து வந்திருக்கிறார். கட்டடத் தொழிலாளியான அவர், வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போது மது அருந்திவிட்டு வருவதை வழக்கமாக்கியிருக்கிறார்.

சில நேரங்களில் வழக்கத்துக்கு மாறாக அவரிடம் நிலவும் அமைதி மற்றும் அளவுக்கதிகமான கோபத்தின் காரணத்தால் அவருக்கு பேய் பிடித்துவிட்டது என்று நினைத்திருக்கிறார் மனைவி சத்யா. அதனால் அவ்வப்போது மஞ்சுநாதனை கோயில் பூசாரிகளிடம் அழைத்துச் சென்று விசேஷ பூஜைகள் செய்து, மந்திரித்து அழைத்து வருவதை வழக்கமாக்கியிருக்கிறார்.

சம்பவம் நடந்த மஞ்சுநாதனின் வீடு
சம்பவம் நடந்த மஞ்சுநாதனின் வீடு

புதுச்சேரியில் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் அனைத்துக் கடைகளுடன் மதுபானக் கடைகளும் மூடப்பட்டு இருந்துள்ளன. அதனால் மஞ்சுநாதன் அப்செட்டில் இருந்த நிலையில்தான், சம்பவத்தன்று காலையில் அவருக்கும், அவரது மனைவி சத்யாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

மஞ்சுநாதனுக்கு மறுபடியும் பேய் பிடித்துவிட்டது என்று நினைத்த சத்யா, 144 தடையுத்தரவு அமலில் இருப்பதால் பூசாரிகளிடம் செல்லாமல் நாமே பேய் ஓட்டிவிடலாம் என்று முடிவெடுத்திருக்கிறார். அதனால் மஞ்சுநாதனின் கைகளைக் கயிற்றால் கட்டிவிட்டு, பூஜையறையில் சாமி கும்பிட்டுவிட்டு தனக்குத் தெரிந்த மந்திரங்களைக் கூறி வேப்பிலையைக் கொண்டு மந்திரித்திருக்கிறார். ஆனால் மஞ்சுநாதன் கயிற்றை அவிழ்த்துவிட்டு, கட்டையை எடுத்துக்கொண்டு அனைவரையும் அடிக்கப் பாய்ந்திருக்கிறார்.

கொலை
கொலை

அப்போது திடீரென சாமி வந்ததைப் போல ஆக்ரோஷமான சத்யா, அந்தக் கட்டையைப் பிடுங்கி மஞ்சுநாதனை சரமாரியாகத் தாக்கியிருக்கிறார். அதில் அவர் மயங்கி விழுந்ததும் அவரது காதிலிருந்து ரத்தம் வழிந்திருக்கிறது.

அதையடுத்து அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்று கூறுகிறது காவல்துறை தரப்பு. இதுகுறித்து சத்யா போலீஸிடம், ”அவருக்குப் பேய் பிடித்துவிட்டது. அந்த நேரத்தில் என் மீது ஆத்தா இறங்கிவிட்டாள். அதனால் அப்போது நடந்த எதுவும் எனக்கு நினைவில் இல்லை” என்று கூறியிருக்கிறார். இதனையயடுத்து சத்யாவைக் கைது செய்த போலீஸ், அவரை காலாப்பட்டு மத்தியச் சிறைக்கு அனுப்பி வைத்தது.

அடுத்த கட்டுரைக்கு